21 மொழிகளில் பெரியார் ஏன்? தொடர் 2: தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

21 மொழிகளில் பெரியார் ஏன்? தொடர் 2: தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

 தந்தை பெரியாருடைய கருத்துகள் உலகளாவிய கருத்துகளாக - கலங்கரை விளக்கமாக இன்றைக்கு 21 மொழிகளில் என்று பெருமைப்படுகின்ற நாம் -

அதற்கான அடித்தளம் எப்படி ஆழமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம் - அதற்காக உழைத்தவர்கள் - சுயமரியாதைச் சுடரொளிகள்!

சென்னை, ஏப்.28 தந்தை பெரியாருடைய கருத்துகள் உலகளாவிய கருத்துகளாக - கலங்கரை விளக்கமாக இன்றைக்கு 21 மொழிகளில் என்று பெருமைப்படுகின்ற நாம் - அதற்கான அடித்தளம் எப்படி ஆழமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம் - அதற்காக உழைத்தவர்கள் - சுயமரியாதைச் சுடரொளிகள் - அந்த சுயமரியாதைச் சுடரொளிகளான பொன்னம்பலனார், அழகிரிசாமி போன்றவர்கள் ஆவர். அவர்கள் பிரச்சாரம் செய்யும்பொழுது, காலையில் அந்த ஊருக்குப் போய் விடுவார்கள்; கழுத்தில் தமுக்கை மாட்டிக்கொண்டு அடிப்பார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

21 மொழிகளில் பெரியார் - ஏன்? 

சிறப்புக் கூட்டம்

கடந்த 28.3.2022 அன்று மாலை காணொலிமூலம் ‘‘21 மொழிகளில் பெரியார் - ஏன்?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

பேரன்புமிக்க கழகத் துணைத் தலைவர் அவர்களே, எனக்கு முன்பு ஓர் அருமையான தொடக்கவுரையை நிகழ்த்திய கழகப் பிரச்சார செயலாளரும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞருமான அன் பிற்குரிய தோழர் அருள்மொழி அவர்களே,

வரவேற்புரையாற்றிய திராவிடர் கழக மகளிரணி பாசறையின் பொறுப்பாளரும், சென்னை வழக்குரைஞ ருமான பா.மணியம்மை அவர்களே,

கழகப் பொருளாளர் அவர்களே, பொதுச்செயலா ளர்களே, பொறுப்பாளர்களே, அனைத்து இயக்கங்கள், இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட அறிவு சார்ந்த அனைத் துப் பொதுமக்களே, சான்றோர்களே, நண்பர்களே, உலகம் முழுவதுமிருந்து கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய அருமை கேட்பாளர்களான சிந்தனையாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு ஒரு பெரிய திருப்பம் 

ஏற்பட்டு இருக்கின்றது

இரண்டாம் நாள் பொழிவில் சில செய்திகளை சுட்டிக்காட்டுவதற்கு முன்பு, தந்தை பெரியாருடைய கொள்கைகளை நாம் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கு, அவருடைய தொண்டர்கள், தோழர்கள், அவர்களால் பக்குவப்படுத்தப்பட்டவர்கள், ஆட்சியில் அமர்த்தப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கின்றது என்று மகிழ்ச்சியடை கின்ற நேரத்தில், இதற்காக அரும்பாடுபட்ட தோழர்கள், அவர்கள் அமைத்த பாதை, அவர்கள் அமைத்த மேடை, அவர்கள் நிரப்பிய மை, அவர்கள் கொடுத்த நெஞ்சுரம் இவைதான் இந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை நமக்குத் தந்திருக்கிறது என்பதையும் எண்ணிப்பார்க்கிறோம்.

‘‘இனிமேல் பெரியார் இருக்கமாட்டார்; இந்த இயக்கம் இருக்காது’’ என்று ‘சபித்தவர்களும்‘, 'சாபமிட்டவர்களும்', ஆசைப்பட்டவர்களும் அநேகர்; ஒவ்வொரு கால கட்டத்திலும், அதையெல்லாம் தாண்டி, எத்தனையோ போர்த் தளபதிகள் களத்திலே நின்றிருக்கிறார்கள் என்று சொல்கிறபொழுது, அவர்களுக்கெல்லாம் ஒரு தலைமைத் தளபதியாக இயக்கத்தில் இருந்தவர் - மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் என்றைக்கும் நிறைந்து, ஒரு பெரிய ஊக்க சக்தியாக நமக்கெல்லாம் உணர்வினை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு ஜெனரேட்டர் - அவர் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்கள்!

