புதுப்பிக்கப்பட்ட பெரியார் மன்ற கட்டடத் திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

புதுப்பிக்கப்பட்ட பெரியார் மன்ற கட்டடத் திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

 பெரியார் அய்யாவிற்கு வைத்த இரண்டாவது சிலை தருமபுரியில்தான்!

ஆண்கள் முடிவெடுப்பதில் கொஞ்சம் தடுமாறுவார்கள்;

பெண்கள் முடிவெடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பார்கள்

தருமபுரி, ஏப்.3    பெரியார் அய்யாவிற்கு வைத்த இரண்டாவது சிலை தருமபுரியில்தான்! ஆண்கள் முடிவெடுப்பதில் கொஞ்சம் தடுமாறுவார்கள்பெண்கள் முடிவெடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பார்கள் என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

புதுப்பிக்கப்பட்ட பெரியார் மன்ற

கட்டடத் திறப்பு விழா

கடந்த 20.3.2022 அன்று காலை 9 மணியளவில் தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புதுப்பிக் கப்பட்ட பெரியார் மன்றக் கட்டடத் திறப்பு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது  சிறப்புரை  வருமாறு:

எழிலோடு, மிகக் குறுகிய காலத்தில், சிறப்பாக தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், தருமபுரி பெரியார் மன்றம் -புதுப்பிக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி, பேரூ ராட்சி, துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்களுக்குப் பாராட்டு விழாவிற்குத் தலைமை தாங்கியிருக்கக்கூடிய திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய மானமிகு தோழர் ஊமை.ஜெயராமன் அவர்களே,

வரவேற்புரையாற்றிய தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு எல்.அய்.சி. மு.பரமசிவம் அவர்களே,

இந்நிகழ்ச்சியில், நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று இங்கே சிறப்பாக வருகை புரிந்துள்ள, மேனாள் அமைச்சர் என்று சொல்வதைவிட, எந்நாளும் திராவிட இயக்கத் தூண்களிலே இந்தப் பகுதியிலே ஒருவர் என்ற பெருமைக்குரிய பகுத்தறிவாளர் அருமைத் தோழர் பழனியப்பன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற கழகத் தின் அமைப்புச் செயலாளர் மானமிகு ஒரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களே,

மேனாள் மாவட்டக் கழகத்தின் முதுபெரும் தலை வர்கள், காப்பாளராக இன்றைக்குத் திகழ்ந்து கொண் டிருக்கக்கூடிய  அருமைத் தோழர் தீர்த்தகிரி அவர்களே, புலவர் வேட்ராயன் அவர்களே, சிவாஜி அவர்களே, தமிழ்ச்செல்வன் அவர்களே மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடிய இயக்க முன்னணித் தோழர் களே, பகுத்தறிவாளர் கழகத்தில் மாநிலப் பொறுப்பாள ராக இருக்கக்கூடிய அருமை நண்பர் கலைத்துறை பொறுப்பாளர் மாரி.கருணாநிதி அவர்களே,

பெரியார் மன்றத்தின் பொறுப்பாளர் தகடூர் தமிழ்ச் செல்வி அவர்களே, அரூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினராகவும் இருக்கக்கூடிய தோழர் இராஜேந்திரன் அவர்களே,

அதேபோல, சிறப்பான கல்வியாளர் தில்லை

மு.இராஜேந்திரன் அவர்களே,

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன உறுப்பி னர் சேலம் பழனி.புள்ளையண்ணன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடிய அருமை நண்பர் மதியழகன் கனகராஜ் அவர்களே,

கே.ஆர்.சி.ஆசைத்தம்பி அவர்களே, யாழ்.திலீபன் அவர்களே, தோழர்களே, ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக் கூடிய அருமை நண்பர்களே!

