பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக சமூகப் பணித்துறை மாணவர்களின் 'பெரியார் புரா' மற்றும் 'உன்னத் பாரத் அபியான்' கிராமங்களில் 6 நாள்கள் நடைபெற்ற கிராமிய முகாம் 2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக சமூகப் பணித்துறை மாணவர்களின் 'பெரியார் புரா' மற்றும் 'உன்னத் பாரத் அபியான்' கிராமங்களில் 6 நாள்கள் நடைபெற்ற கிராமிய முகாம் 2022

புதுக்குடி, ஏப்.3 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை சார்பாக கிராமிய முகாம் 2022 பெரியார் புரா மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின்கீழ் தத்தெடுக்கப்பட்ட 6 கிராமங்களில் 28.02.2022 முதல் 05.03.2022 வரை 6 நாட்கள் நடைபெற்றது.

தொடக்க விழா

இந்த கிராமிய முகாமின் தொடக்கவிழா புதுக்குடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 28.02.2022 காலை நடைபெற்றது. இவ்விழாவினை பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் சிறீவித்யா அவர்கள் துவக்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். அவர்தம் உரையில், சமூகப் பணித்துறை மாணவர்கள் எப்போதும் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு நற்செயல்களை செய்து வருவதாகவும், பல்கலைக்கழகத்தில் உள்ள பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து கிராமப்புறங்களின் தேவைகளை கண்டறிந்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதை வெகுவாகப் பாராட்டினார். அதோடு மட்டுமல்லாமல் இப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அறிவுசார்ந்த பல்வேறு பாடங்களை பேராசிரியர்களைக் கொண்டு, தேவைக்கேற்ப சிறப்பு வகுப்புகள் நடத்தி எப்போதும் உதவி செய்யப்படுவதை மீண்டும் நினைவுபடுத்தி பேசினார்.

ஒதுக்கீடுகளையும் - நலத்திட்டங்களையும்

இந்த துவக்க விழாவிற்கு புதுடில்லி இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞான் பிரசார் எடுசாட் திட்ட இயக்குநர் முனைவர் இர பானா பேகம் அவர்கள் முகாமிற்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்து சிறப்புரை ஆற்றினார். சமூகப்பணித்துறை மாணவர்களின் அர்ப்பணிப்பான இந்தப் பணியைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஆர்வத்துடன் பயின்று சர்.சி.வி.ராமனைப் போல நோபல் பரிசு பெற வேண்டும் என வினவினார். இந்த முகாமின் துவக்க விழாவிற்கு கவுரவ விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  பா.அய்வண்ணன் அவர்கள் தமது உரையில் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் உரிமைகளை கட்டாயம் நல்வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அரசு செய்துவரும் பல ஒதுக்கீடுகளையும் நலத்திட்டங்களையும் அதனை பயன்படுத்தும் முறைகளையும் மிகவும் எளிய முறையில் பட்டியலிட்டு காட்டுவதோடு மட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சியிலும் சமுதாயப் பணிகளிலும் எவ்வாறு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த கிராமிய முகாம் துவங்குவதற்கு முன் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு, பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர். பல்கலைக்கழகத்தின் கட்டட எழிற்கலை துறையின் 2ஆம் ஆண்டு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்திலும் சுவர்களிலும் ஓவியங்கள் தீட்டி எழில்மிகு வளாகமாக மாற்றினர்.

சமூகப்பணித்துறைத் தலைவர் முனைவர் .ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் தொடக்கவுரையில் இந்த சமூகப்பணித்துறை மாணவர்களின் கிராமிய முகாமின் நோக்கங்களையும், குறிக்கோள்கள் பற்றியும் விளக்கினார். கட்டிட எழிற்கலைத் துறையின் முதன்மையர் சுப்ரமணியம் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாட்டுப்புறமும் - நாட்டுநலனும்

மாலை நிகழ்வாகநாட்டுப்புறமும் நாட்டு நலனும்என்ற கருப் பொருளோடு நடந்த நிகழ்வில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மய்யத்தின் தமிழ் உதவி பேராசிரியர் முனைவர் .லெனின் கலந்துகொண்டு நாட்டுப்புற பாடல்களின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு பாடல்களைப்பாடி பல நல்ல கருத்துகளை எடுத்துரைத்தார். அவர்தம் பாடல்களில் நாட்டின் சதந்திரத்திற்கு முன்பும், அதைபோல இன்று வரையிலும் நாட்டுப்புற பாடல்கள் பல்வேறு மனமாற்ற நிகழ்வுகளை நிகழ்த்தி வருவதாக உறுதிபடக் கூறினார்.

