கடந்த 5 ஆண்டில் நீதிபதிகள்மீது 1,631 புகார்கள் மக்களவையில் அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

கடந்த 5 ஆண்டில் நீதிபதிகள்மீது 1,631 புகார்கள் மக்களவையில் அமைச்சர் தகவல்

புதுடில்லி, ஏப்.3 லஞ்ச விவகாரம் தொடர் பாக கடந்த 5 ஆண்டுகளில் நீதிபதிகளுக்கு எதிராக 1,631 புகார்கள் வந்துள்ளன என்று ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவை யில் எழுப்பப் பட்ட கேள்விக்கு அமைச்சர் ரிஜிஜு   எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 டிசம்பர் மாதம் வரை லஞ்ச விவகாரம் தொடர்பாக நீதிபதிகளுக்கு எதிராக 1,631 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அந்தந்த உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர்கள் விசாரித்து வரு கின்றனர்.

நீதித்துறையின் நம்பகத் தன்மையை பாதுகாக்க சட்ட விதிகள் கண்டிப்புடன் பின் பற்றப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் ஒரேமுறை மட்டுமே குடியரசுத் தலைவர் நேரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

 சர். தியாகராயர் கல்லூரியில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2022-2023 சிறப்பு கருத்தரங்கம்

சென்னை, ஏப்.3 சர்.தியாகராயர் கல்லூரியில் 30.3.2022 அன்று பொருளாதார துறையின் சார்பாக தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை பற்றி சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இவ்விழாவில் சென்னை மாநிலக் கல்லூரி யின் பொருளாதாரத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் பி.அன்பழகன்  சிறப்புரை ஆற்றினார்.

அவரது உரையில் குறிப்பிட்டதாவது: மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி  உள்பட நடப்பு ஆண்டின் நிதிநிலை அறிக்கை மக்களுடைய நலன் சார்ந்து தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இலவச திட்டங்களை குறைத்து வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவிலேயே விவசாயத்திற்கென்று மூன்று மாநிலங்களில் தான் நிதிநிலை அறிக்கை உள்ளது. அதாவது ஆந்திரா, கருநாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சிறப்பிடம் வகிக்கின்றன பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் கொடுப்பதைக் காட்டிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள், கல்லூரி கல்வியில் தொடர்ந்து படித்தால் மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி என்பது, பெண்களுக்குக் கல்வி கொடுத்தால் வேலைவாய்ப்பும், அந்தக் குடும்பமும் முன்னேறும் என்பதை  திட்டமிட்டு கணித்தே இப்பட்ஜெட் வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக் கூறி  இணைப் பேராசிரியர் முனைவர் பி.அன்பழகன் நிதி நிலை அறிக்கை பற்றி தொகுத்து வழங்கினார்.

மக்கள் நல வாழ்வு திட்டங்கள்

மேலும் தமிழ்நாடு மாநில நிதி அமைச்சர் அவர்கள் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, நீர்ப்பாசனம், கல்வி, ஏற்றுமதி ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் அளித்து இருக்கிறார். தொழிற்துறை முன்னேற்றத்திற்காக மூலதன செலவின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மக்கள் நல வாழ்வு திட்டங்களில் தகுதியுள்ள தேவையுள்ள நபர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு சேர்க்கப்படுவர் என்ற உறுதிமொழியும் தரப்பட்டு இருக்கின்றது என்பதை தன்னுடைய உரையில் பேராசிரியர் பி.அன்பழகன் விளக்கினார்.

இந்த கருத்தரங்கு நிகழ்வை சர். தியாகராயர் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.செந்தில்குமார், பொருளாதாரதுறைத் தலைவர் முனைவர் .அரங்கசாமி, துறைப் பேராசிரியர்கள் முனைவர் பி.கங்காபாய், முனைவர் வி.சரவணன், முனைவர் பி.ராஜ சிம்மன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரிப்பு

சென்னை, ஏப்.3  மொத்த விற்பனை பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக, ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார ஆலோசகரின் பரிந்துரைப்படி, அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையை ஏப்ரல் 1ஆம் தேதி (நேற்று) முதல் 10.76 சதவீதம் உயர்த்துவதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏற்கெனவே தெரிவித்தது. அதன்படி, 872 மூலக்கூறுகள் அடங்கிய மருந்துகளின் விலை உயர்ந்து இருக்கிறது.  அதாவது காய்ச்சல், ரத்த அழுத்தம், ரத்தசோகை, நீரிழிவு, இதயநோய், புற்றுநோய், தோல் வியாதி, வலி, தொற்றுநோய் உள்பட சில நோய் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் மூலக்கூறுகள் அடங்கிய மருந்துகளின் விலை, இந்த புதிய விலை பட்டியலில் உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ரத்த அழுத்த நோய் பிரச்சினைக்கு வழங்கப்படும் டெல்மிசார்டன் மூலக்கூறு அடங்கிய மாத்திரை விலை 7 ரூபாய் 32 காசுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரசிட்டமால் மூலக்கூறு அடங்கிய மாத்திரை விலை 1 ரூபாய் 1 காசுக்கு நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment