இம்மாதத்தில்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நாகர்கோயிலில் தொடங்கி சென்னை வரை 21 நாட்கள் ஒரு சூறாவளிப் பிரச்சாரப் பெரும் பயணம் - திராவிடர் கழகம் சார்பில்!
சூரியன் சுட்டெரிக்கும் காலத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 225 கி.மீ. பயணங்கள் - கடந்து வந்த தொலைவோ 4700 கி.மீ.,
உதயசூரியன் பிற்போக்குச் சக்திகளைச் சுட்டெரிக்கிறது ஒரு பக்கத்தில் - அந்த உதயசூரியனின் சாதனைகளை நாடெங்கும் - வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு கழகப் பிரச்சாரப் பெரும் பயணத்தை வரும் 25ஆம் தேதியன்று வெற்றிகரமாக சென்னையில் நிறைவு செய்கிறார்.
இதில் மேலும் பொருத்தமானது ஆட்சி உதயசூரியனாம் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் நிறைவுப் பெருவிழாவில் (25.4.2022 மாலை) பெரியார் திடலில் பங்கேற்பது - வரலாற்று ஏட்டில் சிறப்பாகப் பேசப்படும் வைர வரிகளாகும்.
கழகத் தலைவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பெரும் பயணத்தில் 30க்கும் மேற்பட்ட கருஞ்சட்டைத் தோழர்கள் அணி வகுத்து, அனைத்து ஆக்கப் பூர்வமான முன்னேற்பாடுகளையும் முறையே செய்து பெரும் பயணத்தை நேர்த்தி செய்து வருகின்றனர்.
பொதுக் கூட்டங்களில் பெருந்திரள் மக்கள் ஒருபுறம் - அனைத்துக் கட்சி முன்னணியினரும் மேடைக்கு வந்து தலைவருக்குச் சால்வைகள் போர்த்தியும் - நன் கொடைகள் நல்கியும் தங்களுடைய நல் உள்ளத்தை ஆதரவுப் பெருக்காக வெளிப்படுத்தினர்.
கூட்டம் முடிந்து தங்கும் அறைக்குச் சென்றாலோ அங்கும் பிரமுகர்களும், திராவிட இயக்க ஆர்வலர்களும் முற்றுகையிட்டு தங்கள் அன்பின் முத்தத்தைப் பொழிந் தனர்.
ஓய்வு என்பது 'துரு' என்ற இதயங் கொண்ட இயக் கத்தின் தலைவர் அல்லவா! 95 வயதிலும் மூத்திர வாளியைச் சுமந்துகொண்டு பூமிப் பந்தைச் சுற்றி வந்த தலைவர் பெரியாரின் தலைமைச் சீடரல்லவா - அவரால் அடையாளம் காட்டப்பட்ட அப்பழுக்கற்ற மாமணி யல்லவா!
எந்த எதிர்பார்ப்புமின்றி சொந்த உழைப்பில், செலவில் இயக்கத்திற்கு உழைக்கும் கருஞ்சட்டைத் தோழர்கள் இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு (கரோனா காரணமாக) நம் ஊருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வருகிறார் என்ற உற்சாகத்தில் குதித்து குதூகலித்து நிகழ்ச்சிகளை நிரல்படுத்தினர். அவர்களையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
'நீட்' எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு என்ற மூன்று முத்தான பிரச் சினைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட பெரும் பயணம் இது.
89 வயதில் இவரால் முடிகிறது என்றால், அதன் பொருள் - அவர் இதயத்தில் கொழுந்துவிட்டு எரியும் தந்தை பெரியார் ஊட்டிச் சென்ற - ஏற்றிச் சென்ற அணையா ஒளியின் உந்துதலே இதற்குக் காரணம்.
நிறைவு விழாவில் திராவிட இயக்கப் போர்வாள் மானமிகு வைகோவின் போர்க் குரலும் ஒலிக்க இருக்கிறது.
வாருங்கள் -தோழர்களே வாருங்கள்! கோடை வெயிலில் கொள்கைக் குடைபிடித்துப் பயணித்து வரும் தலைவரையும், கருஞ்சட்டைத் தோழர்களையும் வரவேற்போம் - வரவேற்போம்!
அத்துடன் முடிந்ததா இந்த ஏப்ரல், 2022?
25ஆம் தேதிக்குப் பின் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் (29.4.2022 காலை 10 மணி).
30ஆம் தேதி முற்பகல் மாநில இளைஞரணி கலந் துரையாடல். பிற்பகல் என்ன தெரியுமா? தார்ச் சட்டியுடனும், பிரஷுடனும் புறப்படுகிறார் தலைவர் - எங்கே தெரியுமா? சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு - எதற்குத் தெரியுமா? இந்திதான் இந்திய பொது மொழி என்று எகத்தாளம் பேசுகிறது பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசு. அவர்களுக்குத் தந்தை பெரியார்தம் திராவிட மண்ணின் கந்தகத் தன்மையை உணர்த்திட எழும்பூர் இரயில் நிலைய பெயர்ப் பலகையில் உள்ள இந்தியை அழிக்க!
இது ஒன்றும் நமக்குப் புதிய போராட்டம் அல்லதான் - என்றாலும் இந்தக் கால கட்டத்தில் தேவையான இலட்சியப் போராட்டம்.
புறப்படுக! புறப்படுக! புதிய புறநானூற்றைப் படைப் போம்! படைப்போம்!!
மே முதல் தேதியன்று மாநில மாணவர் கழக கூட்டம் - அப்பப்பா எத்தனை எத்தனை நிகழ்ச்சி குவியல்!
No comments:
Post a Comment