ஈரோடு, கரூரில் தமிழர் தலைவர் ஆற்றிய இனமான உரை
ஈரோடு,ஏப்.20- சமஸ்கிருதம் செத்துப்போன மொழியாக இருந்தாலும் தேவபாஷை, எம்மொழி, மூத்த செம்மொழியாக இருந்தாலும் நீஷ பாஷையா? என்று பரப்புரைப்பெரும் பயணப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புக்கான பரப்புரை பெரும் பயணப் பொதுக்கூட்டம் நேற்று (20.4.2022) ஈரோடு மற்றும் கரூரில் நடைபெற்றது.
சமூக நீதிக்களத்தில் தமிழ்நாடு
நாடுமுழுமைக்கும் சமூகநீதிக்கான வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. நீதிக்கட்சி தொடங்கி திராவிடர் கழகத்தின் தொடர் போராட்டங்களாலும், திராவிட இயக்க ஆட்சியினாலும் தமிழ்நாட்டில் சமூக நீதிக்கொடி பறந்துகொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சமூகநீதியை வென்றெடுப்பதில் தந்தைபெரியார், அன்னை மணியம்மையாரைத் தொடர்ந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் தொடர்ந்து களம் கண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் நாடு முழுமைக்கும் மண்டல் குழு அறிக்கையை வெளியிடச்செய்யவும், பின்னர் அதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பல்வேறு மாநாடுகளையும், போராட்டங்களையும் நடத்தினார். நாடுதழுவிய அளவில் நாடாளுமன்ற உறுப் பினர்கள், சமூகநீதிக்கான பல்வேறு அமைப்புகளையும், கட்சிகளின் தலைவர்களையும் ஒருங்கிணைத்து மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த களங்கள் பல கண்டு சமூக நீதியை நிலைநாட்டினார். அதன்பின்னரே ஒன்றிய அரசின் துறைகளில் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடாக 27 விழுக்காடு நடைமுறைப்படுத்தப் பட்டது.
சமூக நீதிக்காவலர் விபிசிங் பிரதமராக பொறுப்பேற்று, மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தி பிற்படுத்தப்பட்டவர் களுக்கான இடஒதுக்கீட்டை அளித்தார். இந்துக்களுக்கான கட்சி என்று கூறிக்கொள்ளும் பாஜக அன்று சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது. தம்முடைய ஆட்சியையும் இழந்தாலும், சமூக நீதியை நிலைநாட்டுவதில் விபிசிங் உறுதி காட்டினார். ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப் பட்டவருக்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, முத்தமிழறிஞர் கலைஞர் ஆதரவில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அன்றைய காங்கிரசு கட்சியின் ஒன்றிய அமைச்சர் அர்ஜூன்சிங் உத்தர வால் ஒன்றிய அரசின் கல்விநிறுவனங்களிலும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
சமூகநீதியைப்பெறுவதிலும், அதனைத் தொடர்ந்து கட்டிக்காத்து வளர்த்தெடுப்பதிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புடன் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்புடன் கழகம் முன்னெடுக்கும் போராட்டக் களங்கள்தாம் தமிழ்நாட்டில் சமூகநீதிச் சுடரை அணையாமல் காத்து வருகிறது. மேலும் சமூகநீதியின் வெளிச்சம் நாடுமுழுமைக்கும் பரவிட வழிகாட்டியாகவும் தமிழர் தலைவர் தலைமையிலான திராவிடர் கழகம் தொண்டாற்றி வருவதை அனைத்து தலைவர்களும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
சமூக நீதிக்கு எதிரான பாஜக
மண்டல் அறிக்கை அமல்படுத்தப்பட்டபோது, அன்று கலவரத்தை தூண்டிவிட்ட பாஜக இன்றும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு, ஒடுக்கப்பட்டோருக்கு எதிராகவே, சமூக நீதிக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. ஆட்சி, அதிகார ஆணவப்போக்குடன் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் அவ்வப்போது இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
மருத்துவக்கல்வியில் ஒன்றிய பாஜக அரசால் திணிக்கப்படுகின்ற நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலைப்பெற்றுத் தராமல் கிடப்பில் போட்டு வருகிறது. அதன்மூலம் ஒன்றிய அரசு, ஆளுநர்மூலம் மாநில சுயாட்சியைக் கேள்விக்குரியதாக்கி மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது.
