அதிகமாக உழைப்பவன் கீழ்ஜாதியாம்; சோம்பேறி மேல் ஜாதியாம்
இத்தகைய சமூகக் கொடுமைகளின் முதுகெலும்பை முறிக்கப் பிறந்ததுதான் திராவிடர் இயக்கம்!
புதுச்சேரி, திண்டிவனத்தில் திராவிடர் இயக்கத்தின் சிறப்பை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் சிறப்புரை!
புதுச்சேரி,ஏப்.12- நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணம் மேற்கொண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நேற்று (11.4.2022) புதுச்சேரியில் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள், கழகப்பொறுப்பாளர்கள் ஆர்வ மிகுதியுடன் உற்சாக வரவேற்பளித்தனர்.
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணப் பொதுக் கூட்டம் நேற்று (11.4.2022) மாலை சுதேசி ஆலை அருகில் மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் இரா.சடகோபன் அனை வரையும் வரவேற்று பேசினார்.
மண்டல அமைப்பாளர் இர.இராசு, பொதுக்குழு உறுப் பினர் லோ.பழனி, மாநில மகளிரணி தலைவர் அ.எழிலரசி, மாநில தொழிலாளர் அணி தலைவர் வீர.இளங்கோவன், மாநில இளைஞரணி தலைவர் தி.இராசா, திராவிட கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் கே.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுவை குமார் குழுவினரின் பகுத்தறிவு கலை நிகழ்ச்சி யைத் தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
|
கல்வியைப் பறிக்கும் பாஜக அரசை தூக்கி எறிய போர்க்குணத்துடன் இயங்கவேண்டும்
வே.நாராயணசாமி பேசியதாவது: மாநில அரசுகளை ஒன்றிய அரசுக்கு தலையாட்டி பொம்மைகளாக இருக்க வைக்க வேண்டும் என்பதுதான் ஒன்றிய பா.ஜ.க.அரசின் நோக்கமாக உள்ளது. அதிலும் குறிப்பாக மேனாள் ஆளுநர் கிரண் பேடி அவர்களை கொண்டு மாநில நிர்வாகத்தில் தலையிடுவது, நிதி பற்றாக் குறையை ஏற்படுத்துவது, இணக்கமற்ற போக்கை கையாண்டு பலவகையிலும் இடையூறு செய்தனர். புதுச்சேரி மாநில கூட்டணி கட்சியினர் இணைந்து பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். நிதியை தடுத்து நிறுத்தி பல நல்ல திட்டங்களை தடுத்து நிறுத்தினார்கள். நான் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்த போது நீங்கள் என்னை எதிர்ப்பதாக கருதி புதுச்சேரி மக்களை எதிர்க்காதீர்கள். வாக்களித்த மக்களுக்கு வஞ்சகம் செய்கிறீர்கள் என்று கூறினேன். இந்த நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.ஆனால், ஆளுநர் அலுவலகத்தில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாநில அரசு களால் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு பொருந்தாது என்கிறார்கள். முதலில் ஒன்றிய அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பிறகு மாநில அரசு கல்லூரிகள் என்று நமது பிள்ளைகளின் கல்வியை பறிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும் பாசிச பா.ஜ.க. அரசை தூக்கி எறிய நாம் போர்க்குணத்தோடு இயங்க வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். |
தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் உரையில் குறிப்பிட்டதாவது:
“இது வொரு முழுமையான கூட்டமாக இல்லாததால், அரை மணி நேரம் தான் பேச முடியும். ஆகவே எல்லா வற்றையும் சொல்லிவிட முடியாது. அதனால், பரப்புரைக்காக போடப்பட்ட 10 ரூபாய் மதிப்பு கொண்ட இந்தப் புத்தகத்தை அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டும்” என்று முன்னறிவிப்பு செய்துவிட்டு, முன்னதாக புதுச்சேரியைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் பேசியதை நினைவூட்டும் விதமாக, “புதுச்சேரியில் ஒரு பொம்மலாட்ட அரசு நடந்துகொண் டிருக்கிறது” என்று தொடங்கினார்.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் துணைவேந்தர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர், மற்ற கல்வித் தகுதிகள் எல்லாம் பிறகுதான். அதனாலேயே இந்த தேசியக் கல்விக் கொள்கை இன்னமும் இறுகப்போகிறது” என்று சொல்லி, இதனால், தமிழ்நாட்டை விட புதுச்சேரிக்கு தான் ஆபத்து அதிகம் என்பதை சுட்டிக்காட்டினார்.