 அக்காலத்து உணவு முறைகளைப் பற்றியும், பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு உணவுமுறையை பின்பற்றி நலமோடு வாழ்ந்தனர் என்றும்ஒரு கிராமம் தன்னிறைவு பெறும்போது நாடும் வளர்ச்சி பெறும்என்பதையும் பாடல்கள் வாயிலாக எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் புதுக்குடி கிராம குழந்தைகள் கலைநிகழ்ச்சியில் அவரவர் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில்

300-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மரமும் சுற்றுச்சூழல் வளமும்

இரண்டாம் நாள் நிகழ்வு 01.03.2022 அன்று புதுக்குடி மற்றும் நவலூரில் நடைபெற்றது.

மரமும் சுற்றுச்சூழல் வளமும்என்ற கருப்பொருளோடு இரண்டாம் நாள் நிகழ்வு மார்ச் 01.03.2022 அன்று புதுக்குடி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் காலை துவங்கியது. இந்நிகழ்ச்சியில் சமூகப் பணித்துறை மாணவர்களும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் இணைந்து பள்ளியில் விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்து 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். அதனை தொடர்ந்து மதியம் விமானத்துறை பற்றிய தகவல்கள் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் துறை தலைவர் கார்த்திக் சுப்ரமணியன்  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில்:

விமான வடிவம், விமான செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்களைப் பற்றி விரிவாக மாதிரிகளை கொண்டு விளக்கினார். இதில் விண்வெளி துறை மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பயின்று வரும் கோகுலராஜ் மற்றும் விஜய் பிரகாஷ் பள்ளி மாணவர்களுக்கு விமான மாதிரிகளையும், ஆள் இல்லா விமானத்தை இயக்கியும் செயல்சார் விளக்கம் அளித்தனர்.

வேளாண்மை - மேலாண்மை

 தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் தானியங்கி தொழில் நுட்பப் பயிற்சி மற்றும் உயராய்வு மய்ய இயக்குநர்  சு.ராகேஷ்   ரோபோக்களையும் அதன் தொழில் நுட்பம் பற்றியும் ரிமோட் சென்சார் தொழில் நுட்பம் பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தார். இந்த கலந்துரையாடல் மூலம் பள்ளியில் பயிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தார். “ வேளாண்மை மேலாண்மைஎன்ற கருப்பொருளோடு மாலை நிகழ்வு நவலூர் கிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட வனவர்  தி.இளஞ்செழியன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் மரங்கள், தாவரங்கள் மூலமாக ஒரு ஆண்டிற்கு 1000 மி.மீ மழை கிடைக்கிறது என்பதையும், காடுகளை அழிக்கக் கூடாது எனவும் ஏரி, குளம் போன்றவற்றை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதனையடுத்து வீட்டிற்கு வீடு மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டாயமாக இருக்க வேண்டும் எனவும், மண் பரிசோதனை பயன்கள் மற்றும் அதன் அவசியத்தையும் பொதுமக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தார்.

குழந்தைகளும்

தொழில்நுட்ப வளர்ச்சியும்

மூன்றாம் நாள் நிகழ்வு, 02.03.2022 அன்று  இராயமுண்டான்பட்டியில் நடைபெற்றது.

‘’குழந்தைகளும் தொழில் நுட்ப வளர்ச்சியும்என்ற கருப்பொருளோடு 3-ஆம் நாள் நிகழ்வு 02.03.2022 அன்று இராயமுண்டான்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் காலை துவங்கியது. இந்நிகழ்ச்சியில் ரெட்டிங்டன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் உள்ளவோல்டு ஆன் வீல்ஸ்’’ என்ற கருப்பொருள் கொண்டு கணினி மற்றும் இணையதள அமைப்பு கொண்ட நவீன பேருந்தை பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் பார்வையிட்டு அதன் மூலம் பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டனர்.

இப்பயிற்சியை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டுத் துறை உதவிப் பேராசிரியர் சிறீதர் அவர்களும், மென்பொருள் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் சந்திரகுமார் பட்டரும் இணைந்து மாணவர்களுக்கு செயல்சார் பயிற்சி அளித்தனர்.

சுத்தம் - சுகாதாரம்

முன்னதாக வெண்டயம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்  கனிமொழி சிவக்குமார் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேருந்தையும் பார்வையிட்டு சமூகப்பணித்துறை மாணவர்களின் இந்த முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்தார்.

மாலை நிகழ்வாகசுத்தம் சுகாதாரம்என்ற கருப்பொருளோடு நடந்த நிகழ்வில் சைல்டுலைன் இணை நிறுவனமான செட் இன்டியாவின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில் குழந்தைகள் எப்போதும் தங்களைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பல்வேறு நோய்கள் மற்றும் இணை நோய்களிலிருந்து தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் என கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது.

இந்த நாள் நிகழ்ச்சிகள் மூலம் 200-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பயனடைந்தனர்.

இயற்கையும் மருத்துவ குணமும்

நான்காம் நாள் நிகழ்வு, 03.03.2022 அன்று  இராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டியில் நடைபெற்றது.

இயற்கையும் மருத்துவ குணமும்என்ற கருப்பொருளோடு 4ஆம் நாள் நிகழ்வு காலை இராயமுண்டான்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் கனிமொழி சிவக்குமார்  தலைமையேற்று மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். மதர் தெரசா பவுண்டேசன் மருத்துவர் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரூ.1000 மதிப்புள்ள பரிசோதனைகளும் ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு 150-க்கும் மேற்பட்ட இராயமுண்டான்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் பரிசோதனை செய்துகொண்டு பயனடைந்தனர். இதனைத் தொடர்ந்து உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்ட இராயமுண்டான்பட்டி கிராமத்தில் பொதுமக்களிடையே அடிப்படை ஆய்வு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இயற்கை உணவே என்றும் மருந்து

இதனை தொடர்ந்து மாலை நிகழ்வாகமூலிகை மருத்துவம்பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி வெண்டையம்பட்டி கிராமத்தில் பூங்காளியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் ஆர்த்திகா  கருத்துரை வழங்கினார். அவர்தம் உரையில்: “இயற்கை உணவே என்றும் மருந்துஎன்று அதை தவிர்க்கும் போது பல நோய்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும் என கூறினார். எதிர்வரும் காலங்களில் இயற்கை வழி உணவே நம்மை பாதுகாக்கும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அகத்தியர் உடலியக்க மருத்துவ மய்ய மருத்துவர்கள் சிவகுருநாதன் மற்றும் இலங்கியன் பொதுமக்களுக்கு உள்ள உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதைத் தொடர்ந்து கிராம சிறுவர்களுடன் இணைந்து சமூகப்பணித்துறை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திறன் மேம்பாட்டு பயிற்சிகள்

அய்ந்தாம் நாள் நிகழ்வு, 04.03.2022 அன்று பாளையப்பட்டி தெற்கில் நடைபெற்றது.

கிராமிய முகாமின் சமூகப்பணித்துறை மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியை சமூகப்பணி துறை தலைவர் முனைவர் ஆனந்த ஜெரார்டு செபாஸ்டின்  கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் ஊரகப் பங்கேற்பு மதிப்பீடு (றிஸிகி) முறையின் மூலம் கிராம சமூக பொருளாதாரம் மற்றும் வளங்களையும் எவ்வாறு கண்டறியலாம் என பயிற்சி பெற்றனர். இதனைத் தொடர்ந்து பாளையப்பட்டி தெற்கு கிராமத்திற்கு மாணவர்கள் சென்று கிராம வளங்களை வரைபடமாக வரைந்து சமர்ப்பித்தனர். அந்தப் பயிற்சி கிராமிய வாழ்வை மிகத் துல்லியமாக கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

கற்றல் நமது ஆற்றல்

பாளையப்பட்டி தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கானகற்றல் நமது ஆற்றல்என்ற கருப்பொருளோடு மாலை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் முனைவர் கா.செல்வகுமார்  கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயனடைந்தனர். அவர்தம் உரையில் எளிய முறையில் கல்விக்கற்றல், நினைவாற்றல் மேம்படுத்துதல் மற்றும் போட்டித்தேர்வுகளை எப்படி வெல்வது என முக்கிய குறிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 8 முதல் 10ஆம்  வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர்.

சமூகப் பணியின் முக்கியத்துவம்

அதனைத் தொடர்ந்து செட் இண்டியா தொண்டு நிறுவனம் மற்றும் களஞ்சியம் நிர்வாக இயக்குநர்  பெ.பாத்திமாராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில்:-

சமூகப் பணியின் முக்கியத்துவம் பற்றியும் சமூகப் பணியாளர் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமைகள் பற்றியும் விளக்கினார். அதுமட்டுமல்லாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் களப்பணியில் செயலாற்றும் துறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் சமூகப்பணியாளர்கள் நேர்மறை எண்ணங்களை கொண்டு சமூகத்திற்கு பணியாற்ற வேண்டும் என்றார்.