நீட் தேர்வின் முறைகேடுகள்
முறைகேடுகளின் மொத்த உருவமாக நீட் தேர்வு அம்பலப்பட்டு வருகிறது. தேர்வெழுதும் அறைக்குள் செல்லும் போதே சோதனை என்கிற பெயரால் நீட் தேர்வு நடைமுறைகள் மாணவர்கள், மாணவியருக்கு பெரும் மன உளைச்சலை ஏற் படுத்தியது. வடமாநிலங்களில் 12ஆம் வகுப்புக்குரிய தேர்வை எழுதாமலேயே நீட் தேர்வு எழுதுவதும், பழைய மாணவர்கள் பல முறை நீட் தேர்வை எழுதுவதும், நீட் பயிற்சி வகுப்புகள் என்று கார்ப்பரேட் மய பயிற்சிக் கட்டணக் கொள்ளைகள், முறைகேடுகளின் மொத்த உருவமாகவே நீட் தேர்வு உள்ளது.
தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்கள்
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டங்களை ஒரு மனதாக நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்காமல் ஒன்றிய பாஜக அரசு அதிகார ஆணவப்போக்குடன் பிடிவாதம் காட்டி வருகிறது.
குலக்கல்வியின் மறுவடிவம் புதிய தேசிய கல்விக்கொள்கை
ராஜகோபாலாச்சாரியாரால் கொண்டு வரப்பட்ட குலக் கல்வித்திட்டத்தை அப்பொழுது தந்தைபெரியார் தீவிரமாக எதிர்த்து விரட்டியடித்தார். ஆட்சியைவிட்டு ராஜகோபாலாச் சாரியார் ஓட்டம்பிடித்தார். தந்தைபெரியாரால் தமிழ்நாட்டின் ‘ரட்சகர்’ என்று பாராட்டப்பட்ட கல்வி வள்ளல் காமராசர் குலக்கல்வியை ஒழித்து, தமிழ்நாடெங்கும் கல்விநீரோடையைப் பரவச்செய்தார். அதன்விளைவாக கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு கல்வி உரிமை அளிக்கப்பட்டது.
தற்பொழுது அதே குலக்கல்வித்திட்டத்தை புதிய தேசிய கல்விக்கொள்கை என்கிற பெயரில் மீண்டும் திணித்திட ஒன்றிய பாஜக அரசு முனைப்பு காட்டிவருகிறது.
அரசியல் தளத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும், சமூக தளத்தில் திராவிடர் கழகத்தின் வழிகாட்டலில் அனைத்துக்கட்சியினர், அனைத்து அமைப்புகளும் தமிழ்நாட்டில் சமூக நீதியைக்காத்திட தொடர்ந்து களம் பல கண்டு வரும் நிலையில், ஒன்றியத்தில் ஆளும் பாஜக மனு தர்மத்தை, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் கல்வி உரிமை பறிப்பு, மாநில உரிமைகள் பறிப்புகளில் தீவிரம் காட்டிவருகிறது. இதன்மூலம் சமூகநீதிக்கான அணி என்றும், சமூக அநீதிக்கான அணி என்றும் நாடே இரு பிரிவாக காட்சி அளிக்கிறது.
நாடுமுழுமைக்கும் தேவைப்படும் ’திராவிட மாடல்’
அனைவருக்கும் அனைத்து என்பது திராவிட மாடலாக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. திராவிட மாடலே நாடுமுழுமைக்கும் தேவை என்கிற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கவிட்டது. சமூக நீதியை வென்றெடுப்பதில் நாடு முழுமைக்கும் தமிழ்நாடு வழிகாட்ட வேண்டும் எனும் குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. சமூக நீதியை நிலைநாட்டிட வடபுலத்துக்கும் தந்தைபெரியார் தேவை என்று வடமாநிலப் போராட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த காலக்கட்டத்தில் நாடுமுழுமைக்கும் சமூகநீதிக்கான இருபெரும் தலைவர்களான தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் தேவை அதிக அளவில் உணரப்பட்டு வருகிறது.
தமிழர் தலைவரின் பரப்புரைப் பெரும்பயணத்தின் தாக்கம்
இந்நிலையிலேயே நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புக்கான பரப்புரை பெரும் பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 3.4.2022 அன்று நாகர்கோயிலில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார். தமிழர் தலைவரின் இந்த பரப்புரைப் பெரும்பயணத்தின் தாக்கம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளி லெல்லாம் பரவி வருகிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை வரவேற்று பரப்புரைப்பெரும்பயணத்துக்கு அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் பேராதரவினை அளித்து வருகின்றனர்.
