மக்களின் தண்டனையை ஏற்க பா.ஜ.க. தயாரா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

மக்களின் தண்டனையை ஏற்க பா.ஜ.க. தயாரா?

"நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியே இருக்க வேண்டும் என்றும், இந்திதான் நாடாளுமன்றத்தின் அலுவல் மொழி என்றும், பல வட மாநிலங்களில் இந்தி மொழியை ஆட்சி  மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் - எனவே  ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை, நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதுடன்,  இந்தி உள்ளூர் மொழிகளுக்கு மாற்று அல்ல என்றும் கூறியுள்ளார்.

மேலும், "அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது" என்று வலியுறுத்தியவர்,  ஒன்றிய  அமைச்சரவையின் 70 சதவீத  நிகழ்ச்சி  நிரல் இந்தியில்தான் தயாரிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு இந்தி மொழியில் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். நாட்டின் குடிமக்கள் பேசும் மொழி ஒரே மொழியாக இருக்கும்போது - அது இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும் என கூறிய அமித்ஷா,  வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்களின், தொடர்பு  மொழியாகவும் இந்திதான் இருக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டார்.

அமித்ஷாவின் பேச்சு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழ்நாடு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி "இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது நாட்டிற்குப் பலவீனம் அல்ல" என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு இதுபோல இந்தித் திணிப்பு குறித்து அமித்ஷா பேசும்போது, இது சர்ச்சையான நிலையில், அப்போதே ராகுல்காந்தி, அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்ததுடன், இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது பலவீனம் இல்லை என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எதற்கெடுத்தாலும் காங்கிரசின்மீது பழி போட்டுத் தப்பிப்பது பா.ஜ.க.வின் வழமையாகி விட்டது. அந்த விவாதப்படி பார்த்தாலும் காங்கிரஸ் தவறு செய்து விட்டது என்பதற்காகத் தானே அவர்களை ஆதரிக்காமல், ஆட்சியில் பா.ஜ.க.வை அமர வைத்துள்ளனர்.

அதே தவறினை பா.ஜ.க.வும் செய்தால், மக்கள் பா.ஜ.க.வையும் தண்டிக்கத்தானே செய்வார்கள். அந்தத் தண்டனையை ஏற்க பா.ஜ.க. தயாராகிவிட்டது என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்மையைச் சொல்லப் போனால் இந்தி ஒன்றும் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழியல்ல - இந்தியிலேயே பல பிரிவுகள் - ஒன்றுக்கொன்று தொடர் பற்றவை.

சிங்கப்பூரில், சீனம், மலேயா, தமிழ், ஆங்கிலம் - அனைத்தும் ஆட்சி மொழியாக இல்லையா?  அறிவியல் வளர்ந்த இந்தக் கால கட்டத்தில் ஒரு நொடியிலேயே மொழியாக்கம் என்ற நிலை ஏற்பட்டு விடவில்லையா?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்  இந்தித் திணிப்பு என்பது - ஒரு கலாச்சார திணிப்பே!

ஆச்சாரியார் (ராஜாஜி) 1937-1939இல் சென்னை மாநில பிரதமராக இருந்தபோது இந்தியைத் திணித்தார். அப்பொழுது லயோலா கல்லூரியில் பேசும்போது "சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வரவே முதற்கட்டமாக இந்தியைக் கொண்டு வந்துள்ளேன்" என்று கூறவில்லையா?

ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் இந்தியா வின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதம்தான் என்று தனது நூலில்  (Bunch of Thoughts) (தமிழில்  - 'ஞானகங்கை') கூறவில்லையா? ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ். கட்சியாக இருப்பதால் சமஸ்கிருதக் கலாச்சாரத்தைத் திணிப்பதே அவர்களின் ஒரே நோக்கம், இதனை எதிர்த்து முறியடிப்போம்!

திராவிடர் கழகம், முன் வரிசையில் நிற்கும்!

No comments:

Post a Comment