மாணவர் நலனில் பா.ஜ.க.வின் உண்மை முகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

மாணவர் நலனில் பா.ஜ.க.வின் உண்மை முகம்

- த. மு. யாழ் திலீபன்

பாரதிய ஜனதா கட்சியின் உண்மை முகம் சமீப காலங்களில் மிக வெளிப்படையாக மக்களுக்கு வெளிப்பட்டு வருகிறது. பாஜகவின் மாநில நிலைப்பாடு ஒரு மாதிரியும், டெல்லி தலைமை நிலைப்பாடு வேறு மாதிரியும் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது பாஜகவின் இரட்டை அரசியல் வெளிப்படையாக அம்பலப்பட்டிருக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ்-இன் கிளை அமைப்பு என்பதை மத அடிப்படை செயல்பாடுகள் மூலமாக தெளிவாக மக்கள் புரிந்து கொண்டனர் . பாஜக மட்டும் மத சண்டைகளை உருவாக்க வில்லை, இந்த முறை முழுப் பொறுப்பையும் மாணவர் அமைப்பு ஏபிவிபி உடன் இணைந்து பாஜக மிகத் தீவிரமாக கலவரங்களை மிகத் துணிச்சலுடன் நடத்தி வருகிறது. இந்து இஸ்லாமியர் வெறுப்பு, இந்து கிறித்தவர் வெறுப்பு, கல்வி நிலையங்களில் காவிகளின் ஆட்டம், ஜாதி ரீயாக பிரித்து தலைவர்களை உருவாக்குதல், என்று ஒட்டுமொத்த இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதை மக்கள் இம்முறை தெளிவாக உணர்ந்துள்ளனர். இனிவரும் காலங்களில் மதவெறியைத் தூண்டும் பா.ஜ.க.வினருக்கு துணையாக நிற்கும் மற்ற கட்சிகளையும் தமிழகத்திலிருந்து அடியோடு காணாமல் செய்வார்கள் என்பதில் எவ்வித அய்யமுமில்லை.

 கல்வி நிலையங்களில் காவி நிறம்

நாடு முழுக்க கல்வி நிலையங்களில் இந்துமத புராண இதிகாச கருத்துக்களைத் திணிப்பது, கல்வி நிலையங்களிலும் பல்கலைக்கழகங்களிலும், ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட நிர்வாகிகளை நியமிப்பது, அய்.டி. நிறுவனங்களில் தொடர்ச்சியாக ஜாதி, மத ரீதியாக மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுவது, இந்தியப் பெரும் பல்கலைக்கழகங்களில் பார்ப்பனருக்கு 90% இடமளித்து பார்ப்பனரல்லாதவர்களைப் புறக்கணிப்பது. தகுதி, திறமை அனுபவம் இருந்தும் துணைவேந்தர் - வேந்தர் பதவிக்கு செல்ல விடாமல் அவ்விடங்களை பார்ப்பன ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்களுக்கு அளிப்பது என்று கல்வி நிலையங்களை மதவெறி இருளில் தள்ளியுள்ளது.

பெண்களின் கல்வியை பறிக்கும் பாஜக 

பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கை  NEP  மற்றும் NEET  போன்றவை ஏழை , எளிய கிராமப்புற மாணவர்களின் கனவை சிதைத்து அவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றுவது மட்டுமில்லாமல்,உயிரையும் குடித்து வருகிறது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்த பட்ஜெட்டில் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான தேசிய கல்வி உதவி தொகை 80 சதவிகித தொகையை (NSIGSE)  நிறுத்தி உள்ளது.இதன் நிதியை “ பேட்டி பச்சாவ் -  பேட்டி படாவோ” “பெண் குழந்தையை பாதுகாப்போம் - படிக்க வைப்போம்“  என்ற விளம்பர திட்டத்திற்கு திருப்பி உள்ளது. பெண் குழந்தைகள் படிக்கும் உதவித்தொகையை நிறுத்தி விளம்பரத்திற்கு செலவு செய்யும் அரசாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. விளம்பரம் செய்தால் படிப்பார்கள் என்று நினைப்பவர்கள் தனியே விளம்பரத்திற்கு நிதி ஒதுக்கி இருந்தால் சரி என்று சொல்லலாம். ஆனால் பட்ஜெட்டில் அறிவித்த மாணவிகளுக்கான உதவி தொகையில் இருந்து விளம்பரத்திற்கு 80% நிதியை திருப்பி இருக்கிறார்கள், வெறும் 20% நிதி மட்டுமே படிப்புக்கு தற்போது செல்கிறது என்றால், இந்த அரசு விளம்பரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட பெண்களின் கல்விக்கு கொடுக்கவில்லை என்பதே உண்மை. பெண் கல்வியை காட்டிலும் விளம்பரமே பெரிது என்று நினைக்கிறது விளம்பர அரசு..

