சிதம்பரம் கோவிலை அரசு கையகப்படுத்தவேண்டும்! இலங்கையின் பாதிப்பு இந்தியாவிலும் ஏற்படும் வாய்ப்புண்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 12, 2022

சிதம்பரம் கோவிலை அரசு கையகப்படுத்தவேண்டும்! இலங்கையின் பாதிப்பு இந்தியாவிலும் ஏற்படும் வாய்ப்புண்டு!

எல்லோரும் படிக்கவேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருக்கவேண்டும்
ஆனால், எல்லோரும் படிக்கக்கூடாது என்பதே ஒன்றிய அரசின் கொள்கை!
நீட், க்யூட் தேர்வு என்பதெல்லாம் இதற்காகவே!
'சன் நியூஸ்' தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி

புதுவை,ஏப்.12- சிதம்பரம் கோவிலை அரசு கையகப் படுத்தவேண்டும்; இலங்கையின் பாதிப்பு இந்தியா விலும் ஏற்படும் வாய்ப்புண்டு; எல்லோரும் படிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்; ஆனால், எல்லோரும் படிக்கக்கூடாது என்பதே ஒன்றிய அரசின் கொள்கை! நீட், க்யூட் தேர்வு என்பதெல்லாம் இதற்காகவே! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 'சன் நியூஸ்' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

நீட் எதிர்ப்பு, புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் பறிப்பு எதிர்ப்புப் பிரச்சார பயணக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுவைக்குச் (11.4.2022)  சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  'சன் நியூஸ்' தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அவ்விவரம் வருமாறு:

க்யூட் தேர்வால் நம்முடைய
 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

செய்தியாளர்: நீட் தேர்வைத் தொடர்ந்து ஒன்றிய அரசு தற்பொழுது க்யூட் தேர்வை கொண்டு வந்தி ருக்கிறது; மத்திய பல்கலைக் கழகத்தில் சேருகின்ற நம்முடைய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

 தமிழர் தலைவர்: புதிய தேசியக் கல்வி கொள்கை என்ற பெயராலே மீண்டும் ஒரு குலதர்மக் கல்வி திணிக்கப்படுகிறது.

நீட் தேர்வு என்பதின் மூலமாக அகில இந்தியாவிற்கும் ஒரே தேர்வு என்று, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான ஓர் அமைப்பை ஏற்பாடு செய்து, அது இன்றைக்கு நம்முடைய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, பலி பீடமாக்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அதற்கு மேலே ஒரு சுமையை ஏற்றி வைப்பதுபோல, க்யூட் என்று சொல்லக்கூடிய தேர்வை, பல்கலைக் கழகங்களில், தேசிய கல்விக் கொள்கை என்ற அடிப்படையில் திணித்து வருகிறார்கள்.

கல்விக் கூடங்கள் வெறும்
கோச்சிங் சென்டர்களாக மாறுகின்ற சூழல்!

12 ஆம் வகுப்புவரை படித்தவர்களுக்கு, 90 விழுக் காடு மாநிலக் கல்வித் திட்டத்தின்கீழ் படித்தவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு மதிப்பு கிடையாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அதனை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டோம்; தனியாகத்தான் தேர்வு எழுதவேண்டும் என்று, கோச்சிங் சென்டர்களை வளர்ப்பதற்கு, கல்விக் கூடங்களையெல்லாம் வெறும் கோச்சிங் சென்டர்களாக ஆக்கக்கூடிய சூழ்நிலையைக் கொண்டுவருவதினால், ஏழை, எளிய மாணவர்கள் மேலே வர முடியாது.

இந்தக் கல்வித் திட்டத்தில், பொதுத் தேர்வு மூன்றாம் வகுப்பு, அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, பதினொன்றாம், பனிரெண்டாம் வகுப்பு என்று வந்த பிறகும், 12 ஆம் வகுப்பில் வாங்குகின்ற மதிப் பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது - நுழைவுத் தேர்வுதான் என்று சொன்னால், இவ்வளவு பெரிய கொடுமை இந்திய வரலாற்றில் கிடையாது.

இரண்டாவது, அரசமைப்புச் சட்டத்தில், 21-ஏ என்ற அடிப்படை உரிமை - ஜீவாதார உரிமை அடிப்படையில் அனைவருக்கும் கல்வி என்று 12 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தப்பட்டது.

கல்வி என்பது பிறப்புரிமை என்று
ஆக்கப்பட்டதற்கு நேர் எதிரானது

அதில், 6 வயதிலிருந்து 14 வயதுள்ள பிள்ளைகள் அத்தனை பேருக்கும் கட்டாயமாக அவர்களுக்கு இலவச கல்வி கொடுக்கவேண்டும். கல்வி என்பது பிறப்புரிமை என்று ஆக்கப்பட்டதற்கு நேர் எதிரானது.

அனைவருக்கும் கல்வி கொடுப்பதைவிட, அனைவரும் கல்வி பெறாமல் தடுப்பதற்கு என்ன வழி என்பதுதான் - திறக்கப்பட்ட கதவுகளை மூடுகின்ற சூழ்நிலைதான் க்யூட் தேர்வு.

பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற
மாணவர்களுக்குக்கூட மதிப்பில்லாத ஒரு சூழல்

இதனால் பலனடையக்கூடியவர்கள் மேல்தட்டு மக்கள்தான் - அடித்தளத்தில் இருக்கக்கூடியவர்கள், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், கிராமப்புறங்களில் இருக்கக்கூடியவர்கள் - பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக்கூட மதிப்பில்லாத ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

நம்முடைய மாணவர்களின் கல்விக் கண்ணைக்  குத்தக்கூடிய கண்ணிவெடி இந்த க்யூட் தேர்வு என்பது.

இரண்டாவதாக, தேர்வு நடத்துகின்ற உரிமை அரசமைப்புச் சட்டப்படி பல்கலைக் கழகத்திற்கு மட்டும்தான் உண்டு. அதற்கு ஒரு தனி அமைப்பை உருவாக்குவது என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. Un Constitutional, Anti Constitutional.

சிதம்பரம் நடராஜன் கோவிலை
அரசு நிர்வகிக்க தமிழ்நாடு அரசை வற்புறுத்துவீர்களா?

செய்தியாளர்: தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை சார்பில் கோவில்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சிதம்பரத்தில் உள்ள நடராஜன் கோவில், ஒரு சாராரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது; இந்தக் கோவிலை தமிழ்நாடு அரசு நடத்தவேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் வலியுறுத்துவீர்களா? அதற்கான ஆலோசனைகளை சொல்வீர்களா?

 தமிழர் தலைவர்: திராவிடர் கழகம்தான் முதன்முதலில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, அதற்காக ஒரு பெரிய ஊர்வலம் நடத்தி, அங்கே இருந்த துணை ஆட்சியரிடம் மனு கொடுத்து, அதற்கு அறநிலையப் பாதுகாப்புத் துறை - நீதிமன்றத் தீர்ப்புகளையெல்லாம்பற்றி எடுத்துச் சொல்லி, சிதம்பரத்தில் உரையாற்றிய என்னுடைய உரை ''சிதம்பர ரகசியம்'' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.

வெள்ளைக்காரராக இருக்கக்கூடிய நீதிபதி ஷெப்பர்டு, நீதிபதி முத்துசாமி ஆகிய இருவரும் அளித்த தீர்ப்பில், அந்தக் கோவில் அரசுக்கு உரியதே தவிர, தனிப்பட்ட தீட்சதர்களுக்கு உரியதல்ல என்று அளித்தனர்.

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, அந்தக் கோவிலை அரசாங்கமே நடத்தும் என்று அறிவித்தார்.

அதற்கு முன்பு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபொழுதும்,  அதற்கு முன்பு பல அரசுகள் முயற்சி செய்தது - நூறு ஆண்டுகளாக வழக்கும் நடைபெற்றது. கடைசியாக கலைஞர் அவர்கள் அதற்கு ஒரு தீர்வு கண்டார்.

அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் முடிவை எதிர்த்து, தீட்சதர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி அவர்கள் தெளிவான தீர்ப்பளித்தார்.

அதற்குமேலும் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீடும் சரியான தீர்ப்பை வழங்கியது.

தீட்சதர்களின் கைவசம் இருந்த நடராஜன் கோவிலில் வந்த ஏராளமான வருமானங்கள் எல்லாம் தனிப்பட்டவர்களின் கைகளுக்கே சென்றது. உண்டியல் வசூலும் தவறாகக் கணக்குக் காட்டப்பட்டது.

அறநிலையத் துறை பாதுகாப்பில் வந்ததும், சரியானபடி கணக்குக் காட்டப்பட்டது.

இவை அத்தனையும் சிறப்பாக நடந்து வந்த நேரத்தில், திட்டமிட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குச் சென்று, மற்றவர்களுக்கு வாய்ப்பே கொடுக்காமல், தீட்சதர்களுக்குச் சார்பாக தீர்ப்பளிக்கக்கூடிய ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்பொழுதுதான் ஆறுமுகசாமி போன்றவர்கள் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு இடம் கொடுக்க முடியாத அளவிற்குப் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டன. இப்பொழுதும் அந்தப் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.

நல்ல அளவிற்கு மீண்டும் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி, நடராஜன் கோவில் மீண்டும் மக்கள் உடைமையாக ஆக்கப்படவேண்டும்.

அபகரிக்கப்பட்ட கோவில் சொத்துகளை மீண்டும் அரசு இப்பொழுது கையகப்படுத்துகின்றது. தனிப்பட்ட கோவிலுக்குரிய சொத்துகளை அபகரித்தால், அதனை கையகப்படுத்துகிறார்கள். ஆனால், நடராஜன் கோவில் அபகரிக்கப்பட்ட சொத்து; ஆகவே, அதற்கு விரைவில் தீர்வு காணவேண்டும்.

சிதம்பரத்தில், கட்சி வேறுபாடில்லாமல், அனைத்துத் தரப்பினரும் உறுதியாக இருக்கிறார்கள். இது கடவுள் நம்பிக்கை பிரச்சினை அல்ல; இது உரிமைப் பிரச்சினையாகும். 

ஆகவேதான், இந்த ஆட்சி விரைவில் அதனை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகம் வலியுறுத்தும். விரைவில் சிதம்பரத்தில் அனைத்துக் கட்சியினரையும் அழைத்து - ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் - பிரச்சாரம் - ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கின்றோம்.

முதலமைச்சர் ரங்கசாமி
 ஆட்சிக்கு ஆபத்தா?

செய்தியாளர்: பாண்டிச்சேரியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள். ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த அறிவிப்புகள் செயலுக்கு வரவில்லை. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் வந்தால், என்.ஆர்.காங்கிரசை கழற்றிவிட்டுவிட்டு, பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என்று சொல்லியிருக்கிறார்களே, இது முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சிக்கு ஆபத்தா?

 தமிழர் தலைவர்: நீங்கள் சொன்னீர்கள், வாக்குறுதிகள் நிறைய கொடுத்தார்கள்; ஆனால், செயல்படுத்தவில்லை என்று. அது மோடி வழி - 15 லட்சம் ரூபாய் பொத்தென்று ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் வந்து விழும் என்று பிரதமராக ஆவதற்கு முன்பு வாக்குறுதி கொடுத்தார்.

ஓர் ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று சொன்னார்.

அவர் பிரதமராகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. எட்டு ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கவேண்டும்.

ஆனால், என்ன ஆனது?

வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கைதான் பல கோடியாக பெருகியிருக்கிறது.

ஆகவே, அவர்களைப் பொறுத்தவரையில், இந்த சூழல் என்பது, மோடி வழியைப் பின்பறுவதுதான். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திசை திருப்புவது.

விலைவாசியைக் குறைப்போம் என்று சொன்னார்கள்; இன்றைக்கு விலைவாசி விண்ணை முட்டுகிறது; டீ உள்பட அனைத்தும் விலையேறி இருக்கின்றன.

ஆகவேதான், அந்த வழியைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் சொல்வதற்கும், செய்வதற்கும் சம்பந்தமேயில்லை.

குஜராத் முதலமைச்சராக இருந்தபொழுது மோடி அவர்கள், ஜி.எஸ்.டி.யைக் கண்டித்தவர். நீட் தேர்வை எதிர்த்தவர்.

இப்படி எல்லாவற்றையும் எதிர்த்தவர், பிரதமராக வந்தவுடன், அதற்கு முற்றிலும் நேர் விரோதமாக செயல்படுகிறார்.

புதுவையில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்பதற்காக, தங்களிடம் இருக்கின்ற அமுலாக்கத் துறையை, சி.பி.அய்.யைப் பயன்படுத்தினார்கள்.

அப்பொழுதும் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. ரங்கசாமிக்கு எந்த 'சாமி துணை நிற்கும்' என்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறார்.

ஏற்கெனவே அவர்மீது காவி சாயத்தை முழுமையாகப் பூசிவிட்டார்கள்; இன்னும் கொஞ்சம்தான் பாக்கி.

புதுச்சேரி மக்கள் இதனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் விரைவில் ஒரு மாற்றத்தை சந்திக்கவேண்டிய கட்டாயம் அவர்கள்மீது திணிக்கப்படுகிறது.

இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிபோல
இந்தியாவிற்கு ஏற்படுமா?

செய்தியாளர்: இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை தொடர்ச்சியாக ஏறிக்கொண்டே வருகிறது. இந்த விலையேற்றத்தைப் பார்க்கும்பொழுது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிபோல, இந்தியாவில் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? உங்கள் கருத்து என்ன?

 தமிழர் தலைவர்: பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின் என்பது வள்ளுவர் குறள்.

மயில் இறகை அளவிற்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால்கூட அச்சு முறியும் என்று சொல்லியிருக்கிறார்.

அதுபோன்று, விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது; பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது அனைத்துப் பொருள்களுக்கான அடிப்படையான ஏற்றமாகும்.

ஒரு பெரிய மாற்றம் என்னவென்று சொன்னால், விலைவாசி ஏற்றத்தின்கூடவே, பணவீக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னராக இருப்பவர், இந்தியத் தலைமை வங்கியினுடைய பொறுப்பாளராக இருக்கக்கூடிய அதிகாரி இதனைக் கவலையோடு தெரிவித்திருக்கிறார்.

நாளுக்கு நாள் பணவீக்கம் - ரூபாய் மதிப்பு என்பது குறையக்கூடிய அளவில் இருக்கிறது.

புயல் அழுத்தம் கொண்டிருக்கிறது - இந்த இடத்தில் புயல் மய்யம் கொண்டிருக்கிறது என்று சொல்வார்கள் அல்லவா - அதுபோல, இலங்கையில் புயல் வீசிக் கொண்டிருக்கிறது - இந்தியாவில் மய்யம் கொண்டிருக்கிறது.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 'சன் நியூஸ்' தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment