நீட்டைத் தடுப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

நீட்டைத் தடுப்போம்!

- பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன்

“நீட்”டை வலிந்து திணிக்கின்றார் - தமிழர்

நெஞ்சில் நெருப்பைக் கொட்டுகிறார்!

வாட்டி வருத்த நினைக்கின்றார் - நல்

வாழ்வின் மேன்மை தடுக்கின்றார்!

முன்னர் நுழைந்த குலக்கல்வி - முக

மூடியை அணிந்து வருகிறது!

என்றும் நஞ்சாம் மனுதருமம் - நம்

இனத்தை அழிக்கப் பாய்கிறது!

இடஒதுக் கீட்டை எதிர்க்கின்றார் - இங்கே

ஏழைகள் படிப்பதை வெறுக்கின்றார்!

மடமை நோயில் உழல்பவரோ - தமிழ்

மாண்பை மரபை அழிக்கின்றார்!

அனிதா தொடங்கி இருபதின்மர் - நீட்டால்

ஆருயிர் தன்னை இழந்திட்டார்!

துணிந்து பொய்யை விதைக்கின்றார் - நாட்டைத்

துயரக் கடலில் ஆழ்த்துகிறார்!

பொய்யும் புரட்டும் வெல்லாது - வட

புலத்தோர் சூழ்ச்சி பலிக்காது

மெய்யாய் அரசியல் சட்டத்தை - நாளும்

மிதித்தே வன்கொலை செய்கின்றார்!

குமரி தொடங்கிச் சென்னைவரை - அய்யா

கொள்கைப் பரப்புரை மேற்கொண்டார்!

நமது ஆசிரியர் முழக்கத்தால் - நாட்டில்

நாளை மலரும் பொன்விடியல்!

இறந்து விட்ட சமற்கிருதம் - என்றும்

எதற்கும் உதவா இந்தியினைக்

கரவாய் நுழைக்க முயல்கின்ற - தீய

கயமை நாடகம் அறிவோமே!

மாநில உரிமை பறிக்கின்றார் - இன

மான வாழ்வைத் தகர்க்கின்றார்!

யானெனும் செருக்கில் ஆடுகிறார் - நாம்

யாண்டும் ஏற்கோம்! வெல்வோமே!


No comments:

Post a Comment