தமிழர் தலைவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு - வரவேற்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

தமிழர் தலைவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு - வரவேற்பு!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டு வரலாறு தெரியாது!

பெரியாரும், திராவிடர் கழகமும் தோற்றதாக வரலாறு கிடையாது!

சீர்காழி, கடலூரில் தமிழர் தலைவர் ஒன்றிய அரசுக்கு நடத்திய பாடம்!

சீர்காழி,ஏப்.11- நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணப் பொதுக்கூட்டம் நேற்று (10.4.2022) சீர்காழி, அதனைத் தொடர்ந்து கடலூரிலும் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அனைத்துக்கட்சியினர், கழகப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரையைக் கேட்பதற்காக பெருந்திரளானவர்கள் திரண்டிருந்தனர்.

கடந்த 3.4.2022 அன்று நாகர்கோவிலில் தொடங்கி சென்னையில் 25.4.2022 அன்று நிறைவு பெறுகின்ற நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணத்தின்மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மக்களை சந்தித்து வருகிறார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அனைத்துக்கட்சியினரும், பொதுமக்களும், கழகப்பொறுப்பாளர்களும் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பளித்து வருகின்றனர். பெரும் பயணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நன்கொடைகள் வழங்கி, நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயண நோக்கத்தை விளக்கும் இயக்க வெளியீட்டினை பெருமகிழ் வுடன் பெற்றுக்கொள்கின்றனர். இரவு, பகல் பாராமல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, சிவகாசி, தேனி, மதுரை, இராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரப்புரை பெரும்பயணப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேற்று (10.4.2022) சீர்காழி, கடலூரில் பரப்புரை பயணப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

கழகப் பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன் ஆகியோர் பெரும்பயணத்தை வெகு சிறப்பாக ஒருங்கிணைத்து வருகின்றனர்.

சீர்காழி பரப்புரைப் பெரும்பயணம்

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் முன்பு  மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ்  அனைவரையும் வரவேற்று பேசி னார். மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மாவட்ட துணை செயலாளர் அரங்க.நாகரெத்தினம், சீர்காழி ஒன்றிய தலைவர் சந்திரசேகரன், சீர்காழி நகர தலைவர் சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் தொடக்க வுரையாற்றிட திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கருத்துரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

மழை விடாது தூறிக்கொண்டிருந்த சூழலில், தமிழர் தலைவர் உரையின் தொடக்கத்தில், “நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவராக இருந்தபோது சீர்காழியில் மாதத்திற்கு இருமுறையாவது கிராம பிரச் சாரத்திற்கு வந்துள்ளதாக” நினைவு கூர்ந்தார். அதேசமயம் தற்போது அப்படி வர முடியாத சூழல் நிலவுவதைச் சுட்டிக் காட்டினார். மழை தூறிக் கொண்டிருப்பதையும், அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் அமர்ந்திருப்பதையும் கவனித் தவர், ”குடி செய்வார்க்கில்லை பருவம், மடிசெய்து மானம் கருதக்கெடும்” என்ற திருக்குறளை நினைவுபடுத்தினார். தொடர்ந்து, ”திராவிடர் கழகம் தோற்றதாக வரலாறே இல்லை. வேண்டுமானால் வெற்றிக்கனி பறிக்க கொஞ்சம் கால தாமதமாகலாம். அவ்வளவுதான்” என்று பலத்த கைதட்டல் களுக்கிடையே கூறினார். அதற்கு 50 ஆண்டுகள் வரலாற் றைக் கொண்ட, ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்பதை எடுத்துக் காட்டினார். ஒருபக்கம் தமிழ்நாடு முதல மைச்சர் சட்டப்போராட்டம் நடத்துவதையும் தவறாமல் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஹிந்தித் திணிப்பு பற்றி நினைவுபடுத்தி, “அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டு வரலாறு தெரியாது” என்று கூறிவிட்டு, “உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை மூளை என்று வர்ணிக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரியார் ஹிந்தியைத் திணித்தபோது பெரியார் கடுமையாக எதிர்த்தார். பின்னாளில் அதே ராஜாஜி அண்ணாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து, 'Hindi never, English ever'  என்று அதே ராஜாஜியே ஒரு சொல்லாடலையே தந்த வரலாறு தெரியுமா? என்ற கேள் வியை அமித்ஷாவை நோக்கி வீசினார். தொடர்ந்து பிரதமர் மோடியின் பொய்களைத் தொட்டுக் காட்டிவிட்டு, அவற்றை விட முக்கியமானதுதான் இந்த மூன்றும்!” என்று அழுத்தமாகச் சொன்னார். அந்த மூன்றையும் ஒன்றன்பின் ஒன்றாக அவருக்கே உரிய முறையில் விளக்கி, அதனால் ஏற்பட்டிருந்த பின்னடைவையும், அதை திராவிடர் இயக்கம் மாற்றியதையும் பட்டியலிட்டார். அதனால் தான் நாமெல்லாருமே படித்தோம். என்பதை நினைவூட்டினார். தொடர்ந்து, “மனுதர்மத்தை பகுதி, பகுதியாக கொண்டு வருகிறார்கள். அவர்கள் மீண்டும் வந்தால் இந்திய அரசமைப்புச் சட்டத்தை தூக்கி வீசிவிட்டு, பச்சையாக மனுதர்மத்தை கொண்டு வருவார்கள்” என்றும், ''இனி கல்லூரிக்கே செல்ல முடியாது என்கிற வகையில் அவர்களால் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன” என்றும் உண்மைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து ஆளுநரின் சட்டவிரோதப் போக்கு ஆகியவற்றை வெட்டவெளிச்ச மாக்கினார். இறுதியில், “மக்களாட்சியில் இறுதி அதிகாரம் மக்களுக்குத்தான்” என்று கூறியதோடு, ''மழைக்கும், நமக்கும் போட்டி நடந்தது. நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்” என்று மனநிறைவுடன் உரையை நிறைவு செய்தார்.

இந்த பரப்புரை கூட்டத்தில்  சீர்காழி சட்டமன்ற உறுப் பினர் பன்னீர்செல்வம், சீர்காழி நகர்மன்றத் தலைவர் சுப்பராயன், சி.பி.அய்.மாவட்ட செயலாளர் சீனிவாசன், வி.சி.க.மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், த.மு.மு.க. மாநில செயலாளர் முசாகுதீன் த.பெ.தி.க.மாவட்ட தலைவர் பரசுராமன், பெ.தி.க.மாவட்ட செயலாளர் பெரியார் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் சீர்காழி ஒன்றிய செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

சீர்காழி செல்லும் வழியில் காரைக்கால்  மண்டல தலைவர் பழக்கடை கிருட்டினமூர்த்தி தலைமையில் மண்டல செயலாளர் பொன்.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் திரண்டு நின்று கழகத் தலைவரை வரவேற்றனர்.

ஆசிரியர் நமக்கெல்லாம்
வழிகாட்டவேண்டும்: மேயர் சுந்தரி கடலூர் மாநகரின் முதல் மேயர் திருமதி சுந்தரி உரையாற்றும்பொழுது, தி.மு.க.வின் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு எனது வணக்கங்கள். தேசிய கல்விக் கொள்கையால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக எனது வேதனையை தெரிவித்துக்கொள்கிறேன். நமது ஆசிரியர் அய்யா அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து நமக்கெல்லாம் வழிகாட்ட வேண்டும் என்று 'ஆண்ட வனை பிரார்த்தித்து' விடைபெறுகிறேன் ( மிகப் பலத்த சிரிப்பு, கைதட்டல்).

கடலூரில் பரப்புரைப் பெரும்பயணப்
பொதுக்கூட்ட எழுச்சி

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில்  மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி அனைவரையும் வரவேற்று பேசினார். 

மண்டல தலைவர் அரங்க.பன்னீர் செல்வம், மண்டல செயலாளர் நா.தாமோதரன் மாவட்ட அமைப்பாளர் சி.மணி வேல், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபா ஜோசப், தி.மு.க. நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, சிதம்பரம் மாவட்ட தலைவர் பூ.சி.இளங்கோவன், விருத்தாசலம் மாவட்ட செயலாளர் ப.வெற்றிச்செல்வன், நகர தலைவர் க.எழிலேந்தி, விருத்தாசலம் மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், மண்டல இளைஞரணி செயலாளர் நா.பஞ்சமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித் தனர். தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழ கன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

சீர்காழியிலிருந்து கடலூருக்கு வருகைபுரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அங்கே ஏற்பாடு செய்யப் பட்டிருந்த தீப்பந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு, பலத்த ஆரவாரத்திற்கிடையே மேடையேறினார். 