தேசிய கல்வி கொள்கை மூலம் கல்விக்கான நிதியை குறைத்து வருவது, இட ஒதுக்கீட்டை குழிதோண்டிப் புதைப்பது, மூன்றாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு என்று கோமாளித்தனமான அறிவிப்பு செய்வது, ‘எம்.பில்’ ஓராண்டு படிப்பை தேசிய கல்வி கொள்கை மூலம் நீக்கியது என்று பல்வேறு அறிவிப்புகள் மூலம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகளையும்,அவர்களை தகுதி என்கின்ற பெயரில் வடிகட்டும் செயலையும் செய்து வருகிறது மோடி அரசு. இதில் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கே அதிகம் பாதிப்பு. இடைநிலை கற்றல், தேர்வின் மூலம் மன ரீதியாக அழுத்தம் தருவது போன்ற செயல்கள் ஆண் குழந்தைகளை காட்டிலும் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர். அதை அறிந்தும் பெண்கல்வி கூடாது என்பதற்காகவே தொடர்ந்து  செயல்படுத்தி வருகிறது பாஜக அரசு.

 உதவித் தொகை பறிப்பும்,மாணவர் எண்ணிக்கையும்

“ 1998 ஆம் ஆண்டு பிர்லா அம்பானி கல்விக் கொள்கை அனைத்து கல்வி சார்ந்த நடவடிக்கையும் தனியார் முதலாளிகள் தான் தீர்மானிக்க வேண்டும். கல்விக்காக அரசு செலவழிப்பது தேவையற்றது”  என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் இன்று பிஜேபி அரசு அதை நடைமுறைப்படுத்தி வருகிறது.  2016 - 2017 ஆம் ஆண்டில் தேசிய அளவில் முனைவர் பட்டத்திற்கான உதவித்தொகையை தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் 9503 பேர் பெற்று வந்தனர். 2020-2021இல் அது 3986 ஆக குறைந்துள்ளது. இது  57% மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கான படிப்பை இழந்ததை காட்டுகிறது.

 “ போஸ்ட் டாக்டோரல்” படிப்புக்கான உதவி தொகையை தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் 2016 - 2017இல் 554 பேர் உதவித்தொகை பெற்று படித்தனர். ஆனால் 2020 - 2021இல் 332 ஆக குறைந்துள்ளது. இதில் மாணவிகள் எண்ணிக்கையும்  2016 - 2017 இல் 642 லிருந்து 2020 - 2021இல் 434 ஆக குறைந்துள்ளது. அடிப்படை அறிவியல் ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கையும் 83 சதவிகிதம் குறைந்துள்ளது.

மேலோட்டமாக பார்க்கும் போது, மாணவர்களுக்கு விருப்பமில்லாமல் இதில் இணையவில்லை என்றும், அறிவியலை மாணவர்கள் படிக்க முன்வரவில்லை என்றும் தோன்றும். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை குறையக் காரணம் உதவி பெறுவோரின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு திட்டமிட்டு குறைத்துள்ளது தான்.அரசு உதவித்தொகை பெற முடியாது என்கின்ற சூழலில் நிற்போர்,அதை தவிர்த்து கடந்து செல்வதற்கான திட்டமே உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கை குறைப்பு.இதில் பிஜேபி அரசு வெற்றியும் கண்டுள்ளது. கடந்த ஆண்டுகளின் கணக்கை பார்க்கும் போதே மாணவர்களின் எண்ணிக்கையை பாதி அளவுக்கு குறைத்திருப்பதை கல்வியின் வளர்ச்சி என்று எப்படி ஏற்க முடியும்? கல்வியை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும் பிஜேபி, மாணவர்கள் உதவிதொகைக்கான தகுதியை பெறவில்லை என்று பொய் சொல்லி எளிதாக கடப்பது, மாணவர்கள் கனவிலும், கல்வி யிலும் மண்ணை போடும் செயலல்லவா??

மாணவர்களை படிக்க வைக்க அரசு உதவித் தொகையை உயர்த்தி அவர்களுக்கான பொருளாதார, போக்குவரத்து, இட வசதியை உண்டாக்கி தருதல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் மாணவர்கள் படிக்க கூடாது என்பதற்காக தகுதி எனும் மோசடி மூலம் திட்டமிட்டு கல்வியை பறிக்கிறது பிஜேபி.

நெட்,  ஜே.ஆர். எஃப் போன்ற ஆய்வு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வுகளை நடத்தாமல் காலம் கடத்துவது. ஒரு பேராசிரியருக்கு கீழ் இயங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.  மாணவர் குறைப்பு - உதவித் தொகை மறுப்பு - குறைப்பு என்று அனைத்திலும் குறைப்பு நடவடிக்கையை மட்டும் மேற்கொள்ளும் பிஜேபி அரசு, ஒன்றில் மட்டும் கவனமாக தெளிவாக இருக்கிறது,  அனைத்து மத்திய கல்வி நிலையங்களிலும் கல்விக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. 

ஒரு புறம் அனைத்தும் குறைப்பு மறுபுறம் கல்வி கட்டணம் மட்டும் உயர்வு எந்த வகையில் என்பது அவர்களுக்கே வெளிச்சம். தரமான கல்வி என்பது அதிக பணம் கொடுத்து படிப்பது என்று நினைக்கிறார்கள் போலும்.

முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடும் சிறுபான்மை மாணவர்களுக்கான “மவுலானா ஆசாத் “ உதவித் தொகையை குறைத்ததன் விளைவு சரிபாதியாக மாணவர் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவி தொகை கிடைத்துள்ளது.

இதுபோன்ற உதவித் தொகை குறைப்பு நடவடிக்கை ஒருபோதும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க போவதில்லை.அது மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு மட்டுமே பயன்படும். 

கடந்த பத்தாண்டு கல்வி வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் மாணவர்கள் மீது தாக்குதல், கல்லூரிகளில் வன்முறை, உதவித்தொகை மறுப்பு, இடை நிலை நிற்றல் அதிகரிப்பு,இட ஒதுக்கீடு மறுப்பு,மாணவர் எண்ணிக்கை குறைப்பு என்று கல்வியை காசாக்கும் நடவடிக்கையும்,கல்வி நிலையத்திற்குள் காவி மயமக்கும் முயற்சியும், காசுஉள்ளவர்கள் மட்டும் படிக்கட்டும் என்கின்ற நினைப்பும் தான் பிஜேபியின் செயல்பாடுகளில் வெளிப்படையாக தெரிய வருகிறது.

மேலும் ஒன்றிய அரசுக்கு தலையில் கொட்டி பாடம் எடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. உதவித் தொகையை அதிகாரித்திருப்பதன் மூலம் மாணவர் வருகை அதிகரிக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிறித்துவ ஆதி திராவிடர் இன மாணவர்களுக்கான முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகையை தலா ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப 

ஆண்டு வருமான உச்சரவரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தியும், மாணாக்கர்களின் எண்ணிக்கையை 1200-லிருந்து 1600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத்தொகையினை ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இச் செயல் தான் மாணவர்களின் கல்விக்கானது, ஒன்றிய அரசு செய்வது மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை .தமிழ்நாடு எப்போதும் மற்றவருக்கு கற்றிடம் என்று ஆசிரியர் கி. வீரமணி அய்யா அவர்கள் சொல்லுவது மிக சரியாக பொருந்துகிறது.

மாணவர்களுக்கிடையே  மதவெறி அரசியல்

அனைத்து கல்வி நிலையங்களிலும் பல்வேறு பெயர்களில் மத வெறுப்பைத் தூண்டும் அமைப்புகளை உருவாக்கி, மாணவர்களுக்கு இடையே கலவரம் செய்வது,  பிஜேபியின் அரசியல் ஆதாயத்திற்கு வழிவகுக்கும் வேலையை தொடர்ந்து ஆர்எஸ்எஸ், பிஜேபி, ஏபிவிபி மாணவர் அமைப்புகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அண்மையில் கருநாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்கிற குரல் கலவரமாக மாறி,அம்மாநில அமைதியும் சீர்குலைந்துள்ளது.

“ அமைதியான முறையில் பல வகையில் முன்னேறிய மாநிலமான கர்நாடகத்திற்கு ஹிஜாப் விவகாரம் மூலம் பாஜக அவமானத்தைத் தேடித் தந்துள்ளது இதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் மாணவர் வளர்ச்சி தடைபடும்” என்று கருநாடக மேனாள் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா பிஜேபியின் மதவெறி அரசியலை கண்டித்துள்ளார்.

