மக்கள் சிந்தனைக்கு...
'நீட்' தொடர்பான தமிழ்நாடு அரசின் உயர்நிலை குழுவுக்கு
திராவிடர் கழகத்தின் சார்பில் 21.6.2021 அன்று அளிக்கப்பட்ட கருத்துரு
5. நுழைவுத் தேர்வில் தவறே நடக்காதா?
நுழைவுத் தேர்வில் தவறே நடக்க இடம் இல்லை என்பதும் உண்மைக்கு மாறானது.
மருத்துவ முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 45 மருத்துவர்கள் உள்பட 52 பேர் மீது சி.பி.அய். வழக்கு தொடர்ந்ததா? இல்லையா?
இது குறித்து 21.3.2007 தேதியிட்ட 'தினமணி' நாளிதழ் தரும் செய்தி:
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 45 மருத் துவர்கள் உட்பட 52 பேருக்கு குற்றப் பத்திரிகையின் நகல் களை சென்னை சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு நடந்தது. தமிழ்நாட்டிலிருந்து நான்காயிரத்து 188 பேர் தேர்வு எழுதினர். நுழைவுத் தேர்வின் போது முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
கேள்வித் தாளை பென் ஸ்கேனர் மூலம் அனுப்பி எஸ்.எம்.எஸ். மூலம் விடைகளைப் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவத்தில் மருத்துவர் பிரதீப் குமார் உள்ளிட்ட 45 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 52 பேர் மீது சென்னை சி.பி.அய், சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு சி.பி.அய் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேலு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல்கள் வழங்கப்பட்டன. ஏப்ரல் 10ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. (‘தினமணி' -21.3.2007)
இதிலிருந்து என்ன தெரிகிறது? தகுதி திறமையை நுழைவுத் தேர்வு சரியாக நிலை நிறுத்தும் என்று நம்புவது தப்பு என்பதல்லவா?
6. நீட் நுழைவுத்தேர்வு அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான பொதுத் தேர்வு. ஒன்றிய அரசின் மருத்துவக் கல்லூரிகளிலும் இதன் மூலம் ஒற்றைத் தேர்வில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டே, அதை ஏன் எதிர்க்க வேண்டும்?
இதில் முழு உண்மை இல்லை.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, சண்டிகரில் உள்ள பி.ஜி.அய். மற்றும் இராணுவக் கல்லூரிகள் போன்ற கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு பொருந்தாது. அப்படியென்றால், நீட் என்பது தகுதி குறைந்த நுழைவுத் தேர்வா? எல்லோருக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு என்று பசப்புவோர் ஏன் மேற்கண்ட சில கல்லூரிகளுக்கு மட்டும் தனியாக நுழைவுத் தேர்வு வைக்கின்றனர். ஏனெனில், அனைவருக்கும் பொது என்பதில் நீட் ஆதரவாளர்களுக்கு உடன்பாடில்லை. ஆக, பொதுவான நுழைவுத் தேர்வு என்பது ஏமாற்று வித்தையே!
7. நீட் உண்மையில் தகுதியானவர்களுக்கு மட்டும் வாய்ப்பை உருவாக்குமா? நன்றாகப் படிக்கக் கூடிய மாணவனை விட, பணம் இருப்பவர் கல்வி பெறலாம் என்ற நிலையை மாற்றுமா?
நீட் (National Eligibility cum Entrance Test) என்பது நுழைவுத் தேர்வு மட்டுமல்ல, தகுதித் தேர்வும் ஆகும். இன்னும் சரியாகச் சொன்னால், இது போட்டித் தேர்வல்ல, தகுதித் தேர்வு. அதாவது இந்திய அளவில் 10000 மருத்துவக் கல்வி இடங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீட் தேர்வில் முதல் 10000 இடங்களைப் பெற்றவர்களுக்குத் தான் சீட் என்றால் அது போட்டித் தேர்வு. ஆனால், நீட் தேர்வில் 50% மார்க் எடுத்தால் நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். அதை வைத்துக் கொண்டு நீங்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கிக் கொள்ளலாம் என்றால் என்ன பொருள்? தனியார் கல்லூரிகளில் 'சீட்' வியாபாரம் நடக்க வசதி செய்து தரப்படுகிறது என்று பொருள். அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடும் 96 மதிப்பெண்களோடு முடிந்துவிட்டால், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் நுழைவுத் தேர்வில் 95 மதிப்பெண் பெற்ற மாணவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, 50% மதிப்பெண் பெற்ற மாணவன் தனியார் கல்லூரியில் பணம் கொடுத்து இடம் வாங்குவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தவே தகுதி (Eligibility) என்ற சொல்லைச் சேர்த்திருக்கிறார்களே தவிர, அவர்கள் சொல்லும் உயர் மதிப்பெண் பெற்று தகுதியுடையோருக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்பதற்காக அல்ல.
8. மாநில உரிமையைப் பறிக்கலாமா?
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு என்பதே அறவே இல்லாதபோது, அதற்கான ஒரு தனிச் சட்டமும், நீதிமன்றத் தீர்ப்பும் இருக்கும்போது ஒன்றிய அரசு மாநில உரிமையில் அத்துமீறி நுழையலாமா? இது மாநில உரிமையில் தலையிடும் ஆதிக்க எண்ணமும், அக்கிரமமும் என்பதோடு மாநில சுயாட்சிக்கும், உரிமைக்கும் எதிரானது அல்லவா?
நெருக்கடி நிலை காலத்தில் 1976 இல் கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்ற அபகரிப்பால், இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றுதானே மாநில அரசுகள் கருத முடியும். மறுபடியும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு செல்வதுதானே ஒரே தீர்வு!
(தொடரும்)
No comments:
Post a Comment