இங்கே மணியம்மை உரையாற்றும்பொழுது நினைவூட்டினார்கள்; அருமையான ஒரு பணி அது.

தளபதி பட்டுக்கோட்டை 

அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி

இன்றைக்கு அவருடைய நினைவு நாள்; ஒரே தலைவன், ஒரே இயக்கம், ஒரே கொள்கை - அதற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தாலும், அந்த எதிர்ப்பை சந்திக்கக்கூடிய தனித்திறமையான - எவருக்கும் இல் லாத துணிச்சல் இத்தனையும் கொண்டவர் நம்முடைய தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி அவர்கள்.

அவருடைய மேற்கோளை இங்கே சுட்டிக்காட்டினார் மணியம்மை அவர்கள்.

‘‘ஈட்டி எட்டிய வரையிலே பாயும் -

பணம் பாதாளம் வரையில் பாயும் -

ஆனால், எங்கள் தலைவர் பெரியார் அவர்களுடைய கொள்கைகளோ, அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற்கப்பாலும் பாயும் தோழா’’

என்று அவர் தலையாட்டி, உயரமாக இருக்கக்கூடிய தோற்றமுடன், அவருடைய குரல் கம்பீரத்துடன் முழங்கியதை - அதனைக் கேட்கக்கூடிய வாய்ப்பைப் பெற்ற எங்களைப் போன்றவர்களின் காதுகளில் இன் னமும் அது ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

சாதாரணமாக இந்த வெற்றி கிடைத்துவிடவில்லை; ஒவ்வொரு மேடையிலும் எதிர்ப்பு; அவர்கள் பேசிய கூட்டத்தில், கல்லடியும், சொல்லடியும் - எப்படி தந்தை பெரியார்மீது விழுந்ததோ அதேபோல, அவர்மீதும் விழுந்தது.

அரசாங்கத்தின் சார்பில், 

கொள்கை அறிவிப்பு முடிவு

அவரும், பொன்னம்பலனார் போன்றவர்களும் எப்படி பிரச்சாரம் செய்தார்கள் என்று சொல்லும்பொழுது, அதன் அடிப்படையிலேதான் இன்றைக்கு உலக மொழி களில், 21 மொழிகளில் தந்தை பெரியாரது கருத்துகள் என்று - அதுவும் அரசாங்கத்தின் சார்பில், கொள்கை அறிவிப்பு முடிவு என்று சொல்லக்கூடிய வரவு - செலவு திட்டம் என்ற பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டி ருப்பதை நாம் நியாயப்படுத்துவது மட்டுமல்ல, காரண, காரியங்களைச் சொல்லி மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொள்ளக்கூடியதே இந்த நிகழ்வாகும்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒன்றைச் சொல்லவேண்டும் - அந்தக் காலத்தில் சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய பொழுது,  பொன்னம்பலனார் போன்றவர்கள், நாகை என்.பி.காளியப்பன் போன்றவர்கள், ‘விடுதலை’ ஆசிரியராக இருந்த அருமை குத்தூசி குருசாமி போன்றவர்கள் சகாப்தம் - இளைஞர் மாநாட்டிற்கே பட்டுக்கோட்டையில் குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.

அதற்கடுத்து அண்ணா அவர்களுடைய சகாப்தம் - அதற்கடுத்து கலைஞருடைய சகாப்தம் - இன்றைக்கு மு.க.ஸ்டாலின்  வரலாறு என்று வரிசையாக நம்முடைய காலகட்டம் இப்படி வந்துகொண்டிருக்கிறது.

ஆனால், நண்பர்களே இன்றைய தலைமுறையினருக்குத்  தோழர்களுக்கு, இளைஞர்களுக்கு நான் சொல்கிறேன்.

நம்முடைய கொள்கைகளை அசைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் புரியாத சிலர்.

இன்றைக்கு அவை எப்படி வந்தன?

இந்த சிந்தனைகள் எப்படி வளம் பெற்றன?

எப்படி உரம் பெற்றன?

இதனுடைய ஆணிவேர், விழுதுகள் எப்படி பலம் பெற்றன?

என்று பார்க்கின்ற நேரத்தில், ஒன்றைச் சுட்டிக் காட்டவேண்டும்.