மக்கள் பிரச்சினைகளுக்கும், கொடுத்த வாக்குறுதிகளை பற்றிக் கேட்டாலும், புதுச்சேரி முதலமைச்சர் பதில் சொல் வதில்லை என்பதைச் சுட்டிக் காட்ட, ”அவர் பிரதமர் வழியைப் பின்பற்றுகிறார்” என்று சொல்லி பிரதமர், ‘சப்கா சாத், சப்கா விகாஷ்’ என்றும், ’வங்கியில் 15 லட்சம்’, ’ஆண் டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு’ உள்ளிட்ட மோடி அளித்த உறுதிமொழிகள் என்னவாயிற்று என்பவைகுறித்து சுட்டிக்காட்டினார்.
மேலும், “நாங்க போன முறையே சரியாகச் சொன்னோம். ஆனால், நீங்க பொய்யான வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாந்துட்டீங்க. இந்த முறை சரியாக இருக்கணும்” என்று புதுச்சேரி மக்களுக்கு வழிகாட்டினார். ”புதிய கல்விக் கொள் கையால் புதுச்சேரியில் இருக்கும் மத்தியப் பல்கலைக்கழகம் இங்கிருக்கும் புதுச்சேரி மக்களுக்கு பயன்படாமல் போய் விடும்” என்று இன்னுமொரு முக்கியமான பிரச்சினையை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, ”கல்வி தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் அனைத்துமே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21 ஏ என்ற சட்டத் திருத்தத்திற்கு விரோதமானது” என்று குற்றம் சாட்டினார். திராவிட மாடலை நினைவூட்டி, ‘நமது பிள்ளைகள் பள்ளிக்கூடம் வருவதற்கு உணவு, உடை, புத்தகங்கள், சைக்கிள், செருப்பு, லேப்டாப் என்று கொடுத்து, பள்ளிக்கு வரவழைத்தது. ஆனால் ஆரிய மாடலோ Ôநீட், கியூட்Õ என்று நுழைவுத்தேர்வுகளை கொண்டுவந்து, பள்ளி களை விட்டு வெளியே அனுப்பி, நமது பிள்ளைகளின் எதிர்கால கல்விக் கண்ணை குத்துகிறது’ என்று சொல்லி, ”இதை மாற்ற வேண்டும்! அதற்கு புதுவை மண்ணிலே எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். தீயணைப்பு வீரர்களைப் போல ஒன்றுபட்டு, பாசிச ஆட் சியை வீழ்த்த வேண்டும். இந்தத் தலைவர்கள் மேடையில் ஒற்றுமையாக இருப்பதைப் போன்று என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
இந்த பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி மாநில மேனாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி, தி.மு.க.மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா, சி.பி.அய்.மாநில செயலாளர் அ.மு.சலீம், சி.பி.எம். மாநில செயலாளர் இரா.ராஜாங்கம், ம.தி.மு.க மாநில செய லாளர் அ. கபிரியேல், வி.சி.க.மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மீனவர் விடுதலை வேங்கைகள் கட்சி தலைவர் மங்கையர்செல்வன், சி.பி.அய்.எம்.எல். மாநில பொதுச் செயலாளர் சோ.பாலசுப்பிரமணியம், புதுச்சேரி த.பெ.தி.க. தலைவர் வீர.மோகன், பி.போல்டு தலைவர் அ.பஷீர் முகம்மது, அண்ணா பேரவை அமைப்பாளர் சிவ.இளங்கோ, தனித்தமிழ் இயக்க தலைவர் க.தமிழ்மல்லன் , பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.சீ.தீனா, ப.க.துணைத்தலைவர் ஆடிட்டர் ரஞ்சித் குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மண்டல செயலாளர் கி.அறிவழகன் நன்றி கூறினார்.
திண்டிவனத்தில்...
புதுச்சேரியைத் தொடர்ந்து, பயணக் குழு திண்டிவனத்தை நோக்கிப் புறப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணப்பொதுக்கூட்டம் திண்டிவனம் காந்தியார் திடலில் நேற்று (11.4.2022) நடைபெற்றது.
அங்கு தமிழர் தலைவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடலூரைப் போலவே தோழர்கள் இருபக்கமும் தீப்பந்தமேந்தி பேண்டு வாத்தியம் முழங்க, தமிழர் தலைவர் வாழ்க, தந்தை பெரியார் புகழ் ஓங்குக என்ற முழக்கங்களுடன் எழுச்சிகரமாக தோழர்கள் புடைசூழ மக்கள் வெள்ளத்தில் மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காந்தியார் திடல் அருகே கழகத் தோழர்கள் இவ்வாறு திரண்டிருந்து அனைவரது கையிலும் தீப்பந்தம் ஏந்தி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்றனர்
திண்டிவனம் மாவட்டத் தலைவர் இர. அன்பழகன தலை மையில், மாவட்ட செயலாளர் பரந்தாமன் அனைவரையும் வரவேற்றார்.
விழுப்புரம் மண்டலத் தலைவர் கோ.சா.பாஸ்கர், மண்டலச் செயலாளர் தா.இளம்பரிதி, மண்டல மகளிரணித் தலைவர் விஜயலெட்சுமி தாஸ், விழுப்புரம் மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பரணிதரன், திண்டிவனம் மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை, ஒலக்கூர் ஒன்றியத் தலைவர் பெருமாள், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் கோபண்ணா, திண்டிவனம் நகர தலைவர் வில்லவன் கோதை, திண்டிவனம் நகர செயலாளர் பழனிவேல், விழுப்புரம் நகரத் தலைவர் கொ.பூங்கான், விழுப்புரம் நகர செயலாளர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர் இராம.அன் பழகன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
திமுக வடக்கு மாவட்டச் செயலாளர், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஆசிரியரை மேடையிலிருந்து வரவேற்றனர். பின்னர் தலைவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்கள்.
|
பெரியாரின் கொள்கைகளை நிலைநாட்ட நெடும் பயணம் மேற்கொண்டுள்ள ஆசிரியர் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதாவது, சமூகநீதியை நிலைநாட்டிட, சனாதனத்தை விரட்டி அடிக்க தமிழர் தலைவர் இந்த வயதிலும் நீண்ட பயணத்தில் களப்பணி ஆற்றி வருகிறார். அவரை பார்க்கும் போது வியப்பும் வருகிறது. வெறுப்பும் வருகிறது. இவரை போல நம்மால் பயணிக்க முடியவில்லையே என்று!! பெரியாரின் கொள்கைகளை நிலைநாட்ட நெடும் பயணம் மேற்கொண்டு உள்ள ஆசிரியர் அவர்களை இலட்சோப இலட்சம் விடுதலை சிறுத்தைகள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறோம், ஏன் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள இங்கே புத்தகம் ஒன்று வெளியிட் டுள்ளார்கள். அதை அனைவரும் வாங்கி படித்து பரப்ப வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.என்றால் தேசிய தன்னார்வ தொண்டு சங்கம் என்று பொருள். மிகவும் ஆபத்தான கொள்கைகளை முன்னெடுத்து இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இன்றைக்கு ஜோதி பாபுலே பிறந்த நாள்அவரது கொள்கைகளுக்கு எதிராக, ஏன் புத்தரின் கொள்கைகளுக்கு எதிரான அமைப்புதான் ஆர்எஸ்.எஸ். சித்பவன் பார்ப்பனர்கள் தான் தலைமை பொறுப்பை ஏற்கிறார்கள். அவர்கள் தங்களது நலனை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். சமூக ஒழுங்கு சீர் குலைக்கப்படுகிறது. சமூக ஒழுங்கு மாறினால் சிறுபான்மை மக்களாகிய நாம் கக்கூஸ் கழுவ நேரிடும் என்ற அச்சத்தினால் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்று கூறி வருகிறார் களே? இந்தியா ஒரே தேசம்தானே! யாரும் துண்டாட நினைக்கிறார்களா? பிறகு ஏன் ‘ஒரே, ஒரே’ என்று கூறுகிறார்கள். நமது கல்வியை பறிக்க நினைக்கும் சனாதன கும்பலை விரட்டியடிக்க நாம் உறுதுணையாக இருப்போம் என்று கூறி விடைபெறுகிறேன். ஒரே மதம் என்ற கருத்து நியாயம் தான்? இது ஜனநாயகத்திற்கு உகந்ததா? எவ்வளவு ஆபத்தான ஒன்று இது? பண்டித அயோத்திதாசரும், பாபா சாகேப் அம்பேத் கரும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் இல்லை என்று எழுதியுள்ளார்கள். உங்களை பெரும்பான்மை மக்களாக காட்டிக் கொள்ள எங்களை இந்துக்கள் என்று அழைக் கிறார்கள். நாங்கள் சட்டப்பூர்வமாக இந்துக்கள் இல்லை என்று பிரகடனப்படுத்தி உள்ளார்கள் எங்கள் தலைவர்கள். ஒரே மொழி என்பதையும் நிறுவ முயற்சிக்கிறார்கள். எனவே, எல்லோரும் இந்தி பேச வேண்டும் என்று கூறுவது மிகவும் ஆபத்தானது. |
தமிழர் தலைவர் உரை
நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
அவர் தமதுரையில், பொதுக்கூட்டம் மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதை பார்த்து, “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே” என்று பலத்த கைதட்டல்களுடன் தொடங்கினார். திண்டி வனத்தில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்திப் பேசினார். அதாவது, நெருக்கடி காலத்தில்தான் இதே திண்டிவனத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது தான், தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதும், அன்னை மணியம்மையார் பொறுப்புடன் நடந்துகொண்டதும், தாங்கள் பெரியார் திடலுக்குத் திரும்பிச் சென்றபோதுதான் தான் கைது செய்யப்பட்டதையும், அதையொட்டி நடந்த நிகழ்வுகளையும் பட்டியலிட்டார்.