சென்னையில் 25.4.2022 அன்று நடைபெற உள்ள பரப்புரைப்பயணத்தின் நிறைவு நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
ஈரோட்டில் பரப்புரைப் பெரும்பயணம்
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணப் பொதுக் கூட்டம் நேற்று (19.4.2022) ஈரோட்டில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் மாவட்ட தலைவர் கு.சிற்றரசு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மா.மணிமாறன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட்டிணன், இரா.நற்குணன், பேரா.ப.காளிமுத்து, கோபி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன், மண்டலச் செயலாளர் கோபி.ராஜமாணிக்கம், கோபி மாவட்டத் தலைவர் என்.சிவலிங்கம், காப்பாளர் இரா.சீனிவாசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் டாக்டர் சக்திவேல், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சி.கிருட்டினசாமி , மாவட்ட அமைப்பாளர் சிவகிரி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் ஆகியோர் பரப்புரைப்பயணம் குறித்து விரிவாக உரையாற்றினார்கள்.
பரப்புரைப்பயணப்பொதுக்கூட்டத்தில் அறிவுச்செல்வி, நேரு ஆகியோருக்கு சுயமரியாதைத் திருமணம் ஒன்றை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங் கோவன் ஆசிரியரின் பயணத்தை வரவேற்று உரையாற்றினார்.
தமிழர் தலைவர் உரை
அதன் பிறகு தமிழர் தலைவர் பேசினார். முன்னதாக பேசிய ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பேசியதைக் குறிப்பிட்டு, ”சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவப் படிப்புக்கு மனு போட முடியும் என்றால், அன்றைக்கு எல்லோரும் சமஸ்கிருதம் படிக்க அனுமதி உண்டா?” என்றொரு கேள்வியைக் கேட்டு, “இல்லை” என்று பதில் சொன்னார். “பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் சமஸ்கிருதத்தைப் படிக்க முடியாது. - மனதளவில் இன்றைக்கும் அவர்கள் அப்படித்தான்” என்று பார்ப்பனர்களின் மனப்பாங்கை மக்கள் முன்வைத்தார். பேசிக்கொண்டிருந்தபோது, ஈரோட்டின் மேயர் மேடைக்கு வந்தார். அவரை வரவேற்றார். மேயர் ஆசிரியருக்கு ஆடை அணிவித்து மரியாதை செய்தார். பேச்சைத் தொடர்ந்த தமிழர் தலைவர், “பெரியார் பிறந்த மண்ணில், பெரியார் அமர்ந்த நாற்காலியில், அதுவும் ஒரு பெண் மேயராக அமர்ந்திருக்கிறார் என்றால் பெரியார் வெற்றி பெற்றிருக்கிறாரா? இல்லையா?” என்று கேட்டதும் மக்கள் , ஆம் பெற்றிருக்கிறார் என்பதைப்போல, பலமாக கைதட்டி அதை ஆமோதித்தனர். தொடர்ந்து, திருமணம் செய்து வைத்தோமே அது பெரியாரின் வெற்றிக்கனி! பெண் மேயர் என்பதும் வெற்றிக்கனி!” என்று கூறிவிட்டு, மனுதர்மம் பெண்கள் குறித்து என்ன சொல்கிறது என்பதையும் சேர்த்து விவரித்தார்.
தொடர்ந்து, சமஸ்கிருதம் பற்றி சொல்லவந்ததை தொடர்ந்தார். அதாவது, பாப்பனர்கள் தொடர் பிரச்சாரத்தின் மூலம், சமஸ்கிருதம் செம்மொழி தகுதி பெற்றிருந்தது என்று பொய் பிரச்சாரம் செய்து அனைவரையும் நம்ப வைத்திருந்த பெரிய மோசடியை அம்பலப்படுத்தினார். "கலைஞர் மூலம் தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்த பிறகுதான் அதற்குக் கிடைத்தது. கலைஞரும் அதை ஆட்சேபிக்கவில்லை” என்று திராவிட இயக்கத்தின் பெருந் தன்மையைச் சுட்டிக்காட்டி, ”இதுதாங்க, திராவிடம். நாம் சமஸ்கிருதத் திற்கு எதிரிகளல்ல.” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார்.
