வங்கதேசம் உருவானதற்கு அடிப்படைக் காரணம் மொழிப் பிரச்சினைதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

வங்கதேசம் உருவானதற்கு அடிப்படைக் காரணம் மொழிப் பிரச்சினைதான்!

சிங்கப்பூரில் ஆட்சி மொழி ஆங்கிலம்; நான்கு மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம்!

ஒவ்வொரு கட்டத்திலும் ஹிந்தியை விரட்டி அடித்தது தமிழ்நாடு;

வரலாறு தெரியாமல் ஒன்றிய அரசு எரியும் நெருப்பில் விரலை வைக்கவேண்டாம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

மொழிப் பிரச்சினை உணர்வுப்பூர்வமான பிரச் சினை - ஒவ்வொரு கட்டத்திலும் ஹிந்தியைத் திணிக்கும் பொழுதெல்லாம் தமிழ் மண் கிளர்ந் தெழுந்து ஆதிக்க ஹிந்தியை விரட்டி அடித்துள்ளது. வரலாறு தெரியாமல் எரியும் நெருப்பில் விரலை விட வேண்டாம் என்று எச்சரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு.

உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், ஆங்கி லத்தை ஆட்சி மொழியிலிருந்து அறவே நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஹிந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது, நாட்டில் ஒரு பெரும் புயலையே கிளப்பி வருகிறது.

ஆட்சியாளர்கள் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை, கற்காவிட்டாலும்கூட - பாலபாடம் - எந்த நாட்டிலும், மக்களிடையே மிகவும் உணர்ச்சியைக் கிளப்பக்கூடிய பிரச்சினை - மொழிப் பிரச்சினையாகும் என்பதே!  (Most Sensitive Problem).

இதில் கை நுழைப்பது, கொழுந்துவிட்டு எரியும் தீக்குள் விரலை விட்ட விபரீதம் ஆகிவிடும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

வங்காளதேசம் உருவானது 
எந்த அடிப்படையில்?

இந்தியாவை விட்டு மத, கலாச்சார அடிப்படையில் பிரிந்த அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து, வங்காள தேசம் என்ற 'பங்களாதேஷ்' உருவானதற்கு எது அடிப்படை? வங்க மொழியை - அந்நாடு புறக்கணித்துவிட்டு, பெரும்பான்மை என்ற பெயரில் உருது மொழியை கிழக்கு வங்க மாநிலத்திலும் திணித்ததுதானே!

இதை மறந்து ஒரே நாடு, ஒரே மொழி (சமஸ்கிருதம், ஹிந்தி), ஒரே மதம் (பார்ப்பனர்களின் ஹிந்து மதம்), ஒரே கலாச்சாரம் (சமஸ்கிருத, ஆரிய வேத கலாச்சாரம்) என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஹிந்தி - சமஸ்கிருதத் திணிப்பை - நாட்டின்மீது திணிப்பது, நாட்டின் ஒற்றுமை - ஒருமைப்பாட்டுக்கு உலை வைப்பதாகாதா? 'புருட் மெஜாரிட்டி' என்று அதிகப் பெரும்பான்மை என்ற மணல்மேட்டில் கட்டடம் கட்டி மகிழலாமா? உள்துறை அமைச்சர்; ஒன்றிய ஆட்சியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். முதலிய பா.ஜ.க. பிரதமர் மோடி தலைமையில் ஜனநாயகம்மூலம் ஆட்சியைப் பிடித்து, அதனை அதிவேகமாக எதேச்சதிகாரமாக ஆக்கி வரு கின்றவர்கள் வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டிப் படிக்கவேண்டும்.

ஹிந்தியைத் திணித்த ஆச்சாரியாரே
பிற்காலத்தில் ஹிந்தியை எதிர்த்தாரே!

1938 இல் தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தைப் புகுத்து வதற்கு முன்னோட்டமாக ஹிந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்கினாரே, முன்னாள் கவர்னர் ஜெனரலும், சென்னை மாகாணப் பிரதமருமான (Premier)   ஸ்ரீமான் சி.இராஜகோபாலாச்சாரியார். அப்போது பழைய சென்னை மாகாணத்தில் - தமிழ்நாட்டில் மூண்ட எதிர்ப்பு அலை ஓயாமல்தான் உள்ளது என்பதை அறிந்ததோடு, அவரே தலைகீழாக மாற்றத்திற்குள்ளா னாரே!  Hindi Never   ஹிந்தியை ஏற்கமாட்டோம்;  English Ever எப்போதும் ஆங்கிலம்  என்று முழங்கினாரே!

1965-க்குப் பின்னர் - முந்தைய ஆட்சியினரின் ஹிந்தித் திணிப்பினால், தமிழ்நாட்டில் 1938, 1948-இன் தொடர்ச்சியாக 1965 ஆம் ஆண்டு மாணவர்கள் கையில் எடுக்கப்பட்ட ஹிந்தி எதிர்ப்பு - அதற்காகவே ஆட்சியை விரட்டி அடித்து 50 ஆண்டுகளுக்குமேலாகி விட்ட நிலையில்தான், ஆச்சாரியார் மனமாற்றமடைந்து ஹிந்தி எதிர்ப்பு பலத்த குரலைத் தந்தார்!