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அதைத்தொடர்ந்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். அதற்கு முன்பாக கடலூர் நகர மேயர் சுந்தரி அவர்கள் பேசும் போது, ஆசிரியர் 100 வயது தாண்டியும் வாழ்ந்து தமிழக மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும். அதற்கு ஆண்டவன் துணைபுரிய வேண்டும் என்று பேசியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், “பழக்கதோசத்தில் அப்படிச் சொல்லிவிட்டார்” என்று சொன்னவர், ”சுந்தரி சாதாரணமாக காய்கறி விற்று வாழ்க்கையை நடத்துகிறவர். அவரை நம் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று மேயராக்கியிருக்கிறார். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இது பெரியாரின் கனவு நிறைவேறியிருக் கிறது. அதை நமது ஆசிரியர் தம் கண்களால் பார்த்துவிட்டார். சுந்தரியின் கணவர் ராஜா வீட்டில் சமைத்துக்கொண்டிருக்கிறார். நிலைமை தலைகீழாயிருக்கிறது. என்று சொன்னதும் சிரிப்பும், கைதட்டல்களும் பலமாகக் கேட்டது. மேலும் அவர், “ஆசிரியர் பெரியாரைப் போலவே களமிறங்கியிருக்கிறார்கள். அவரது முயற்சி வெற்றி பெறவேண்டும். இந்த சுற்றுப்பயணம் தருமபுரிக்கு வரும்போது தானும் கலந்துகொள்வேன் என்று உறுதியளித்தார். தொடர்ந்து நீட் தேர்வு காரணமாக மருத் துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு கோடிக்கணக்கில் செலவாகிறது. இதைப் போக்கத்தான் ஆசிரியர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்றும், ஆசிரியர் இந்த மண் ணின் மைந்தர். அவர் நீண்ட காலம் வாழவேண்டும்” என்று கூறி வாழ்த்தினார்.

ஆசிரியர் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறவேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசும்போது ஒருமாத காலத்தில் பெரியாரின்‌ கனவு நிறைவேறி உள்ளது. சுந்தரி மேயராகி விட்டார். அவரது கணவர் ராஜா இனிமேல் வீட்டில் சமைக்க சென்று விடுவார். சாமானியனும் மேயராக முடியும் இந்த ஆட்சியில். சாதாரண காய்கறி  வியாபாரியின் மனைவி இன்றைக்கு மேயராகி உள்ளார். இதெல்லாம் தான் திராவிட இயக்கத்தின் கொள்கை. ஆசிரியர் அய்யா அவர்கள் இந்த மண்ணின் மைந்தர் என்ற முறையில் அவரை நாங்கள் வாழ்த்துகிறோம். வாழ்த்த வயதில்லை வணங்கு கிறோம். ஆசிரியர் அவர்களை பெரியார் திடலில் முதல்வரும் நாங்களும் சந்தித்த போது இந்த பரப்புரை பயணத்தை பற்றி கூறினார்கள். நாகர்கோவிலில் தொடங்கி இப்போது சீர்காழி முடித்து கடலூர் வந்துள்ளார்கள். தருமபுரியில் நடைபெறவுள்ள பரப்புரை கூட்டத்தில் நானும் கலந்து கொள்வேன். நீட் தேர்வால் நமது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒன்றேகால் கோடி ரூபாய் செலவு செய்து மருத்துவர் இடம் வாங்கும் நிலை வந்துவிட்டது. இது எப்படி ஏழை எளிய மக்களுக்கு சாத்தியமாகும். இந்த நீட்  தேர்வை ஒழித்திட ஆசிரியர் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று அனைவரின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இறுதியாக தமிழர் தலைவர், மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சி யோடும், மிகுந்த புத்துணர்ச்சியோடும் பேசினார். அமைச் சரை, “எங்கள் அமைச்சர்” என்று உரிமையோடு விளித்தார். தருமபுரியில் சாதித்துக்காட்டியதை உற்சாகத்துடன் பாராட்டி னார். தொடர்ந்து மேயரைக் குறிப்பிட்டு, “வணக்கத்துக்குரிய மேயர் சுந்தரி அவர்களே” என்றார். மக்கள் கவனிக்கத்தவறி இருப்பார்களோ என்ற அய்யத்தில், “நான் சுந்தரி என்றுதான் அழைத்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த மேயரின் கணவர் ராஜா புரிந்துகொண்டேன் என்பதைப் போலத் தலையை ஆட்டினார். மக்களும் புரிந்துகொண்டோம் என்பதைப் போல சிரிப்புப் பொங்க கைதட்டினர். மேலும் அவர் கடைசி யில் மேயர் பேசும் போது “என்னை ஆண்டவன் காப்பாற் றட்டும் என்று வாழ்த்தினார்” என்று அவர் பேசப் பேசவே வெடிச்சிரிப்பு எழுந்தது. “வேறொன்றுமில்லை, ஆளுகிறவர் தளபதி மு.க.ஸ்டாலின், என்னை ஆண்டவர் முத்தமிழறிஞர் கலைஞர், அவ்வளவுதான். வேறொன்றுமில்லை” என்றதும் அரங்கமும், மக்களும், மேயரும் வெடித்துச் சிரித்தனர்.

மேயர் சுந்தரி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்: தமிழர் தலைவர்

இங்கே மேயரை பேசச் சொன்னபோது அவருக்கு பேசத் தெரியுமா என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்பார்த்ததை விட சிறப்பாக பேசி விட்டு,  முடிக்கும் போது 'ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்' என்றார். அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். ஆம்! இப்போது ஆளும் தளபதி ஸ்டாலின் அவர்களையும் இதற்கு முன் ஆண்டவர் இந்த நாட்டை ஆண்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும் தான் சொல்லி யிருக்கிறார் ( ஒரே கைதட்டல்).

கலைஞரை நினைவுபடுத்தியதால், அதையொட்டியே சில கருத்துகளைப் பேசினார். அதாவது, “அவர்தான் பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தார். 1929 இல் செங்கல்பட்டு மாநாட்டில் பெரியார் கொண்டு வந்த தீர்மானம் அது. அப்போது, கலைஞருக்கு வயது 5. கலைஞர் 1925 இல் பிறந்தவர்! 1929 இல் மாநாடு. அந்தக்கலைஞர்தான் 1989 இல் இந்தியாவிலேயே பெண்களுக்கு முதல் முதலில் சொத்துரிமை உண்டு என்று சட்டம் செய்தவர்” என்றார். தகவல் தெரிந்த மக்களுமே வியந்துபோய், தங்களை அறியாமல் கைதட்டினர். ”இதுதான் திராவிட மாடல்” என்றார்.

ஒரு கட்டத்தில் ”நம்ம ஊரு” என்று பேசினார். அதிலும், நம்ம ஊரில், முதல் மேயர். அதுவும் ஒரு பெண் மேயர்! அதுவும் வணக்கத்துக்குரிய மேயர்! என்று சொல்லி, சொல்லி விதைத்த விதைகளெல்லாம் இன்று முளைத்து நிற்கிறதே என்ற உற்சாகத்தில் திளைத்தார். மேலும், மேலும் கடலூர் நினைவுகளிலிருந்து மீள முடியாமல், “இதே கடலூரில்தான் 1972 இல் கலைஞர் பெரியாரின் சிலையைத் திறந்தார் என்று செருப்பொன்று போட்டால், சிலையொன்று முளைக்கும் என்ற எதிர்நீச்சல் வரலாற்றை மிகுந்த மலர்ச்சியுடன் மீட்டிக் காட்டினார். இந்த உற்சாகப் பெருக்கில், அமைச்சர், மேயர், துணை மேயர் ஆகியோருக்கு ஆடை போர்த்தி மரியாதை செய்தார்.

மரியாதை செய்து முடித்ததும் நிகழ்ச்சிக்கான உரையைத் தொடங்கினார். திராவிடர் இயக்க வரலாற்றை 102 ஆண்டு களுக்கு முன்பிருந்து தொடங்கினார். அந்த வரலாற்றில், தந்தை பெரியார், பனகல் அரசர் ஆகியோர் முன்னிலை பெற்றனர். “சமஸ்கிருதத்திற்கும் டாக்டருக்கும் என்ன சம்பந்தம்?” என்று பெரியார் கேட்டார்.  நீதிக்கட்சியின் அனை வருக்கும் அனைத்தும் என்ற கோட்பாட்டில் செயல்பட்ட பல்வேறு தகவல்கள் அணிவகுத்தன. அதில் பார்ப்பனர் நலனும் சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. எதைக்கொடுத் தாலும் சூத்திரனுக்கு கல்வியைக்கொடுக்கக் கூடாது என்ற மனுதர்மம் அம்பலப்பட்டது. பெரியாரின் போராட்டத்தினால், குல்லூகப்பட்டர் ஆச்சாரியார் பதவியை விட்டு ஓடிப்போனது வெளிப்பட்டது. பெரியாரால் காமராஜர் முதல்வரான தமிழ் நாட்டுக்கான வரலாற்றுத்திருப்பம் சுட்டிக்காட்டப்பட்டது. இதில் வரிசைகட்டி நிற்கும் வெற்றிகளின் பட்டியல் எடுத்துக்காட்டப்பட்டது. ஆகவே பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிந்தனைகள் வெற்றி பெற்றே தீரும் என்ற உண்மை பளிச்சிட்டது.

தொடர்ந்து, ’நீட்’ தேர்வை தோலுரித்தார். நீட் கல்விக்கு கோடிக்கணக்கில் செலவாவதை அமைச்சர் சுட்டிக்காட்டி யதை கோடிட்டுக்காட்டினார். இந்தக் கல்வியைப் பொறுத்த வரை தமிழ்நாட்டைப் போல தெளிவு இல்லை என்பதை விளக்கினார். சட்டத்தை மீறுவோரை சுட்டிக்காட்டும் இடத்தில் இருக்கும் ஆளுநரே சட்டத்தை மீறுகிறாரே என்று குற்றம் சாட்டினார். காவிக்கட்சியையும் விடவில்லை அவர், நாங்க வந்துட்டோம், வந்துட்டோம் என்று சொல்லிக்கொண் டிருப்பதை சுட்டிக்காட்டி, கருடாழ்வார் மாதிரி தோள் மேலே தூக்கி வைத்துக்கொண்டீர்கள். காவிகள் வந்தார்கள். அவ் வளவுதானே? இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழ் நாட்டில் காவிக்கட்சி காலூன்ற முடியாது என்று பிரகடனப் படுத்தினார். மக்கள் அதை ஏகபோகமாக ஆதரித்து ஆரவாரித்தனர். 

இறுதியாக, “இந்தக் கல்விக்கொள்கை வந்தால், பள்ளிக் கூடங்களை மூடிவிட்டு, கோச்சிங் சென்டர்தான் தொடங் கணும். இதுவொன்றும் எங்களுக்காக அல்ல, தோழர்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, உங்கள் பேரப் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக! ஆகவே விழித்துக்கொள் ளுங்கள்” என்று கூறிவிட்டு, மேயரைச் சுட்டிக்காட்டி, “இன்னும் சில கூட்டங்களுக்கு எங்களுடன் வந்தால் பகுத்தறிவாளர் ஆகிவிடுவார். முதலில் அவரது கணவர் ராஜாவைத் திருத்த வேண்டும். ஏனெனில் கைகளில் கயிறு கட்டியிருக்கிறார் என்று சிரித்துக்கொண்டே சொல்லச் சொல்ல, ராஜா தனது கையில் கட்டியிருக்கும் கயிற்றை மற் றொரு கையால் மறைக்க, அனைவரும் வெடித்து சிரித்தனர். அத்தோடு தமிழர் தலைவர் தனது உரையை நிறைவு செய்தார்.

தமிழர் தலைவருக்கு தீப்பந்த வரவேற்பு

கடலூர் பரப்புரை பயணத்திற்காக வருகை தந்த கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் பிரம்மாண்டமான தீப்பந்த வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பு நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

இந்த பரப்புரை கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சரும் மாவட்ட தி.மு.க.செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, தி.மு.க மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் இள.புகழேந்தி, கடலூர் மேயர் சுந்தரி, மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன், ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர் மு.செந்திலதிபன், தி.மு.க.மாநகர செயலாளர் ராஜா, காங்கிரசு கட்சி மாவட்ட தலைவர் திலகர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் இராமலிங்கம், வி.சி.க.துணைப் பொதுச் செயலாளர் திருமார்பன், வி.சி.க.மாவட்ட செயலாளர் முல்லை வேந்தன், சி.பி.அய்.மாநிலக்குழு உறுப்பினர் குளோப், கடலூர் மாமன்ற உறுப்பினர் கண்ணன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, காங்கிரசு கட்சி மாவட்ட துணை தலைவர் ஓவியர் ரமேசு, காங்கிரசு கட்சி வழக்குரைஞர் சந்திரசேகர், மீனவர் விடுதலை வேங்கைகள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேசன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ.புத்தன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment