வாருங்கள், தோழர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

வாருங்கள், தோழர்களே!

கொளுத்தும் கோடையைக்

கொளுத்தி எறிந்து

கொள்கைப் பயணம் என்ற

குளிர் சோலையில் பயணித்த

குன்றாக் கொள்கையின்

குன்றின்மேல் விளக்குகளே!

உங்கள் கால்மலர்களுக்குக்

குனிந்து பெருமுத்தம்!

 

சமூகநீதியின் சங்கறுத்து

ஜாதி மேல் தட்டு மக்களைக்

குருதியால் குளிப்பாட்டும்

கோடரிகளின் செவிப் பறையை

கிழித்தெறியும் வேட்டு சத்த

பீரங்கி முழக்கமிட்டு

கிழக்கிருட்டை வெளுத்துக்கட்டி

கிடைச் சிங்கக் கூட்டமாய்

கர்ச்சனை செய்துவரும்

கால்களுக்கு ஒத்தடங்கள்!

 

உங்கள் பயண வலிகள்

கீழே கிடந்துழலும்

'கீழ் தட்டு' மக்களின்

வலிகளுக்கு மருந்தாகும்!

 

வைத்த அடியில்

சறுக்கல் இல்லை

பின்வாங்கும் பேச்சுக்கும்

இடமில்லை

கருஞ்சட்டை சரிதத்தில்

கண்டதில்லை தோல்வியைத்தான்

வெற்றி மாலையின்றி

வெறும் கழுத்திலும் வந்ததில்லை

 

உங்கள் பயணத்தின்

சலங்கை ஒலி

சரித்திரத்தின் மூலையெலாம்

சதுராடி பறையடிக்கும்

சந்திரனும் இறங்கி வந்து

சாதனைக்குக் கைகொடுக்கும்

சந்தனத்தை மார்பில் பூசும்!

வீர மணி என்ற பெயரோ

வீடு தோறும் ஒரு பிள்ளைக்கு

தட்டாமல் சூட்டப்படும்!

தாலாட்டுப் பாடலிலும் இடம்பெறும்!

 

வாருங்கள் தோழர்களே!

வரலாற்றுத் தோரணமாய்

வணக்கம் கூறி வாழ்த்தி

வரவேற்கிறோம்!

வாழ்க பெரியார் -

வளர்க ''திராவிட மாடல்!''

- கவிஞர் கலி.பூங்குன்றன் -

No comments:

Post a Comment