அவரைவிட இன்றைய ஒன்றிய ஆட்சியினர் ஆளுமையில், அனுபவத்தில் மேம்பட்டவர்களா?

'ஹிந்தியை பெரும்பான்மை மக்கள் பேசுகிறார்கள்' என்ற வாதம் அறிவுப்பூர்வமானதா? பன்மொழிகளும், பல கலாச்சாரங்களும் உள்ள ஒரு கூட்டாட்சியில், 'வேற்றுமையில் ஒற்றுமை'  (Unity in Diversity)  காண இப்படிப்பட்ட மொழித் திணிப்புகள் எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்பதை ஆட்சி - அதி காரம் படைத்துள்ள மத்தியில் உள்ளவர்கள் உணராமல், கூரைமீது ஏறி கொள்ளிக்கட்டையைச் சுழற்றலாமா?

சிங்கப்பூரைப் பாரீர்!

அண்டையில் உள்ள சிங்கப்பூர் நாட்டை 'நவீன சிங்கப்பூர்' ஆக்கிய அதன் தந்தை ஆளுமையின் அதி உச்சமான லீ குவான் யூ' அவர்கள் 'இருமொழிக் கொள்கை' என்று தனது அனுபவங்களை - ஆட்சி மொழிப் பிரச்சினையை அணுகிய விதம்பற்றி ஓர் அருமையான நூலை எழுதியுள்ளார். அதில் அவர் விளக்கிய கருத்துகளை அமித்ஷாக்கள் படித்து கற்கவேண்டும்.

''சிங்கப்பூர் நாட்டில் பெரும்பாலும் சுமார் 75 சதவிகித மக்கள் சீனர்கள்தான். எனவே, சிங்கப்பூர் நாட்டின் ஆட்சி மொழியாக சீன மொழியினையே வைக்க எனக்கு ஆலோசகர்கள் அறிவுறுத்தினர். நானும் தொடக்கத்தில் அப்படியே சிந்தித்தேன்.

ஆனால், மொழிப் பிரச்சினை ஒரு உணர்ச்சியைத் தூண்டும் பிரச்சினை - இதில் பெரும்பான்மை, சிறு பான்மை பார்க்காமல், அனைத்து மக்களின் உணர்வு களையும் மதிக்கவேண்டும்.

சிங்கப்பூர் நாட்டில் சீனமொழி, மலாய் மொழி, தமிழ் மொழி, யூரேஷிய மொழி (ஆங்கிலம்) போன்ற பல மொழிகள் உள்ளன. சீனமொழியை ஆட்சி மொழியாக் கினால் ஒரு சாராரின் ஏகபோகம் என்றே கருதப்படும்.

ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்கினால் அனைத்து மக்களுக்கும் வசதிக் குறைவு ஏதாவது ஏற்படுமானால், அது அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவ தினால் யாரும் அதிகம் பாதிக்கப்படமாட்டார்கள். அதேநேரத்தில், சீனம், மலாய், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளையும் அரசு உரிய முறையில் பயன்பாட்டில் வைத்துப் பாதுகாப்பும் கொடுக்க, அந்த மக்களின் கலாச்சாரத்தை மதித்து, குடிமக்களை 'சிங்கப்பூரியர்களாக்குவோம்''' என்று தீர்வு கூறினார்.

இது எவ்வளவு ஆக்கப்பூர்வ அறிவியல் அணுகு முறை!

இந்தியாவில் உள்ள 22 மொழிகளுக்கும்
சமவாய்ப்புத் தேவை!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் 'மொழிகள்' என்ற தலைப்பில் 22 மொழிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மொழிக்கு மட்டும் ஏன் இப்படி சிம்மாசனம்?

புழக்கத்தில் - பேச்சு வழக்கு, எழுத்து, புராதன மொழி - வாழும் மொழி - எம்மொழி செம்மொழி தமிழுக்கு உரிய மரியாதை இவ்வாட்சியில் கிடைக்கிறதா?

எனவே, நாட்டில் வேலை கிட்டாத நிலை, பண வீக்கம் - ஏறும் விலைவாசிகள், பரவிவிட்ட வறுமை, இப்படிப்பட்ட பிரச்சினைகளைப்பற்றி எல்லாம் கவ லைப்படாமல், ஹிந்தித் திணிப்பில் ஈடுபட்டால், அதற்கு ஆட்சியாளர்கள் கடும் விலையைத் தரவேண்டும் என்பதை உணர்ந்து - தமிழ்நாடு மட்டும் ஹிந்தியை எதிர்க்கவில்லை - பல மாநிலங்களிலும் அவர்கள் மொழி உணர்வை உரிமையெனக் கருதிடுகிறார்கள் என்ற உண்மையை ஏனோ உணர மறுக்கிறார்களோ - 'டில்லியில் ஆளும் நவீன ராஜாக்கள்' என்பதே நம் கேள்வி!

எனவே, மக்களின் உணர்ச்சி நெருப்போடு விளையாடவேண்டாம்!


 கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

11.4.2022

No comments:

Post a Comment