ஜி.என். டேவி
[ஆங்கில மொழியின் இடத்தில் ஹிந்தி மொழியை மாற்றி அமைப்பதற்கான முயற்சியின் உண்மையான நோக்கமோ, 2024-ஆம் ஆண்டில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதுதான்.]
புகழ் பெற்ற தமிழ்மொழி இலக்கண நூலான தொல் காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர், இலக்கிய சொற்களை லிராகோல் (Lyarcol), திரிசொல் (Thiriccol)), திசைச் சொல்(Thisaiccol) வடசொல் (Vadasol) என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்று கூறி உள்ளார். தங்களது வடமொழி ஒலி கொண்ட வரி வடிவங்களைக் கைவிடும்போது- அவற்றில் உள்ள வடமொழி சொற் களை பயன்படுத்து வதற்குத் தகுதியான மொழியாக தமிழ்மொழி மட்டுமே இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.
பண்டைய காலம் தொட்டு, மொழியில் உள்ள வேறுபாடு, திராவிடப் பண்பாட்டுக்கும் சுய கவுரவத் துக்கும் ஒரு மய்யக் கருவாகவும் உணர்ச்சி மிகுந்த தாகவும் இருந்து வந்துள்ளது. அத்தகையதொரு உணர்வு பண்டைய காலத்தில் பிராகிருத மொழியை பேசியவர்களிடையேயும் இருந்தது. கி.மு.6ஆம் நூற்றாண்டில் தனதுபோதனைகளை மகாவீரர் வெளிப் படுத்திய மொழிகளில் பிராகிருதமும் ஒன்றாக இருந்தது. அதற்குப் பிறகு 18 நூற்றாண்டுகள் கடந்த பின் மிக முக்கியமான ஜைன மத பேரறிஞரும், புலவரும், கணிதஇயலாளரும், தத்துவ ஞானியுமான ஆச்சார்ய ஹேமசந்திரா, அவரது காலத்தில் சமஸ்கிருத மொழி சொற்களைவிட குஜராத் மொழி சொற்களே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதைப் பற்றி முக்கியத்துவம் அளித்து எழுதப்பட்ட 'தேசி நாமலாலா' என்ற ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். இந்த முயற்சியில் குஜராத் மொழிக்கு ஒரு நிலையான வடிவத்தை அவர் அளித்தார்.
மகாத்மா காந்தி 1909இல் எழுதிய "ஹிந்து சுயராஜ்யத்தில் இந்தியா" என்ற நூலில் இந்தியாவுக்கான சுய நிர்ணயம் பற்றி விளக்கும்போது சிறந்த அடையாளம் பெற்ற அந்த நூலை குஜராத் மொழியிலேயே எழு துவது என்று தேர்ந்தெடுத்தார். எனவே, ஒவ்வொரு இந்திய மொழியையும் பொறுத்த அளவில், சுய ஆளுமை என்ற மொழி உணர்வு ஓர் முக்கியமான அம்சமாகவே இருந்து வந்துள்ளது.
அரசமைப்பு சட்டத்தில் உள்ள தெளிவு
2000 ஆண்டு பழைமை வாய்ந்த தொல் காப்பியத்தையோ 900 ஆண்டு பழைமையான 'தேசிநாமலாலா' வையோ சம கால இந்தியர்கள் படித்து அறிந்திருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றதாக இருக்கலாம். ஆனால் இந்தியக் குடியரசு 70 ஆண்டுகளாகப் பின் பற்றி வரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒவ்வொரு இந்தியரும் படித்து அறிந்திருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றதாக இருக்காது. இந்திய அரசமைப்புச் சட்டம் இரண்டு விடயங்களை மிக மிக தெளிவாக கூறுகிறது. முதலா வது இந்தியா ஒரு மாநிலங்களின் ஒன்றியம் என்பது. மாநிலங் களுக்கு இடையேயான கடிதப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப் படும் ஆட்சி மொழி, தனது புதிய அரசமைப்பு சட்டத்தை இந்தியா ஏற்றுக் கொண்டபோது பயன் படுத்தப்பட்ட மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்பது இரண் டாவது. ஆட்சி மொழியாக ஆங்கி லத்துக்கு மாற்றாக இந்தியை மாற்றியமைப்பது என்பது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மாநிலங்கள் விரும்பி இருக்க வேண்டும் என்றுதான் மொழி தொடர்புடைய அரசமைப்பு சட்டப் பிரிவுகள் எந்த வித குழப்பமும் இன்றி மிகத் தெளிவாக கூறியுள்ளன. 20 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தும் 10 மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்ட ஒரு குழு மொழி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மொழிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நியமிக்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு சட்ட 344(4) ஆவது பிரிவு கூறுகிறது.
