ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்க வேண்டாமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 18, 2022

ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்க வேண்டாமே!

 சித்திரைத் திருநாள் என்று கூறி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்  தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால் இந்த விருந்தை தி.மு. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. மக்களாட்சி மாண்பின் அடையாளமான சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் அலட்சியப் படுத்துவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், பா... மற்றும் .தி.மு.. மட்டுமே இந்த விருந்தில் கலந்துகொண்டன. அதுமட்டுமல்லாது விருந்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பா.. தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சிகள் விருந்தில் கலந்து கொள்ளவில்லையென்றால், ஆளுநருக்கு 'டீ' செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகி இருக்கிறது. ஆளுநர் என்பவர் தமிழ்நாடு மக்களின் பிரதிநிதி. ஆளுநர் விருந்துக்கு அழைப்பது என்பது காலம் காலமாக உள்ள மரபு என பேசியுள்ளார்.

தமிழ்நாடு மக்களின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருசேர கொண்டுவந்த மசோதாவை ஆளுநர் நிராகரித்ததைக் கண்டிக்கும் விதமாக, விருந்தைப் புறக்கணிக்கும் கட்சிகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியதாக அண்ணாமலைக்கு கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், அண்ணாமலைக்குப் பதிலடியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்  சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்றுவர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாதுஎனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஆளூர் ஷாநவாசின் சுட்டுரைப் பதிவுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதில் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த பதிவில்,“இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விட்டீர்கள் -  ஆளூர் ஷாநவாஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகைக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதனை ஊடகவியலாளர் பர்கத் அலி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “ஆளுநர் மாளிகைக்கு எவ்வளவுதான் செலவாகிறது? அரசு வட்டாரத்தில் தகவலைத் திரட்டினேன்.

ஆளுநர் செயலகம், ஆளுநர் இல்லம் என ராஜ்பவனுக்காக இரண்டு வகையான செலவுகளை அரசு செய்கிறது. அதன்படி 2021 - 2022 ஆண்டுக்கான செலவு விவரங்கள் கிடைத்தன.

முதலில் ஆளுநரின் செயலகம் பற்றிய செலவுகளை  பார்ப்போம். ஆளுநரின் செயலகத்தில் ஆளுநரின் அலுவலக ரீதியிலான பணிகளைச் செய்வதற்காக பணியாளர்கள் இருப் பார்கள். அவர்களுக்காகவும் அலுவலகத்தின் பணிகளுக்காகவும் பணம் செலவிடப்படுகிறது.

ஊதியத்திற்காக மட்டுமே 2021-2022ஆம் ஆண்டுக்கு 1,60,79,000 ரூபாயைச் செலவிட்டிருக்கிறார்கள். என்னென்ன செலவுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன? என்றால், அடிப்படை ஊதியம் - ரூ.1,44,43,000 மருத்துவபடி - 36,000, மருத்துவ செலவுகள் - ரூ.50,000, படிகள் - ரூ.88,000 வீட்டு வாடகைப் படி - ரூ.12,23,000 பயண சலுகை - ரூ.30,000,  நகர ஈட்டுப்படி - ரூ.2,09,000, அகவிலைப்படி - ரூ.32,50,000, சுற்றுப் பயணப் படிகள் - ரூ.8,00,000 தொலைப்பேசி கட்டணம் - ரூ.5,00,000 ,சில்லறை செலவுகள் - ரூ.5,10,000 மின் கட்டணம் - ரூ.3,91,000,  அஞ்சல் செலவு - ரூ.90,000, வண்டிகளின் பராமரிப்பு - ரூ.1,53,000, பொருள்கள் வாங்கியது - ரூ.1,00,000 அரசு வழக்குரைஞர் கட்டணம் - ரூ.1,00,000, ஒப்பந்த ஊதியம் - ரூ.57,09,000, பெட்ரோல் / எரிபொருள் - ரூ.6,14,000, பராமரிப்பு - ரூ.42,000,  ஸ்டேஷனரி - ரூ.1,29,000  மொத்தம் - ரூ.2,84,97,000.

ஆளுநரின் செயலகத்திற்கு மட்டுமே ஒரு ஆண்டிற்கு 2 கோடியே 84 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  அப்படியென்றால் ஆளுநரின் இல்லத்திற்கு என்னென்ன செலவுகள் செய்யப்படுகின்றன? அதன் விவரம் விரைவில்...” எனத் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆளுநர் மாளிகைக்கான ஆண்டு செலவினம் ரூ.13 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரம் ஆகிறது.

ஒன்றைக் கொடுத்து ஒன்பதை  வாங்கிக் கொள் வானேன்? என்ற ஒரு பழமொழி வழக்கில் உண்டு. அதற்கு எடுத்துக்காட்டுத் தான் இது. அண்ணாமலை என்பவர் ஒரு கட்சியின் தலைவ ரானவர் - ஒரு காவல்துறை அதிகாரியாகப் பேசுவது, அவருக்கும் நல்லதல்ல அவர் மாநிலத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் கட்சிக்கும் நல்லதல்ல!

ஆளுநர்மீது நமக்குத் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது.

 

No comments:

Post a Comment