திராவிட மாடல் ஆட்சிக்கு ஆளுநர்மூலம் இடையூறு; அந்த சூழ்ச்சியை மக்களுக்கு விளக்குவதுதான் எங்கள் பணி!
திருப்பூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
திருப்பூர், ஏப்.19 பிரச்சார பெரும் பயணத்திற்கு - கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நல்ல அளவிற்கு வரவேற்பு கொடுக்கிறார்கள்; 'திராவிட மாடல்' ஆட்சிக்கு ஆளுநர் மூலம் இடையூறு; அந்த சூழ்ச்சியை மக்களுக்கு விளக் குவதுதான் எங்கள் பணி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
நீட் எதிர்ப்பு, புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் பறிப்பு எதிர்ப்புப் பிரச்சார பயணக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருப்பூருக்குச் சென்ற (18.4.2022) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியா ளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அவ்விவரம் வருமாறு:
கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களும் நல்ல அளவிற்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் எங்களுக்கு!
நாகர்கோவிலில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய எங்களுடைய பிரச்சாரப் பெரும்பயண நிகழ்ச்சியில், இன்றைக்கு 29ஆவது கூட்டம் நடைபெறுகிறது. எல்லா இடங்களிலும் நீட் தேர்விற்கு எதிரான உணர்வுகளும், புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால், அனைவரும் படிக்கக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்ற அந்த சூழ்ச்சிப் பொறியைப்பற்றியும், அதேபோல, மாநில உரிமைகளை ஆளுநர் மூலமாகப் பறிப்பது என்ற அளவில் வைத்திருக்கின்ற ஒன்றிய அரசினுடைய வஞ்சகத்தையும் எடுத்துச் சொல்லக்கூடிய அள விற்கு, மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சாரத்தை திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் முன் னெடுத்தாலும், அத்தனை மக்களும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களும், கூட்டணிக் கட்சிக்காரர்களும் நல்ல அளவிற்கு வரவேற்பு கொடுக்கிறார்கள்.
சென்னையில் 25 ஆம் தேதி நிறைவு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார்
இன்னும் 6 மாவட்டத் தலைநகரங்களில் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய இடங்களில் எங்களுடைய பிரச்சாரக் கூட்டங்களை முடித்துவிட்டு, 25 ஆம் தேதி மாலை சென்னையில், நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரச்சாரப் பயண நிறைவு விழாவில் பங் கேற்று நிறைவுரையாற்றுகிறார்.
மக்களுக்கு விளக்குவது எங்களுடைய பணியாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியான திராவிட மாடல் ஆட்சிக்கு இடையூறு விளைவிப்பதுபோன்றோ அல்லது இந்த ஆட்சியினுடைய சிறப்புகள், சாதனைகள் தொடரக்கூடாது என்பதற்கோ திட்டமிட்டு ஆளுநர் மூலமாக நடந்துகொண்டிருக்கின்ற சூழ்ச்சிகள் எவை என்பதை மக்களுக்கு விளக்குவது எங்களுடைய பணி யாகும்.
நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழ்நாடு மசோதாவை இன்னமும் தமிழ்நாடு ஆளுநர், குடிய ரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்வது சரியானதல்ல.
குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டியது என்பது அரசமைப்புச் சட்டப்படி ஆளுநருக்கு உள்ள கடமை.
எனவேதான், ஆளுநருக்கும் - நமக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அழகாக முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.
ஆகவே, இது சமுதாயப் பிரச்சினை- மக்கள் பிரச்சினையாகும். எனவேதான், அதன்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையானால், ஒரு பெரும் போராட்டத்தினை தமிழ்நாட்டுக் களம் சந்திக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மக்கள் ஆயத்தத்தோடும், ஆவேசத்தோடும் இருக்கிறார்கள் என்பதை ஆங்காங்கே கூட்டங்களில் திரண்ட மக்கள் மூலமாகத் தெரிந்துகொண்டிருக்கின்றோம். இதுதான் எதார்த்த நிலையாகும்.
ஒன்றிய அரசு: காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு
ஒரு நிலை - தமிழர்களுக்கு ஒரு நிலையா?
செய்தியாளர்: இலங்கையில் தமிழர்கள் புறக்கணிக் கப்படுகிறார்கள்; தொடர்ந்து உணவுப் பற்றாக்குறையால் தமிழர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: தமிழர்களை அழித்த ஓர் ஆட்சிதான் மீண்டும் இலங்கையில் வந்திருக்கிறது. அந்த ஆட்சித் தலைவர்கள்தான் - இனப்படுகொலை செய்தவர்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக் கிறார்கள்.
உலகளவிலே குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அய்.நா. அவையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.
அவர்கள் செய்த வேலை, இன்றைக்கு அவர் களையே பாதிக்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறது. இன்றைக்கு சிங்களவர்கள்கூட அவர்களை எதிர்க் கக்கூடிய அளவில் நிலைமை வந்திருக்கிறது. பாது காப்பான இடம் எங்கே என்று அவர்களும் தேடிக் கொண்டிருக்கும் ஒரு நிலைதான்.
இலங்கை ஆட்சியாளர்கள், தமிழர்களை அவர்கள் வதைப்பது என்பது அதிசயமானதும் அல்ல; முதல் முறையும் அல்ல.
இலங்கையில் உள்ள தமிழர்களைப் பொறுத்தவரை யில், பாதுகாப்பான வாழ்க்கையைத் தொடரவேண்டும் என்பதற்காக, அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகின்ற நேரத்தில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், உட னடியாக தஞ்சமளித்ததோடு அல்லாமல், பிரதமரை சந்தித்த நேரத்திலும் இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.
''இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மருந்து உள்பட மற்ற உதவிகளை நாங்கள் செய்யவேண்டும்; அதற்கு நீங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று கேட்டி ருந்தார். அதற்கு என்ன பதில் கிடைத்தது என்று தெரியவில்லை.
அந்த வகையிலே மனிதாபிமானத்தோடு, சிங்களர் - தமிழர்கள் பிரச்சினைகளையெல்லாம் நாங்கள் மறந்து விட்டு, பொதுவாக மனிதாபிமானத்தை காட்டுகிறோம். அந்த மனிதாபிமானம் அவர்களுக்குக் கிடையாது.
அதேநேரத்தில், காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக கவலைப்படுகிற ஒன்றிய அரசு, தமிழர்களுக்காக, தொப்புட்கொடி உறவுள்ள எங்கள் தமிழர்களுக்காக வும் கவலைப்படவேண்டும். அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், மனிதாபிமான அடிப்படையில்.
கருப்பு திராவிடன் என்று சொன்னால் மட்டும் போதாது; கொள்கையில் அது வரவேண்டும்!
செய்தியாளர்: தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை அவர்கள், 'நான் ஒரு கருப்பு திராவிடன்' - இளையராஜா அவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: பரவாயில்லையே! இவ்வளவு காலத்திற்குப் பிறகாவது அவர் 'கருப்பு திராவிடன்' என்று உணர்ந்தாரே!
கருப்பு திராவிடர்கள் என்பது தோலைப் பார்த்து அடையாளப்படுத்துவதல்ல- அவர் தோளை நிமிர்த்த வேண்டும்.
ஏனென்றால், முழுக்க முழுக்க அவர் இன்றைக்கு நீட் தேர்வு, மாநில உரிமைகள் பறிப்பு, புதிய தேசிய கல்விக் கொள்கை - நவீன குலக்கல்வித் திட்டம் இவற்றிற்கெல்லாம் துணை போய்விட்டு, நான் கருப்பு திராவிடன் என்கிறார்; கருப்பு திராவிடன் என்று சொன்னால் மட்டும் போதாது, கொள்கையில் அது வரவேண்டும்.
யாரையோ பயன்படுத்தி, கட்சியை வளர்க்கலாம் என்று நினைக்கக் கூடாது.
ஆகவே, 'கருப்பு திராவிடன்' என்று அவர் நமக்காக சொல்லவில்லை; அங்கே கட்சிக்குள்ளே இருக்கின்ற பிரச்சினைக்கு அவர் பதில் சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை அனுப்பினால் போதும்!
செய்தியாளர்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க பயணம் சென்றிருக்கிறாரே, அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: ஒன்றிய நிதியமைச்சர் அமெ ரிக்காவோ வெளிநாடுகளுக்கோ போகலாம்; அவர் களுக்கு அதில் உரிமை இருக்கிறது.
முதலாவதாக, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலு வைத் தொகையை அனுப்பினால் போதும்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

No comments:
Post a Comment