அரசமைப்பு சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள்
மொழி என்ற பொருள் இரண்டு அமைச்சகங்களுக்கு இடையே (மனிதவள மேம்பாடு, உள்துறை) பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கும் நடைமுறையால் மேலும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. மொழியைப் பொறுத்த வரை மனித வள மேம்பாட்டுத் துறையின் நோக்கம் கல்வி மற்றும் கலாச்சார மேம்பாடு என்பதும் உள்துறையின் நோக்கம் ஒன்றிய அரசுடனான மாநில அரசுகளின் உறவுகளைப் பாதுகாப்பதும், மொழி சிறு பான்மையினரின் மொழி உரிமைகளை பாதுகாப்பதும், இந்தி மொழியை மேம்படுத்துவதும் ஆகும். இவற்றில் இந்தி மொழியை மேம்படுத்துவது என்ற நோக்கத்தை எட்டும் முயற்சியில் இதர இந்திய மொழிகளின் மேம்பாட்டில் குறுக்கிடக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.
மொழியின் வளர்ச்சிக் குறைவு பற்றிய புள்ளி விவரங்கள் அரசமைப்பு சட்ட விதிகளின் வெளிச்சத்தில் நன்றாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிகவும் சிக்கல் நிறைந்த இரண்டு கேள்விகள் - உள்துறை அமைச்சகம் மற்றும் அதன் இந்தி மொழிக் குழுவிடமும் கேட்கப்பட வேண்டியுள்ளன. "கடந்த 70 ஆண்டு காலத்தில் இந்தி மொழி ஏதேனும் வளர்ச்சியைப் பெற்றுள்ளதா? என்பதும், அப்படி ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருந்தால், பட்டியலிடப்பட்டுள்ள இதர இந்திய மொழிகளில் அது ஏதேனும் குறுக்கீட்டை செய் துள்ளதா? என்பதும்தான் அந்தக் கேள்விகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களில் இருந்து நமக்கு சொல்லப்பட இயன்ற கதை ஒன்று உள்ளது. மொத்த நாட்டின் மக்கள் தொகையில் 43.63% அளவில் உள்ள 52.83 கோடி இந்தி மொழி பேசும் மக்கள் உள்ளனர். 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இவை 36.99% அளவில் உள்ள 20.27 கோடி இந்தி பேசும் மக்கள் இருந்தனர். 2001-2011க்கும் இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப ஏற்பட்ட இந்தி பேசும் மக்கள் தொகையின் வளர்ச்சி 2.6% ஆக உள்ளது.