நம் பலம் மனநலம்

கிராமிய முகாமின் நிறைவு விழா மனையேறிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்நம் பலம் மன நலம்என்ற தலைப்பில் 05.03.2022 அன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆத்மா மருத்துவமனை உளவியல் நிபுணர் பி.அண்ணகாமு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் இவர்நல்லதே நினை, நல்லதை செய், நல்லதே நடக்கும்என்ற பொன்மொழியோடு தன் உரையை ஆரம்பித்தார். மாணவர்கள் திறமையாக இருக்க வேண்டும். அச்சம் தவிர்க்க வேண்டும் என மாணவர்களை ஊக்குவித்தார். இளம் பருவத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நமக்குள் ஏற்படும் மாற்றத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார். அதோடு வளர் இளம் பருவத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு எளிதில் கையாளுவது எனவும் விளக்கினார். மேலும் மாணவர்கள் எந்த ஒரு செயல் செய்தாலும் ஆர்வத்துடன் முழு மனதோடும் செய்ய வேண்டும் என கூறினார். அடுத்ததாக ஆத்மா மருத்துவமனையின் சமூக நல ஆலோசகர்  பிரகதீஷ்வரன் சிறப்புரையாற்றினார்.

சமூக வலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் எடுத்துரைத்தார். தொழில்நுட்ப வளர்ச்சியால் குழந்தைகளின் வாழ்க்கை முறை எவ்வாறு மாறுகிறது, தீய செயல் முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் மேலும் பல தவறுகளை செய்து குழந்தைகள் சீர்திருத்த பள்ளியில் செல்லும் சூழலுக்கு ஆளாவதாக கூறினார். அதனால் குழந்தைகள் தவறான வழியில் செல்லாமல் சரியான வழியில் செல்ல வேண்டும் என்று அவர்தம் உரையில் கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று பயனடைந்தனர்.

மனநல விழிப்புணர்வு பேரணி

மன நலம் பற்றிய விழிப்புணர்வு பேரணி பாளையப்பட்டி தெற்கில் மதிய நிகழ்வாக நடைபெற்றது. சமூகப்பணித்துறை மாணவ, மாணவியர்களும் மற்றும் ஆத்மா மருத்துவமனை மனநல ஆலோசகர், முக்கிய நிர்வாகிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கிராமப் பொதுமக்களுக்கும் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த பேரணி அமைந்தது. இந்நிகழ்வு கிராமத்தில் முக்கியத்தெருவழியாக சென்று அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வந்தது. இந்தப் பேரணியில்மனநலம் ஒரு நோயேஅதை குணப்படுத்த மருந்து உண்டு என்று பேரணியில் முழக்கம் இடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை நிகழ்வாக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன சமூகப்பணித்துறை மாணவர்கள் 6ஆம் நாள் கிராமிய முகாமின் நிறைவு விழா அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தினர்.

அடுத்ததாக சமூப்பணித்துறை மாணவர்கள் ஆறு நாள்கள் நடந்த கிராமிய முகாமின் தினசரி நிகழ்வுகளின் அறிக்கையை ஒவ்வொருவரும் வாசித்தனர். கிராமிய முகாமின் நிறைவு விழாவிற்கு பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ்.வேலுசாமி  தலைமை வகித்தார். அவர்தம் உரையில் :

சமூகப் பணித்துறையின் மாணவர்கள் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் மாணவர்களை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு பணிகள் இம்முகாமில் சிறப்பான செயல்களால் செயல்படுத்தியதைப் பாராட்டினார். அதுமட்டுமல்லாமல் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பெரியார் புரா கிராமங்களில் தொடர்ந்து பல வளர்ச்சிப் பணிகள் சமூகப்பணித்துறை மாணவர்களைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

நோட்டு புத்தகங்கள் வழங்கல்

அதனைத்தொடர்ந்து சமூகப்பணித்துறை மாணவர்கள் பாளையப்பட்டி தெற்கு அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக ரூ.5,000 மதிப்புமிக்க நோட்டு புத்தகங்களை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மூலம் வழங்கப்பட்டு அதனை தெற்கு பாலையப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர்  கமலதாசன்,   ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் செந்தில் செல்வன்  மற்றும் பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர்  கருணமுடி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்  சிவரஞ்சனி பெற்றுக்கொண்டனர்.  இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் சமூகப்பணித்துறை மாணவர்கள் ஏற்படுத்திய ஆறுநாள் கிராமிய முகாமானது கிராமப் பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருந்தது என்றும் இதைப்போன்று பல நற்செயல்களை செய்யவேண்டும் என கூறி சமூகப்பணித்துறை மாணவர்களை பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக லெனின் மற்றும் காந்தி   ஆகியோர் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றியும், மதுப் பழக்கம் ஒரு மனநோய் என்றும் அதனை சிகிச்சை முறையில் குணப்படுத்தி மறுவாழ்வு பெறலாம் என்றும் தங்களின் நாட்டுப்புற பாடல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் 200-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

No comments:

Post a Comment