நூல்களை வாசிப்போம்! நூலகங்களை நேசிப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

நூல்களை வாசிப்போம்! நூலகங்களை நேசிப்போம்!

பழக்கங்களில் சிறந்த பழக்கம் படிக்கும் பழக்கம். எவர் ஒருவர் இளமையிலேயே படிக்கும் பழக்கத்தை மேற்கொள்கிறாரோ, அவர் எதிர்காலத்தில் சிறந்த பண்பாளராக, சிந்தனையாளராக, ஒழுக்க சீலராக. ஒப்பற்ற தலைவராக தலைசிறந்த அறிஞரா கத் திகழ்வார். தோண்டத் தோண்ட நீர் ஊறுவதுபோல, படிக்கப் படிக்க அறிவு பெருகும். இளமையில் எந்தப் பழக்கம் மனதிற் படிகிறதோ அப்பழக்கம் அவரது இறுதி நாள்வரை தொடரும். ‘தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது பழமொழி. இளம்வயதில் புத்த கங்களோடு அய்க்கியமாகிவிடும் குழந் தைகள் எதிர் காலத்தில் நல்ல எழுத்தாற்றல் பெறுகிறார்கள் என்பது அறிஞர்களின் கணிப்பு.

படிக்கும் பழக்கம் என்பது மனித குலத் திற்குக் கிடைத்த நற்பேறு. எனவே, நாம் ஒவ்வொருவரும் இளமையிலேயே படிக் கும் பழக்கத்தை மேற்கொண்டு நற்பண்பு களை வளர்த்துக் கொண்டு. எதிர்காலத்தில் சிறந்த பண்பாளர்களாகத் திகழ்வோம். படிக்கும் பழக்கத்தினை இளம் வயதிலேயே மேற்கொண்டு, தங்களது எதிர்கால வாழ் வில் உலகம் போற்றும் ஒப்பற்ற தலைவராக விளங்கிய அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பார்ப்போம். 

அண்ணாவின் படிப்பாற்றல்

தமிழ்மண் காஞ்சியிலே பிறந்து தனது தளராத படிப்பாற்றலாலும் நற்பண்பினா லும், நாவன்மையினாலும், எழுத்தாற்றா லாலும் இளைஞர் களின் இதயங்கவர்ந்தவர். தமிழரின் பண்பை. மாண்பை உலகறியச் செய்தவர். படித்துப் பட்டம் பெற்று பொரு ளாதார மேதையாய்த் திகழ்ந்தவர். அவர் தான் அண்ணா. அவர் ஓர் அறிஞர். ஒரு பேச்சாளர் ஒரு நாடக ஆசிரியர், ஒரு நடிகர், ஒரு எழுத்தாளர், அனைத்திற்கும் மேலாக அவர் ஒரு மனிதநேயப் பண்பாளர். அண்ணா அவர்களை நாம் எங்கு பார்த்தாலும், எப்போது பார்த்தாலும், எந்த வொரு நிலையில் பார்த்தாலும் கையில் ஒரு புத்தகத்தோடுதான் காட்சியளிப்பார். எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டே இருப்பார். “கைக்கு அழகு காவியத்தோடு இருத்தல்” என்னும் புதுமொழிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். சென்னையில் புகழ்பெற்று விளங்கும் கன்னிமாரா பொது நூலகத்தில் உள்ள இலட்சக்கணக்கான நூல்களில் அவர் கைபடாத நூல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு. அங்குள்ள நூல்கள் அனைத்தையும் படித்தவர் என்னும் பெருமைக்கு உரியவர்.

வாழ்வு முடிவதற்குள் வாசித்து முடித்த சாக்ரட்டீஸ்

உலகப் பேரறிஞரும், தத்துவ ஞானியு மான சாக்ரடீஸ் கிரேக்க நாட்டில் உள்ள ஒரு மிகப் பெரிய சிறையில் அடைக்கப்பட்டி ருந்தார். அவர் தனக்கு மரணத்தண்டனை விதிக்கப்படும் நாளை எதிர்பார்த்துக் காத் திருந்தார். அந்த நாளும் வந்தது.

அச்சிறைச்சாலையில் அவருடன் மற் றொரு குற்றவாளியும் அடைக்கப்பட்டு இருந்தான். ஆனால், அவன் மரணத் தண் டனைக் கைதியல்ல. அவன் மனதில் என்ன நினைத்தானோ தெரியவில்லை. உற்சாக மிகுதியால் ஓர் இனிமை யான பாடலை மிக உரத்த குரலில் பாடத்தொடங்கினான். அப் பாடல் இனிமையாகவும், கருத் தாழம்மிக்கதாகவும் இருந் தது.

அப்பாடலைக் கேட்ட சாக்ரட்டீஸ் மீண்டும் ஒருமுறை அப்பாடலைத் தனக்காகப் பாடுமாறு அவனிடம் கேட்டுக் கொண்டார். அதைக்கேட்ட அக்கைதி உரக்கச் சிரித்தான். பிறகு அவரை ஏளனமாகப் பார்த்து ‘நீயோ ஒரு மரண தண்டனைக் கைதி. இன்னும் சிறிது நேரத்தில் பரிதாபமாகச் சாகப்போகிறாய். அப்படி இருக்க உனக்குப் பாடல் ஒரு கேடா? ஆமாம் தெரியாமல்தான் கேட்கி றேன். இப்பாடல் உனக்கு எந்தவிதத்தில் பயன்படப்போகிறது? எனக்குக் கொஞ்சமும் விளங்கவில்லையே” என்றான்.

தன்பேச்சை மேலும் தொடர்ந்த அவன் “நீ வாழப் போகிறவன் என்றால் உனக்கு அப்பாடலை நான் மீண்டும் பாடிக்காட் டலாம். அதனால் ஒரு நன்மையும் உண்டு. ஒருவேளை நீ இந்தப் பாடலைப் பாடினால், அதைக் கேட்கும் பிறர் இந்தப் பாடலை எங்கிருந்து கற்றாய்? உனக்கு அதைக் கற்பித்தவன் யார்? என்று கேட்கக்கூடும். அவ்வாறு அவர்கள் கேட்கும் பட்சத்தில் நீயும் சிறையில் இருக்கும் என்னிடம் கற்ற தாகக் கூறலாம். அதன்மூலம் உனக்குப் பெருமை ஏற்படுவதோடு, அப்பாடலை உனக்குக் கற்பித்த எனக்கும் பெருமை ஏற்படும். சாகப்போகிற உனக்கு பாட்டு எதற்கு?” என்று அவன் அவரை மேலும் கிண்டலும் கேலியும் செய்தான். இதனை அமைதியாகக் கேட்ட சாக்ரட்டீஸ் பின்வருமாறு கூறினார்.

‘நான் இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவேன் என்பது எனக்குத் தெரியும். இறப்பதற்குள் இந்த ஒரு புதிய விஷயத்தை நான் கற்றுக் கொள்வதன் வாயி லாக, இன்னும் சிறிதளவு கூடுதலாக அதிக அறிவு ஏற்படுமே! அதனால்தான்” என்றார். தான் இறக்கும் போதுகூட, ஒரு புதிய விஷயத்தைத்தெரிந்து கொண்டு இறக்க வேண்டும் என்ற சாக்ரட்டீஸின் அறிவுத்தாகம் அக் கைதியை மட்டுமல்ல நம்மையும் அல்லவா அயர வைக்கிறது.

அறிவுலக மேதை சாக்ரட்டீஸ் மரண தண்டனை பெற்று, மறுநாள்  சாக இருக் கிறார். அன்றே அவருக்குக் கடைசி இரவு. சிறைக் கொட்டடியில் மங்கிய ஒளியில் மாய்ந்து மாய்ந்து படித்துக் கொண்டு இருந்தார். அதைக்கண்ட சிறைக்காவலன் “அய்யா! நீங்கள்தான் நாளை இறந்துவிடப் போகிறீர்களே! அப்படியிருந்தும் சாவைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் விழுந்து விழுந்து படித்துக் கொண்டு இருக் கிறீர்களே. இது உங்களுக்குத் தேவை தானா? என்றான். அதைக் கேட்ட சாக்ரட்டீஸ் “ஆம் அய்யா! நான் சாவதற்கு இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. அதற்குள் இந்த நூலை நான் படித்தாக வேண்டும். அதற்காகத்தான் அப்படிப் படிக்கிறேன். நாளை நான் செத்துப்போனால் மீண்டும் இந்நூலை நான் படிக்கமுடியாது அல்லவா? என்றாராம் அந்த அறிவுலக மேதை.

No comments:

Post a Comment