அதிக அளவில் மக்கள் பேசும் இரண்டாவது மொழியாக வங்காள மொழி உள்ளது. முதல் மொழியாக இருக்கும் இந்தி மொழி எதிர்மறை வளர்ச்சி பெற்றுள்ளது. 1991இல் 8.30% மக்களும், 2001இல் 8.11% மக்களும் 2011இல் 8.03% மக்களும் இந்தி மொழி பேசுபவர்களாக இருந்தனர். 1991இல் 7.87% ஆக இருந்த தெலுங்கு மொழி பேசுபவர்கள் 2001இல் 7.19% ஆகவும் 2011இல் 6.7% ஆகவும் குறைந்து இருந்தனர் என்ற எதிர்மறை வளர்ச்சி பற்றிய ஒரு கதையை அது நமக்குக் கூறுகிறது. மராட்டிய மொழியிலும் இத்தகைய எதிர்மறை வளர்ச்சிதான் இருந்தது. 1991இல் 7.45% ஆக இருந்த மராட்டிய மொழி பேசும் மக்கள் 2001இல் 6.99% ஆகவும் 2011இல் 6.86% ஆகவும் குறைந்து போயுள்ளனர். தற் போதும் சிறப்பான செயல்பாட்டில் உள்ள இந்தியாவின் தொன்மையான மொழியான தமிழ் மொழிக்கு உள்துறை அமைச்சகம் குறைந்த அளவிலான கவனத்தையாவது செலுத்தி இருந்து இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் வங்காள, தெலுங்கு மற்றும் மராட்டிய மொழிகளைப் போலவே தமிழ் மொழியும் வளர்ச்சி அடையாமல் இருந்து வந்துள்ளது. 1991இல் ஒட்டு மொத்த மக்களில் 6.32% மக்கள் தமிழ்மொழி பேசுபவர்களாக இருந்தது. 2001இல் 5.91% ஆகவும் 2011இல் 5.70% ஆகவும் குறைந்து போனது. 10 ஆண்டுகளில் வளர்ச்சியைக் காட்டிய ஒரே பெரிய மொழி குஜராத் மொழிதான். இன்னமும் பட்டியலிடப் படாத சிறிய மொழிகளில் நல்ல வளர்ச்சியைக் காட்டும் ஒரே மொழி சமஸ்கிருதம்தான். 2021 மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும்போது நாட்டின் பல்வேறு மொழி களைப் பேசும் மக்கள் தொகையும் கணக்கெடுக்கப்படும். இந்தி, சமஸ்கிருதம், குஜராத் மொழிகள் நீங்கலாக அரசமைப்பு சட்ட 8ஆவது பட்டியலில் காணப்படும் அனைத்து இந்திய மொழிகளும் எதிர்மறை வளர்ச் சியைத்தான் அடையும் என்பதற்கான காரணங்கள் மிக வெளிப்படையாகவே தெரிபவை ஆகும். இந்த சூழ்நிலையில் இந்திய மொழிகளின் மேம்பாட்டுக்கான குழு, இந்தியைத் தவிர்த்த ஏனைய இந்திய மொழிகளின் வளர்ச்சி குறைந்து போயிருப்பது பற்றியும் 19ஆம் நூற்றாண்டு முதல் பேச்சு வழக்கொழிந்து போன சமஸ்கிருதமொழி வளர்ச்சி அடையாமல் இருந்தது பற்றியும் தனது கவலையை தெரிவித்திருந்து இருக்க வேண்டும்.
இந்தி வளர்ச்சி - ஒரு கதையைவிட
ஆர்வம் அளிப்பதாக உள்ளது
மற்ற அனைத்து இந்திய மொழிகளும் வீழ்ச்சியைக் காட்டும்போது, இந்தி மொழி மட்டும் எதனால் உறுதியான வளர்ச்சியைக் காட்டுகிறது? 2011இல் பதிவு செய்தபடி இந்தி பேசும் மக்களில் 52.83 கோடி மக்களில் இந்தி மொழி பேசும் மக்கள் மட்டுமே சேர்க்கப்பட வில்லை. 50-க்கும் மேற்பட்ட இதர மொழிகள் பேசும் மக்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். 5 கோடி மக்களுக்கு மேல் பேசுகின்றனர் என்று கூறப்படும் போஜ்புரி மொழியின் மிகைப்பட்ட வளர்ச்சி அதன் சினிமா, இலக்கிய, செய்தித்தாள்கள், பாடல்கள், நாடக மற்றும் வெளியீட்டுத் துறைகளின் வளர்ச்சியில் இருந்து தெரிகிறது. இம்மொழி பேசும் மக்கள் இந்தி மொழி பேசுபவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பேசப்படும் மொழிகளில் பெரும்பாலானவை இந்தி மொழி வட்டத்துக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. முக்கியமான மகாராட்டிர மாநிலத்திலும் மத்திய பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளிலும் பேசப்படும் பவாரி மொழி, இந்தி மொழியின் ஒரு பிரிவாகக் காட்டப்படுகிறது. பவாரி மொழி பேசுபவர்கள் இந்தி மொழியை ஓர் அறிவார்ந்த மொழியாகக் கருதுவதில்லை என்ற உண்மை புறக்கணிக்கப்படுகிறது.