 அரசமைப்புச் சட்டம் 25 இன் படி மதச் சுதந்திரத்தை கடைப்பிடிக்கவும் அதை பரப்பவும் அனைவருக்கும் உரிமை உள்ளது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது.ஆனால் பாஜகவின் நோக்கம் அரசமைப்புச் சட்டத்தை தகர்த்து மனுதர்மத்தை வைக்க வேண்டும் என்பதே. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல், அதற்கு கட்டுப்படாமல்  ஆட்சி நடத்துகிறது பாஜக. இன்று பாஜகவிற்கு பெரும் தடையாக இருப்பது இந்திய அரசமைப்புச் சட்டம் மட்டுமே. அதனால்தான் பாஜக  அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சட்ட மசோதாக்களையும், சட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. பாஜக ஆட்சி அல்லாத இடங்களில் மத கலவரத்தை தூண்டி அங்கு, இந்து பிற மதத்தவர் பிரச்சினையை எழுப்பி அதன் மூலம் லாபம் பெறலாம் என்கின்ற திட்டம் காட்டுத்தீ போல அப்பாவி இளைஞர்களிடம் பரப்பப்பட்டுள்ளது. இதன் விளைவே கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை .அருணாச்சல பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,  சத்தீஸ்கர்,  கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டாய மதமாற்ற சட்டம் அமலில் இருக்கிறது. இந்த வகையில்தான் தமிழகத்தில் 2004இல் பெரும்பான்மையில் இருந்த அதிமுக பாஜகவிற்கு அடிபணிந்து கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்தது. இதை அதிமுக-பாஜக வை தவிர அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் எதிர்த்ததன் விளைவாக நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. பிறகு கட்டாய மதமாற்ற சட்டத்தை திரும்பப் பெற்றது. இவ்வரலாறு அறியாமல் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியலை புகுத்திட நினைக்கிறது பிஜேபி. இதன் நீட்சியாக கோவையில்   இஸ்லாமியர்களுக்கு இடையே கலவரத்தை தூண்டுதல், தஞ்சை மாணவி மரணத்தை வைத்து பிஜேபி செய்த அரசியலில் பிஜேபி மூக்கறுபட்டு நின்றதையும் நாம் பார்க்கிறோம்.  

ஏதாவது ஒரு வகையில் ஜாதி மத ரீதியில் ஜாதி கட்சிகளை, ஜாதி சங்கங்களை ஒன்றுதிரட்டி கலவரம் செய்யும் நோக்கிலும், அதன் மூலம் லாபம் பெற நினைக்கும் பிஜேபி உண்மை முகம் நாளுக்கு நாள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து மதச்சாயம் பூசுவது, CBSC பாடத்திட்டத்தில் மதக் கருத்தை திணிப்பது, குறிப்பிட்ட ஜாதியை தாழ்த்தி பாடப்புத்தகத்தில் குறிப்பிடுவது, CBSC  கேள்வித்தாளில் வருணாசிரம அடிப்படையில் கேள்வி கேட்பது, திருவள்ளுவரை காவி உடையில் படமிடுவது, ஆர்.எஸ்.எஸ். குண்டர்களை பதவியில் நியமிப்பது, மதக் கருத்துக்களை வரலாறு போன்று திரிப்பது, புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களின் கல்வியை பறிப்பது,  வேத கல்வியை புகுத்துவது, நீட் தேர்வின் மூலம் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுவது - மத மோதல்களை மாணவர்களிடம் உண்டாக்க மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக   “இந்து உணர்வு”  என்ற அடிப்படையில் இந்து மாணவர்களை அணி திரட்டி வருகிறார்கள் என்பது வேதனையும்,அதிர்ச்சியும் அளிக்கிறது. சமூகநீதியைப் பாதுகாக்கும் பெரியார் மண்ணில் தொடர்ந்து பல்வேறு செயல்களின் மூலம் பிஜேபி கல்வியை காவி மயமாக்கும் முயற்சியுடன், தமிழகத்தில் மதக் கலவரம் உண்டாக்க அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. பிஜேபியின் ஜாதி மத அரசியலுக்கு நேர் எதிராக தொடர்ந்து கல்வியைப் பாதுகாக்கவும், தமிழக உரிமையை மீட்டெடுத்து தமிழக மாணவர்களின் வேலை வாய்ப்பை பெற்றிடவும், இட ஒதுக்கீட்டை காத்திடவும், சனாதன பேதமை பொருந்திய ராமராஜ்ய கருத்துக்களுக்கு இடமளிக்காமல் பெரியார் ஈ,வெ, ராமசாமியின் சமத்துவ, சமூக நீதி,  திராவிடத் தத்துவத்தை பரப்புதலையும், களத்தில் நிற்பதையும் தன் வாழ்நாள் பணியாக கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கும் “மனித நேய வாழ்நாள் சாதனையாளர் ஆசிரியர் அய்யா” அவர்களின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து ,அவரின் கரங்களை மாணவர்கள் வலுப்படுத்த வேண்டிய அவசிய, அவசர சூழ்நிலையில் உள்ளோம். சமத்துவ சிந்தனை, சமூகநீதி , திராவிடர் கருத்தியலை மாணவர்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வை உண்டாக்கி மதவெறி மாய்ப்போம்!  மனிதநேயம் படைப்போம் !!


No comments:

Post a Comment