தொடர்ந்து, “ஆனால், அவர்களுக்கு தமிழ் நீஷ பாஷை” என்று சொல்லி பார்ப்பனர்களின் யோக்கியதையை விளக்கினார். மேலும் அவர்,.”மொழிக்கு தீட்டுன்னு சொன்னது இந்தியாவைத் தவிர வேறெங்கும் கிடையாது." என்று சொல்லி ஆரியத்தால் ஏற்பட்டிருக்கும் அவலத்தை வெட்டவெளிச்சம் ஆக்கினார்.” தொடர்ந்து, “அந்த சமஸ்கிருதத்தை தான் 102 ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவம் படிப்பதற்கு தகுதியாக வைத்திருந்தார்கள்” என்று பழைய வரலாற்றை இன்றைய நீட் விசயத்தோடு இணைத்துப் பேசினார்.
நீட்டும், புதிய தேசிய கல்விக் கொள்கையும் எப்படி அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; மாநில உரிமைக்கு எதிரானது என்பதை சொல்லிவிட்டு, ”நேரமின்மை காரணமாக ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். 21 A சட்டத்திருத்தம்,"The state shall provide free and compulsory education to all children of the age 6 to 14 years in such a manner as the state may by law determine" என்று இந்திய அரசமைப்புச் சட்டப்புத்தகத்தில் உள்ளதை படித்துக் காண்பித்தார். “இது திருத்தப்பட்டது மன்மோகன் சிங் தலைமையிலான யு.பி.ஏ அரசால். கலைஞர் அதில் அங்கம் வகித்தார்.” கல்விக்கு இவ்வளவு அருமையான சட்டத்திருத்தத்திற்கு காரணமாக திராவிடர் இயக்கம் இருக்கிறது என்பதையும் அவர் சொல்லத் தவறவில்லை. இப்படி படிப்பதற்காக இப்படியெல்லாம் செய்திருக்கும் போது, படிக்க கூடாது என்பதற்காக ஒரு கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்பதைச் சொல்லி, "இந்தத் திட்டம் சட்டத்திருத்தம் 21-ஏ இன் படி சட்டவிரோதமல்லவா?” என்று கேள்வி கேட்டு, ஆளுநரின் கடமையை சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, “பெற்றோர்களே, இந்தத் திட்டங்கள் எல்லாம் வந்தால், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு விடும். எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
இந்த பரப்புரை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசு கட்சி மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், ஈரோடு மாநகர மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் மக்கள் ராஜன், திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தமிழ்க்குமரன், பெரியார் வாசகர் வட்ட பொறுப்பாளர் வீரமணி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் காமராஜ் நன்றி கூறினார்.
தொடர்ந்து, தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அடுத்த நிகழ்வுக்காக கரூர் நோக்கிப் புறப்பட்டார்.
கரூரில் பரப்புரைப் பெரும்பயணம்
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் கரூர் குமரன் சிலை அருகில் மாவட்ட தலைவர் பத.குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில சட்டத்துறை துணை செயலாளர் மு.க.இராசசேகரன், த.த.கார்த்தி, உ.வைரன், சு.ராஜாமணி, ஜெகநாதன், பொம்மன், குமார், இராஜூ, தங்கம், அம்பிகா, குமார், செல்லத்துரை, சதாசிவம், ஆசிரியர் இராமசாமி, அலெக்ஸ் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் தம் உரையில் அதில், “எதைக்கொடுத் தாலும் கீழ் ஜாதிக்காரர்களுக்கு, பெண்களுக்கும் கல்வியைக் கொடுக்காதே” என்பதுதான் மனுதர்மம். இதிலிருந்து 102 ஆண்டுகளுக்கு முன்புதான் நாம் விடுதலை பெற்றோம். அதற்குக் காரணம் திராவிடர் இயக்கம்” என்று தொடங்கினார். சமூகம் மட்டுமல்ல, “தமிழ் செம்மொழியாக இருந்தாலும் நீச்ச பாஷை? சமஸ்கிருதம் செத்துப்போன மொழியாக இருந்தாலும் தேவ பாஷை. என்னய்யா கொடுமை இது?” என்று மனுதர்மத்தின் கொடுமையை மக்களிடம் எடுத்துரைத்தார்.