அப்போது, “இனிமேல் தி.க. அவ்வளவுதான், தி.மு.க. அவ்வளவுதான் என்று கூறினார்கள்” என்று கூறினார்கள். “அன்று என்னுடன் கைது செய்யப்பட்டு, என்னுடன் இருந்த அந்த மு.க.ஸ்டாலின்தான் இன்று, இந்தியாவின் முதலமைச் சர்களில் முதல் முதலமைச்சர்! இதுதான் திராவிட மாடல்!” என்று, திராவிடர் இயக்கத்தை அவ்வளவு சுலபமாக யாரும் எண்ணிவிட வேண்டாம் என்று எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மக்கள் அதனை மிகவும் ரசித்து கைதட்டினர். இன்னு மொரு முக்கியமான விசயத்தையும் விவரித்தார். அதாவது, திருமாவளவன் எம்.பி., ஆர்.எஸ்.எஸ். பற்றி, பி.ஜே.பி.பற்றி பேசியதைச் சுட்டிக்காட்டி, “யார் இங்கே அதிகமாக உழைக்கிறானோ அவன்தான் இங்கே கீழ்ஜாதி, சோம்பேறி எவனோ, அவன்தான் உயர்ஜாதி. இந்தக் கொடுமையை எங்காவது கேள்விப்பட்டதுண்டா?” என்று கேள்வி கேட்டு, “இந்தக்கொடுமைகளின் முதுகெலும்பை முறிப்பதற்கு பிறந் ததுதான் திராவிடர் இயக்கம்.” என்று சொன்னதும், மக்களின் ஏகோபித்த கைதட்டல்கள் அதை ஆமோதித்தது. இன்னு மொரு முக்கிய தகவலை சுட்டிக்காட்டினார்.
அதாவது, “மற்ற நாடுகளில் கல்வியை ஏகபோகமாக்கியது உண்டு. ஆனால், இந்தியாவிலோ தங்களை அறிவாளிகள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள், கல்வியை ஏகபோக்கமாக்கியதோடு விட்டார்களா? படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று தண்டனை கொடுத்தது மனு தர்மம்தான். இந்துமதம்தான். அதை இன்றைக்கும் பாதுகாக்க நினைப்பதுதான் இப்போது வந்திருக்கும் புதிய கல்விக் கொள்கை” என்று பிரச்சினை எவ்வளவு கொடூரமானது என்பதை பளிச்சென்று புரியவைத்தார்.
மேலும், “70 ஆண்டுகளுக்கு முன்னால், ராஜகோபாலாச் சாரியார் கொண்டு வந்த குலக்கல்வியை பெரியார் ஒழிக்க வில்லை என்றால்?” என்று கூறி நிறுத்தி, “இதோ எனது சகோதரர் திருமா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் வாங்கி இருக்க முடியாது” என்று அருகிலிருக்கும் திருமாவைத் தொட்டுக் காட்டிச் சொன்னார்.
தொடர்ந்து ’நீட்’ பற்றி விளக்கிப்பேசினார். ஆளுநர் விரும்பும் மோதல் அரசியலை சொல்லிக் காட்டினார். நாடாளுமன்றத்தில், ’ராகுல் காந்தி 100 ஆண்டுகள் ஆனாலும் பி.ஜே.பி. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது’ என்றதைச் சுட்டிக்காட்டியதும் கைதட்டல்களுடன் மக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து புதிய தேசியக் கல்வியின் கொடுமையை விளக்கினார். ஆளுநரின் எல்லை எது என்பதை சுட்டிக்காட்டினார்.
இறுதியாக நிகழ்ச்சியை அனைவரும் இணைந்து இவ்வளவு சிறப்பாக அமைத்துக் கொடுத்ததை பாராட்டும் வண்ணம் அமைச்சர், திருமா, ரவிக்குமார், பெண் கவுன் சிலர்கள் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
நிகழ்ச்சி முடித்து, அமைச்சரிடமும், எழுச்சித்தமிழரிடமும் சிறிது நேரம் உரையாடிவிட்டு, தமிழர் தலைவர் சென்னை புறப்பட்டார்.




No comments:
Post a Comment