இவ்வாறு இந்தி மொழியின் வளர்ச்சிக் கதை நம்பவே இயலாத புனை கதை போன்று இருந்தது. இத்தகைய இதர மொழிகளை எல்லாம் இந்தி மொழியின்கீழ் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்காமல் இருந்திருந்தால், இந்தி மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 39 கோடி அளவில் குறைந்து போயி ருக்கும். அது 2011இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் 32%க்கும் சற்று குறைவாகவே இருந்திருக்கும் பட்டியலிடப்பட்ட இதர இந்திய மொழிகளிலிருந்து இந்தி மொழி அதிக மாறுபாடு கொண்டதாக தோற்றம் தந்திருக்காது. இந்தி மொழி பேசும் மக்கள் தொகையின் புள்ளி விவரங்கள் மேலும் அதிக அளவில் உண்மைத் தன்மை கொண்டவையாக இருக்கச் செய்வது பற்றியும் அந்தமொழிக் குழு கட்டாயமாக கவலைப்பட்டுத்தான் இருக்க வேண்டும்.
ஆங்கிலம் பேசும் மக்களின் புள்ளி விவரங்கள் மேலும் உண்மை நிறைந்தவையாக இருந்தன. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆங்கிலம் பேசும் இந்தியர்களின் எண்ணிக்கை 2,59,67 ஆண்களும், 1,29,115 பெண்களும் ஆக மொத்தம் 3,88,793 ஆக இருந்தது. இதனைவிட மிகவும் குறைவான மக்கள் பேசும் பட்டியலிடப்பட்ட மொழி களுடன், அதாவது, மணிப்பூரி மொழி பேசும் 17.61 லட்சம் மக்கள் மற்றும் போடோ மொழி பேசும் 14.82 லட்சம் மக்களுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுபற்றி வேறு எந்த விமர்சனமும் தேவையில்லை. இத்தகைய புள்ளி விவரங்களைப்பற்றி பெருமை அடைவதற்கும் ஏதுமில்லை.
மற்ற மொழிகள் ஒளிவீசித் திகழ்கின்றன
உலகில் உள்ள எந்த ஒரு பெரிய அல்லது சிறிய மொழியினைப் போலவே இந்தியும் ஒரு அழகான மொழியாகும். இந்தி திரைப்படங்கள் இந்தியாவுக்கு ஓரளவு புகழையும் ஓரளவு வெளிநாட்டுச் செலா வணியையும் கொண்டு வந்து தந்துள்ளது. இந்தி இலக்கியமும் - வளமானது என்பதுடன் அதனைக் குறிப்பிடும்போது பெருமை உண்டாகிறது. என்றாலும் கூட எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய மொழிகளில் இந்தி மொழி இளமையான மொழிக் குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் அதே அளவில் உண்மையாக இருப்பதாகும்.
அதற்கு மாறாக, தமிழ், கன்னடம், காஷ்மீர், ஏடியா, மராத்தி, சிந்தி, நேபாளி மற்றும் அசாமிய மொழிகள் இந்தியைவிட மிக நீண்ட வரலாறு கொண்டவையாகும். ஒரு அறிவு மொழியாகவும் தமிழ், கன்னடம், வங்காளம், அதிக அளவிலான என்சைக்ளோபீடியாக்கள் மற்றும் அதிக வரலாற்று இலக்கியமும் கொண்டுள்ள மராட்டிய மொழி ஆகியவை மிக மிக எளிதாக இந்தி மொழியை ஒளியிழக்கச் செய்ய இயன்றவையாகும். ஒரு மொழியினால் மெல்ல மெல்லத்தான் வளர்ச்சி அடைய முடியுமே அன்றி அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்படுவ தால் வளர்ந்துவிடக் கட்டாயப்படுத்த முடியாது.