இன்னொரு முக்கியமான விசயத்தை தொட்டுக் காட்டினார். அதாவது, "அன்றைக்கு சமஸ்கிருதம் எல்லோரும் படிக்க முடியாது. இன்றைக்கு செத்த மொழியாக இருப்பதனாலே, அதை உயிர்ப்பிக்க படிங்க படிங்க என்று வற்புறுத்துகிறார்கள்” என்று அவாள்களின் அறிவு நாணயத்தை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, ”அன்றைக்கு சமஸ்கிருதம்; இன்றைக்கு நீட். இதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “இன்றைக்கு வெளிப்படையாக பள்ளிக்கூடத்தை மூட முடியாது. ஆகவே மாணவர்களை பள்ளிக்கூடங்களை விட்டு, விரட்டுவதற்காக நவீன குலக்கல்வி என்று சொல்லக்கூடிய புதிய தேசிய கல்விக் கொள்கை உள்ளது” என்றும் நம்மை மறுபடியும் 102 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு செல்ல முயலும்” என்றும், “கல்வியும், மருத்துவமும் மனிதனுக்கு அடிப்படைத் தேவை. அதைத்தான் சிதைக்க எண்ணுகிறார்கள்” என்றும் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தைச் சுட்டிக்காட்டினார்.
கல்வி, மருத்துவத்தில் தமிழ்நாடு மிகச்சிறப்பாக விளங்கக்கூடிய வகையில் அதற்கான அடிக்கட்டுமானம் திராவிட மாடல் ஆட்சியால் சிறப்பாக இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுவதையும், அதை இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மிகச் சிறப்பாக வழி நடத்துகிறார் என்றும் சொல்லி, "இறையாண்மை என்பது மக்களுக்குதானே தவிர மற்றவர்களுக்கல்ல” என்றார்.
திராவிடர் கழகத் தோழர்களின் சிறப்பைச் சொல்லும் போது, கரூர் கலவர வழக்கு என்று அன்றைக்கு பிரபலமாயிருந்த ஒன்றைச் சுட்டிக் காட்டி, "கரூர் வீரண்ணன் போன்ற முரட்டுத் தோழர்கள் போன்றவர் களால்தான் ஆச்சாரியார் பதவி விலகினார்” என்பதை சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து, இன்றைய முதலமைச்சர், தந்தை பெரியாரின் பிறந்த நாளை ‘சமூகநீதி நாள்’ என்று அறிவித்ததையும், அதன் உறுதி மொழியாக 'அனைவருக்கும் அனைத்தும்' என்றிருப்பதையும் சுட்டிக் காட்டி, திராவிடர் இயக்கம் தொடர்ந்து கல்விக்கும் மருத்துவத்திற்கும் கொடுத்துவரும் முக்கியத்துவத் தை எடுத்துரைத்தார். உலக சுகாதார மய்யம் இந்தியாவில் மோடியின் தவறான வழிகாட்டுதலால், கொரோனாவுக்கு 40 லட்சம் பேர் பலியானதாக சுட்டிக்காட்டியுள்ளது என்ற நடப்புச் செய்தியைக் கூறி, இவர்கள் செய்வதெல்லாம் மக்கள் விரோதம் என்பதற்கு மேலும் ஒரு சான்று காட்டினார்.
”தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், அதன் பெயரைக் கெடுப்பதற்காக ஆளுநர் மோதல் அரசியலை செயல்படுத்துகிறார்” என்றும், “ஆளுநர் வெறும் அம்புதான். எய்தவர்கள் வேறு” என்றும் குறிப்பால் உணர்த்தி, "ஆனாலும் திராவிடம் வெல்லும்! அதை நாளைய வரலாறு சொல்லும், சொல்லும், சொல்லும்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
பின்னர் தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனது பரப்புரை படை வீரர்களுடன் கரூரில் பாடி வீடமைத்தார்.
இந்த பரப்புரை கூட்டத்தில் கரூர் மத்திய கிழக்கு மாநகர தி.மு.க.செயலாளர் ஆர்.எஸ்.ராஜா, பேராசிரியர் விருது பெற்ற சுப.ராஜகோபால் , காங்கிரசு கட்சி மாவட்ட துணைத் தலைவர்கள் நாகேசுவரன், சின்னையன், வி.சி.க. மாவட்ட செயலாளர் ஜெயராமன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கண்ணதாசன், முனைவர் கடவூர் மணிமாறன், விடுதலை வாசகர் வட்ட துணை செயலாளர் கருவூர் கன்னல் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். டிவில் நகர செயலாளர் சதாசிவம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment