பரப்புரைப் பயணம் வெல்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 12, 2022

பரப்புரைப் பயணம் வெல்க!

பாவலர் வெற்றிப்பேரொளி, திருக்குவளை

போர்முரசம்  அதிர்கிறது!  வீதி  யெங்கும்

      புறப்பாட்டுப்  பேரொலிப்பு!  புத்தெ  ழுச்சி!

ஊர்கெடுக்கும்  "புதியகல்விக்  கொள்கை"  மற்றும் 

      உயிர்பறிக்கும்  கெடு" நீட்டுத்  தேர்வு"த்  தீய்ப்பு 

பேர்விளங்கும்  "தமிழ்மண்ணின்  உரிமை  மீட்பு"ப்

      பெரும்பயணம்!  வெல்பெரியார்   கொள்கை  தன்னில் 

வேர்கொண்ட  வீரமணி  தொடங்கி விட்டார்!

      வீறுகொண்டே  எழுந்ததுகாண்  தமிழர்  நாடு!


தொண்ணூறாம்  அகவைதனில்  கொடிசு  மந்து 

      துடிப்போடு  களமாடும்   இளையோன்!  மூத்தத் 

தொண்டர்க்குத்  தொண்டனிவன்  தூயன்!  கொண்ட 

      துயர்துடைக்கப்   படைநடத்தும்   தலைமை  வீரன்! 

பண்டுழைத்த  பெரியாரின்  வடிவம்!  நம்மின் 

      பண்பாட்டுக்  காவலரண்!  திராவி  டத்தார் 

' தண்டுவடம் ஆசிரியர்'   வழிந  டப்போம்!

      தலைகொடுத்தும்   தமிழகத்தைக்  காத்து  நிற்போம்!


புதியகல்விக்  கொள்கையெனும்  ஒன்றி  யத்துப் 

     புதைகுழியில்  வீழாமல்  தடுப்ப   தற்கும் 

கொதிநெருப்பில்  மாணவரை  வேக   வைக்கும்  

      கொடியநீட்டுச்  சட்டமதை   எதிர்ப்ப   தற்கும்

சதிசெய்து   மாநிலத்தின்   உரிமை   யெல்லாம்  

      தன்னிடத்தில்  குவித்திருக்கும்  தில்லிக்  கூட்ட

அதிதிமிரை   அடக்கியதை   மீட்ப   தற்கும்

       "ஆசிரியர்"  நடத்திவரும்  பயணம்  வெல்க!


வரவேற்றுத்  தோரணங்கள்  கட்டு! தோழி!

      வாழ்த்தொலியால்  விண்ணதனை  முட்டு! நம்மின் 

வரலாற்றைத்  திருத்தவரும்  பயணம்!  தோழா!

      வரும்பகைக்கே  அணைபோடும்  தருணம்!  வாவா!

கரங்கோத்து  நாமிணைவோம்  ஒன்றாய்!  காக்கும் 

      கருஞ்சட்டைப்  பட்டாளம்  நன்றாய்!  காணும் 

பரப்புரையாம்  பயணமதன்  வெற்றிச் சேதி! 

      பார்குலுங்க  எதிரொலிக்கும் இமயம் மோதி!


No comments:

Post a Comment