கூடுதலாக அரசியலும் பொருளாதாரமும்
இந்தி மொழி வரலாற்றுடன் தொடர்புடைய அனைத்துப் பேரறிவும், இந்தியாவின் பன்மொழித் தன்மையும், இந்தியாவின் கூட்டாட்சிக் கட்ட மைப்பும், பல மாநிலங்களில் உள்ள மொழியைப் பற்றிய உணர்வுப் பிரச் சினையும் இந்த மொழிக் குழுவையும், ஆட்சி மொழிக் குழுக்களையும் வழி நடத்திச் சென் றிருக்க வேண்டும் என்பதுடன் உண்மையான மொழி நிலையினை ஏற்றுக் கொள்ளவும் அவற்றை செய்திருக்க வேண்டும். திடீரென்று இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அழைப்பு விடுக்கச் செய்தது எது? ஆர்.எஸ்.எஸினால் மிகைப்படுத்தப் பட்ட இந்தி- இந்திய தேசிய கோட்பாடுதான் உள்துறை அமைச்சரை இத்தகைய நிலைப் பாட்டினை மேற்கொள்ளச் செய் வதற்கான உந்துதலாக இருந்திருக்க முடியாது. பெரும்பான்மை மத மக்களின் ஜனநாயகம் என்ற பா.ஜ.க.வின் கருத்தும் அமித்ஷாவின் உந்துதலுக்குக் காரணமாக இருந்திருக்க முடியாது. புள்ளி விவரங்கள் மிகைப் படுத்தப்பட்டதால் 2011 கணக்கெடுப்பின் படி நாட்டின் ஒட்டு மொத்த 121 கோடி மக்கள் தொகையில் இந்தி பேசும் மக்கள் தொகை 52 கோடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. என்றாலும் கூட ஒரு மொழி பெரும்பான்மையை அது ஏற்படுத்தவில்லை.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி வைத்துக் கொண்டாலும், 69 கோடி இந்திய மக்கள் இந்தி மொழி பேசாதவர்களாக இருக்கின்றனர் என்ற உண்மை மாறிப் போகவில்லை. அந்த உணர்வில் இந்தி இந்தியாவின் பெரும்பான்மை மொழியாக இருக்கவில்லை; இருக்கவும் இயலாது. இந்தி மொழி பற்றிய பெருமையை இந்தி பேசும் மக்களிடம் தூண்டி விடுவதற்கான அமித்ஷாவின் முயற்சி, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள மிக முக்கியமான பகுதிகளில் உள்ள இந்தி பேசும் இளைஞர்களை பெரிதும் துன்புறுத்திக் கொண்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு அளிக்கும் வலி நிவாரணி போன்றதாக ஒரு வேளை அவரது பேச்சின் நோக்கம் இருந்திருக்கலாம். என்றாலும்கூட நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்கு பாகிஸ்தான் ஓர் அச்சுறுத் தலாக இருக்கிறது என்றும் ஆங்கில மொழியை நாட்டின் நலனுக்கு எதிரானது என்றும் கூறிக் கொண்டு இருக்கும் அமித்ஷாவின் - இந்தி பேசும் மக்களை பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாக திரட்டுவது என்ற முயற்சி இனியும் வேலை செய்யாது - வெற்றி பெறாது - இந்தி மொழியைப் பற்றி பேசிக் கொண்டே தேர்தல் ஆதாயம் பெற்றுவிடலாம் என்று கருதும் ஒருவர் பொருளாதாரம் பற்றி மிக மிகக் குறைந்த அளவிலான அறிவைப் பெற்றவராகவும், முட்டாள்தனமான மொழியியல் ஆய் வாளராகவும் தான் இருக்க வேண்டும். அனைத் தையும்விட இந்திய கூட்டமைப்பு அரசுக்கு எதிரானது அது. இந்தியாவுக்கு இப்போது அது தேவையா? நிச்சயமாக தேவையில்லை.
நன்றி: 'தி இந்து' 14.4.2022
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment