ஏப்ரல் 23 மட்டுமல்ல - எல்லா நாட்களும் நமக்குப் புத்தக நாட்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

ஏப்ரல் 23 மட்டுமல்ல - எல்லா நாட்களும் நமக்குப் புத்தக நாட்களே!

 தந்தை பெரியாரின் வழிகாட்டும் அறிவொளி பரப்பும் பணி இன்றும் இடைவெளியின்றித் தொடர்கிறது!

இளைஞர்களே, மாணவர்களே புத்தகங்களை வாங்கி புதுவெளிச்சம் பெறுவீர்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் உலக புத்தக நாள் அறிக்கை

ஏப்ரல் 23 மட்டுமல்ல - எல்லா நாட்களும் நமக்குப் புத்தக நாட்களே!  தந்தை பெரியாரின் வழிகாட்டும் அறிவொளி பரப்பும் பணி இன்றும் இடைவெளியின்றித் தொடர்கிறது! இளைஞர்களே, மாணவர்களே புத்தகங்களை வாங்கி புதுவெளிச்சம் பெறுவீர்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு.

இன்று (23.4.2022) உலகப் புத்தக நாள்.

உலகம் முழுவதும் புத்தகங்களை வாங்கிப் படித்து, தங்களை புத்தாக்கத்திற்கு உருவாக்கி செப்பனிட்டுக் கொள்ள வாய்ப்பளிக்க இந்நாள் பெரிதும் உதவிடும் நாள்.

புத்தக வாசிப்பு என்பது கல்வி பரப்புதலின் விளைவு அல்லவா?

கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டால்

புத்தகம் எப்படி படிக்க முடியும்?

உலகிலேயே பெரும்பாலான மக்களை கீழ்ஜாதியாக்கி - பிறவிப் பேதத்தை விதைத்ததோடு, அவர்களுக்குக் கல்விக் கண்ணொளியைப் பறித்த மதமும், மனுதர்ம சாஸ்திரங்களும் கோலோச்சியதால், கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டதால் புத்தகம் எப்படி படிக்க முடியும்?

திராவிடர் இயக்கமும், மற்ற முற்போக்கு இயக்கங் களும்அனைவருக்கும் கல்வி' என்பதை வலியுறுத்திய தால்தான் இன்றுகல்வி உரிமை' என்பது ஏட்டளவிலாவது உள்ளது; இதையும் பறிக்க மறைமுக முயற்சிகள் மனுதர்மத் திற்கு மகுடம் சூட்ட வேகமாக வேலைகள் நடைபெறு கின்றன.

திராவிட மாடல்' ஆட்சியால்  இளைஞர்கள்

புத்தக வாசிப்பில் புது உற்சாகம் காட்டுகிறார்கள்

இந்நிலையில், ‘திராவிட மாடல்' ஆட்சிகளின் கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில், கல்விக்கான சமூகநீதிப் போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில், கல்வி நீரோடை நாடெலாம் பாய்ந்தது. அதன் விளைவு - தமிழ்நாட்டு இளைஞர்கள் புத்தக வாசிப்பில் புது உற்சாகம் காட்டுகிறார்கள் என்பது ஆறுதல் தரும் செய்தி.

இணைய தளமும், சினிமாவும், தொலைக்காட்சிகளும் அவர்களைத் திசை திருப்பினாலும்கூட, அவற்றையும் மீறி படிக்க முன்வருவது பாராட்டத்தக்கது!

புத்தகப் புரட்சியை, மவுனப் புரட்சியாக செய்து வெற்றி கண்டார் தந்தை பெரியார்!

புத்தகப் பதிப்பில் சற்றொப்ப நூறாண்டுகள் தந்தை பெரியார் மக்களிடையே புத்தகப் புரட்சியை, மவுனப் புரட்சியாக செய்து வெற்றி கண்டார்!

அவர் நடத்திய மாலை நேர அரசியல் சமூக சிந்தனை வகுப்புகளில் புத்தகங்களை மிகக் குறைந்த விலையில் வெளியிட்டுப்  பரப்பி, இளைஞர்களுக்கு - புத்தறிவு, பகுத்தறிவைப் பரப்பி வெற்றி கண்டார்!

இன்றும் அவரது நூல்கள் ஏராளம் உலக அளவில்- தமிழ்நாட்டைத் தாண்டி - அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கிறது!

சமூகநீதிக்கான சரித்திர நாயகரான' நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களது அரிய திட்டமான 21 மொழிகளில் தந்தை பெரியார் பகுத்தறிவுக் கருவூலங்களை மொழி பெயர்த்துப் பரப்ப, தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடும் அறிவிப்பு,  திராவிட மாடல்' ஆட்சி எப்படி, எந்த அடிப்படையில் வெற்றிகரமான ஆட்சியாகத் திகழ்கிறது என்ற தத் துவத்திற்கு அடையாளமாகும்.  உலக மானுடப் பார் வையைக் கொண்டது திராவிட இயக்கம் என்பதைப் பறைசாற்றும் வகையிலும் அம்முயற்சியால் - சனாதனி கள் எரிச்சல்பட்டாலும் - அது வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெறுவது திண்ணம்.

அதோடு, சென்னையில் புத்தகக் காட்சி ஆண்டு தோறும் தனி அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது.

இளைஞர்கள், மாணவர்களிடையே

பகுத்தறிவைப் பரப்பும் பணி

தமிழ்நாடு அரசு - சிந்திக்கட்டும். மக்கள் அவர்தம் அறிவை விரிவு செய்து, அகண்டமாக்கிட, அரியதோர் வாய்ப்பாக மாவட்டந்தோறும் புத்தகக் காட்சி, விற் பனைக்கு ஏற்பாடு செய்து, புத்தகங்களைப் பரப்பிடுவது ஒரு சிறந்த பகுத்தறிவை இளைஞர்கள், மாணவர்கள் பெறவும், அவர்தம் மத்தியில் ஒரு திருப்பத்தை ஏற்படவும் வழிகுக்கும் என்பது உறுதி!

வெகுவாகப் பாராட்டப்படவேண்டிய அரிய செயல் திட்டம் இது! அறிவு விருந்தும்கூட!

சால்வைக்குப் பதில் புத்தகங்கள் தருக!

நமது முதலமைச்சர் சால்வைகளுக்குப் பதில் புத்த கங்களை தரச் சொன்னதிலிருந்து ஏராளமான புத்த கங்கள் அவருக்கும், மற்றவர்களுக்கும் அளிக்கப்படு கின்றன.

அதை அவர் பல அரசு நூலகங்களுக்கு அளித்து வருவதும் வரவேற்கத்தக்கது!

மக்களிடையே மலிவுப் பதிப்பு என்ற சிறப்பான ஏற்பாட்டைச் செய்து, பொதுக்கூட்டங்களில் அவற் றைப் பரப்பும் தந்தை பெரியார் வழிகாட்டும் அறிவொளி பரப்பும் பணி இன்றும் திராவிடர் கழகத்தால் இடைவெளியின்றித் தொடர்கிறது!

இளைஞர்களே, மாணவர்களே வீடுகளில்

புத்தக அலமாரிகள் இருக்கட்டும்!

கரோனா காலத்தில் புத்தகங்கள் பரப்பும் பணியில் நாம் ஓய்ந்தோமில்லை.

ஏப்ரல் 23 மட்டுமல்ல; எல்லா நாட்களும் நமக்குப் புத்தக நாட்களே - புத்தகங்கள் வாங்கி புது வெளிச்சம் பெறுவீர் - இளைஞர்களே, மாணவர்களே, வீடுகளில் புத்தக அலமாரிகள் இருக்கட்டும், மறவாதீர்!

 

கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை       

23.4.2022            

No comments:

Post a Comment