அறிவியல் வளர்ந்திருக்கிறது; 

பிரச்சார யுக்திகளும் வளர்ந்திருக்கின்றன

இன்றைக்கு நாம் காணொலிமூலம் நடத்தும் கூட்ட உரையை  அமெரிக்காவில் இருக்கின்ற நண்பர் கேட்டுக் கொண்டிருக்கிறார்;  ஆஸ்திரேலியாவில் இருக்கின்ற நண்பர் கேட்டுக்கொண்டிருக்கிறார்; துபாயில் இருக்கின்ற நண்பர் கேட்டுக்கொண்டிருக்கிறார்; சிங்கப்பூரில் இருக் கின்ற நண்பர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றெல்லாம் இன்றைக்கு மகிழ்ச்சியடைக் கூடிய அளவிற்கு அறி வியல் வளர்ந்திருக்கிறது. பிரச்சார யுக்திகளும் வளர்ந் திருக்கின்றன.

ஆனால், அன்றைக்கு இதுபோன்ற பிரச்சார வாய்ப்புகள் கிடையாது. அய்யா அவர்கள், அவரே மொத்தமாக ரயில்வே கூப்பன்கள் வாங்கி, இத்தனை மைல்களுக்கு என்று சொல்லி, பிரச்சாரகர்களுக்கு, பேச்சாளர்களுக்கு அதைக் கிழித்துக் கொடுத்து, நீங்கள் பயணம் செய்வதற்கு டிக்கெட் வாங்கத் தேவையில்லை; இந்தக் கூப்பன்களைக் காட்டி பயணம் செய்யலாம் என்று சொந்த செலவில் பிரச்சாரத்தை ஊக்குவித்தார்கள்.

கூட்டம் போடுவதற்கு ஆள் ஒருவர், இருவர்தான் இருப்பார்கள். ஊர் முழுவதும் எதிர்ப்பு இருக்கும். ஆனால், பரபரப்பு இருக்கும்; கூட்ட உரையைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

அப்பொழுது பிரச்சாரம் செய்த முறை எப்படி தெரியுமா? நண்பர்களே!

இன்றைக்குப் பெரிய பெரிய விளம்பரங்கள், சுவரெ ழுத்து என்று எத்தனையோ வகைகளில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அதற்காக உழைத்தவர்கள் - 

சுயமரியாதைச் சுடரொளிகள்

ஆனால், அன்றைக்கு அப்படியல்ல!

பெரியாருடைய கருத்துகள் உலகளாவிய கருத்துகளாக - கலங்கரை விளக்கமாக இன்றைக்கு 21 மொழிகளில் என்று பெருமைப்படுகின்ற நாம் - அதற்கான அடித்தளம் எப்படி ஆழமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம் - அதற்காக உழைத்தவர்கள் - சுயமரியாதைச் சுடரொளிகள் - அந்த சுயமரியாதைச் சுடரொளிகளான பொன் னம்பலனார், அழகிரிசாமி போன்றவர்கள் ஆவர். அவர்கள் பிரச்சாரம் செய்யும்பொழுது, காலையில் அந்த ஊருக்குப் போய் விடுவார்கள்; கழுத்தில் தமுக்கை மாட்டிக்கொண்டு அடிப்பார்கள். அந்த ஊர் கடைவீதிகளில் இப்பொழுது இருப்பதுபோன்ற கட்டடங்கள் எல்லாம் கிடையாது.

அழகிரிசாமி பேசுவார் என்று, அழகிரிசாமியே விளம்பரப்படுத்துவார்!

தமுக்கை கழுத்தில் போட்டுக்கொண்டு அடித்தால் 10 பேர், 20 பேர், 30 பேர், 40 பேர் சேர்ந்தவுடன்,

‘‘இதனால் சகலருக்கும் தெரிவிப்பது யாதெனில், இன்றைக்கு மாலை சுயமரியாதை இயக்கப் பொதுக் கூட்டம் இந்த இடத்தில் நடைபெறும். பொன்னம்பலனார் பேசுவார்; பட்டுக்கோட்டை அழகிரிசாமி பேசுவார்’’ என்று தமுக்கடித்துச் சொல்வர்.

அழகிரிசாமி பேசுவார் என்று, அழகிரிசாமியே விளம்பரப்படுத்திவிட்டு, அவரே மேடை ஏறி பேசக் கூடிய அளவிற்கு, உழைத்து இந்த இயக்கம் கட்டப் பட்டது!

இது சாதாரண மணல் வீடு அல்ல சரிந்து போவதற்கு. சில பைத்தியக்காரர்கள் பெரியாருடைய சிலையில் காவித் துணியைப் போர்த்தி - காவிச் சாயத்தையே வீசிவிட்டோமே என்று நினைக்கக்கூடாது.

தோழர்களுடைய உழைப்பு எப்படிப்பட்டது என் பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் பேச்சைக் கேட்டால், கம்பீரமான உணர்வு மனதிற்குள் எழும்.

நீ வீசுகின்ற கற்களையெல்லாம் நான் வீணாக்குவேன் என்று நினைத்தாயா?

அவருடைய உயரம், அவருடைய குரல் வெண்கலக் குரலாக ஒலிக்கும்; அப்படி உரையாற்றிய நேரத்தில், ‘‘கற்களை வீசுகின்ற தோழா, தேசியத் தோழா, சனாதனத் தோழா - உனக்குச் சொல்கிறேன் - நீ வீசுகின்ற கற்களை யெல்லாம் நான் வீணாக்குவேன் என்று நினைத்தாயா? உன்னுடைய கொள்கைகளுக்கு சமாதி கட்டுவதற்கு இந்தக் கற்களைத்தானப்பா பயன்படுத்துவோம்.

நீ வீசக்கூடிய ஒவ்வொரு கல்லும், அழகிரிசாமியே வீட்டுக்குப் போ என்று சொல்லாது; உரத்துப் பேசு, உரத் துப் பேசு என்றே சொல்லும்‘‘ என்று அவர் முழங்குவார்.

இதுதான் இந்த இயக்கம் - அப்படி வளர்ந்த இயக்கம் இது.

மலத்தை வீசுகிறார்களா

சாணியை வீசுகிறார்களா

செருப்பை வீசுகிறார்களா

என்றெல்லாம் பார்க்காத தலைவர். அதைத் துடைப்பதற்குக்கூட நேரமில்லாத அளவிற்கு, போர்வை யைப் போர்த்திக் கொண்டு பேசிய தலைவர். அப்படிப் பட்ட தலைவருக்குத்தான் 21 மொழிகளிலே சிறப்பு என்று சொன்னால், உலகம் அவர் மயமாகும் - அவர் உலகமயமாவார்.

வருங்காலத்தின் தீர்ப்பு - 

மக்களின் தீர்ப்பாக அமையப் போகிறது.

இது காலத்தின் கட்டாயம் - வருங்காலத்தின் தீர்ப்பு - மக்களின் தீர்ப்பாக அமையப் போகிறது.

உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடிய பல மொழி களில் அவரது கொள்கைகள் - ஆரம்பக் காலகட்டத்தில், அவருடைய இடத்தில் மட்டும்தான் அது பிரச்சாரமாக இருந்தது.

அதற்கும், பெரியாருடைய கருத்துகளுக்கும் ஒரே ஒரு வேறுபாடு - அது மத நூலாகக்கூட இருக்கலாம்.

வாயால் சொல்லப்பட்டது - காதால் கேட்கப்பட்டது - எப்பொழுது தொகுக்கப்பட்டது - பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு என்றெல்லாம், அதிகாரத்துவம் இல்லாத ஒரு நிலை இருந்தாலும், இன்றைக்கு நடைமுறைக்கு வந்துவிட்டது.

பெரியாருடைய பேச்சுகளும், எழுத்துகளும் அப்படி யல்ல. அது அத்தனையும் அவருடைய ஏடுகளிலே வந்திருக்கிறது; அவர் பேசி, அவரே அதை எழுதி, அவரே அதை திருத்தி, அவரே அவருடைய ஏட்டிலே அச்சடித்து, அது அதிகாரப்பூர்வமாக வெளிவந்திருக் கிறது. அதற்குப் பிறகு ஒலிநாடாக்கள் - அதற்குப் பிறகு மற்ற மற்ற நவீன யுக்திகள், அறிவியல், மின்னணுவியல் முறைகளில் எல்லாம் வெளிவந்திருக்கின்றன.

வேதங்கள் ஒலியாக இருக்கும்பொழுது 

அதை எப்படி திருட முடியும்?

வேதங்கள் அப்படியே தானாகவே வந்தவை என்று சொல்வார்கள்; வேதங்கள் எப்படி வந்தன என்று கேட் டால், யாருக்குமே தெரியாது. அது ஒலியாக வந்தது என்பார்கள்.

வேதத்தைத் திருடிக் கொண்டுபோய் கடலில் ஒளித்தார்கள் என்று சொன்னார்கள்.

பெரியார்தான் கேட்டார், ‘‘ஒலியாக இருக்கும்பொழுது அதை எப்படி திருட முடியும்? எப்படி கடலுக்குள் கொண்டு போய் ஒளித்து வைக்க முடியும்‘‘ என்று கேட்டார்.

அவர் தொடுத்தது பகுத்தறிவு கணைகள் - அவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

அறிவுபூர்வமாக, பெரியாருடைய எழுத்துகள் என்று சொன்னால், 

மத நூல்களுக்கும், பெரியாருடைய பகுத்தறிவு கருத்துகளுக்கும் அடிப்படையில் வேறுபாடு!

உலகளாவிய நிலையில் எல்லா இடங்களிலும் பரவிய மத நூல்களுக்கும், பெரியாருடைய பகுத் தறிவு கருத்துகளுக்கும் ஒரு பெரிய அடிப்படை வேறுபாடு என்னவென்றால்,

நேரிடையான எழுத்து, பேச்சு என்பன பெரியாருடைய கருத்துகளாகும்.

இன்றைக்கு, ‘குடிஅரசு’ ஏடு பாதுகாக்கப்பட்டு இருக்கிறது

‘விடுதலை’ ஏடு பாதுகாக்கப்பட்டு இருக்கிறது

‘ரிவோல்ட்’ பத்திரிகை பாதுகாக்கப்பட்டு இருக் கிறது.

‘ஜஸ்டீஸ்’ பத்திரிகை பாதுகாக்கப்பட்டு இருக் கிறது.

எனவேதான், இந்த 21 மொழிகளிலே பெறப் போகின்ற கருத்துகள் என்பன இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல - அதிகாரப்பூர்வமானவை.

இவைக்குத் திருத்தங்கள் என்று சொல்லுகின்ற நேரத்தில், இந்தக் கருத்திலே மாறுபடலாம். ஆனால், அதை சொல்லுகின்ற நேரத்திலே திரிபு வாதங்கள் கூடாது.

அவருடைய சுதந்திர சிந்தனை - ஒவ்வொரு காலகட்டத்திலம், ஒவ்வொரு வகையிலே அவ ருடைய சிந்தனை வளர்ந்துகொண்டே இருக்கும்.

கடைசி 10 ஆண்டுகாலத்தில், அவர் எழுதிய பிறந்த நாள் செய்திகள் என்று பார்த்தாலே, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வளர்ச்சி அதில் இருந்தது. மிகப்பெரிய ஆய்வாளர் -ஆய்வு செய்யவேண்டியவை அவை.

உலகத் தலைவராக,  உலக சிந்தனையாளராக உயர்ந்திருக்கிறார்

ஆகவேதான், ஆரம்பப் பள்ளிக்கூடத்திலே நுழை யாமல் இருந்த தந்த பெரியார், இன்றைக்கு உலகத் தலைவராக, உலக சிந்தனையாளராக உயர்ந்திருக்கிறார்.

ஏற்கெனவே கல்வி அறிஞர்கள் பெரியாரை ஆய்வு செய்திருக்கிறார்கள். வேண்டுமானால், அதற்குப் போதிய விளம்பரம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன், ஆங்கிலத் தில் வெளியிட்டு இருக்கிற ஒரு நூல் - தமிழ்நாடு கல்வித் துறையில் இருந்த கல்விநெறிக் காவலர் நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள், முதலமைச்சர் காமராசர் அவர் களுக்கு ஒரு பெரிய தளபதியாக இருந்து, அண்ணா காலத்திலும், கலைஞர் காலத்திலும், சென்னை பல் கலைக் கழகத் துணைவேந்தராக இருந்து, மிகப்பெரிய கல்வியாளராக, பகுத்தறிவாளராக, ஜாதி மறுப்பாளராக, சமத்துவ விரும்பியாக எப்படி இருந்தார்களோ, அதே போல, அவருடைய காலகட்டத்திற்குப் பிறகு, பள்ளிக் கல்வித் துறையில் இருக்கக்கூடிய இயக்குநர்களில் ஒருவர், ஆர்.பெருமாள் அவர்கள் பணியாற்றினார்.

பெருமாள்  ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர். திருச்சி ரத்தினவேல் தேவருடைய மகன். ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாகப் பேசக்கூடியவர், எழுதக் கூடியவர். அவர் பள்ளிக் கல்வித் துறையில் இயக்குநராக இருந்தவர்.

அவர் ஓய்வு பெற்றவுடனே, என்னை அணுகி, ‘‘அய்யா, இதுவரையில் நான் பள்ளிக் கல்வித் துறையில் இருந்ததினால் செய்ய முடியவில்லை. பெரியாருடைய சிந்தனைகள் உலக சிந்தனையாளர்கள் வரிசையில் ஒப் பிட்டுக் காட்டப்படவேண்டியவை - அவை மிகப்பெரிய அளவிற்கு வரவேண்டும்‘‘ என்று சொல்லி, ஒரு நூலை எழுதி, என்னிடம் கொடுத்து அதனை வெளியிட வேண்டும் என்று சொன்னார்.               (தொடரும்)

No comments:

Post a Comment