எனது கெழுதகை நண்பர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் அருமைத் தோழர் மானமிகு கோவேந்தன் அவர்களே,

மற்றும் வெற்றியாளர்களாக வாகை சூடிவந்து, உள்ளாட்சித் துறையில் முத்திரைப் பதிக்கவிருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, பொறுப்பாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினையும், வாழ்த்தினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊராட்சி மன்றங்களும், உள்ளூர் மன்றங்களும் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்றன

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக் கூடிய தோழர்கள்  பாலக்கோடு சேர்மன் திரு.முரளி அவர்களே, அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ஏராளமாக இருக்கின்ற காரணத்தினால் எல்லோரையும் அழைத்ததாகக் கருதிக் கொள்ளவேண்டும். ஏனென்றால், நீண்ட பட்டியல் இருக்கிறது. பொதுவாக இந்த மன்றம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மன்றம் மட்டும் புதுப்பிக்கப்படவில்லை; ஊராட்சி மன்றங்களும், உள்ளூர் மன்றங்களும் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்றன.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், நம்முடைய அருமையான ஒப்பற்ற முதலமைச்சர், இந்தியாவின் முதல் முதலமைச்சர் என்ற பெருமைக்குரிய சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு..ஸ்டாலின்  அவர்களுடைய தலைமையில், தொடர் வெற்றிகளிலே முத்தாய்ப்பு வெற்றியாக, இந்த ஊராட்சி, உள்ளாட்சித் துறைகளில் வெற்றி பெற்று வந்திருக்கிறீர்கள்.

எனவே, வெற்றி பெற்று வந்திருக்கக் கூடியவர் களுக்கும், அந்த வெற்றிக்கு உழைத்து மேடையிலும், எதிரிலேயேயும் இருக்கக்கூடிய அருமைத் தோழர் களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தாய்க் கழகம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறது.

உங்களையெல்லாம் சந்திக்கவேண்டும்; வாழ்த்து களைச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான், மிகப் பெரிய அளவிலே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

உங்களையெல்லாம் பார்க்கும்பொழுது மிகவும் உற்சாகமாக இருக்கிறது

இது தனி நிகழ்ச்சியாக இருந்தால், நீண்ட நேரம் உங்களிடையே உரையாடுவதற்கான வாய்ப்பு கிடைக் கும். ஆனால், இது தனி நிகழ்ச்சியல்ல; இது முதல் நிகழ்ச்சி, ஏனென்றால், வரிசையாக நிகழ்ச்சிகள் இருக் கின்றன.இனிமேல் தொடர்ச்சியாக நிகழ்ச்சியில் பங் கேற்றுவிட்டு, திருச்சியிலோ, சென்னையிலோ சென்று படுக்கவேண்டும். நேற்று இரவு வந்ததுகூட, தேதி தள்ளிச்சென்றுதான் வந்தேன். என்றாலும், உங்களை யெல்லாம் பார்க்கும்பொழுது மிகவும் உற்சாகமாக இருக்கிறது.

தருமபுரி வறட்சி மாவட்டமல்ல -

புரட்சி மாவட்டம்

தருமபுரி என்றுசொன்னாலே, திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், இரண்டாவது தாய் வீடு போன்ற தாகும். தருமபுரியில் யார் வெற்றி பெறுகிறார்கள்?  பொதுவாக அரசாங்கக் கணக்கில் இந்த மாவட்டம் வறட்சி மாவட்டம் என்றுதான் இருக்கும். ஆனால், நம்முடைய இயக்க வரலாற்றைப் பொறுத்தவரையில், இது வறட்சி மாவட்டமல்ல - புரட்சி மாவட்டமாகும். அந்த வகையில், நாம்தான் வெற்றி பெற்று வருகின்றோம்.

நேற்று நான் கழகப் பொறுப்பேற்று 45 ஆம் ஆண்டு என்றெல்லாம் தோழர்கள் சொன்னார்கள். அது ஒரு சாதாரணமான நிகழ்வு, அவ்வளவுதான். எல்லோருக்கும் ஒரு உற்சாகத்தைத் தரவேண்டும் என்பதற்காகத்தான்.

உங்களுக்கு ஒரு  தகவலுக்காக சொல்கிறேன்.

1944 இல் சேலத்தில் நீதிக்கட்சி என்பது திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட பிறகு, அடுத்த ஆண்டு, ஈரோட் டில் திராவிட மாணவர் பயிற்சி முகாம் முடிந்ததும் - சேலம் மாவட்டத்திற்கு என்னைப் போன்ற ஒரு நாலைந்து பேரை அய்யா அவர்கள் அனுப்பினார்கள்.

தருமபுரிக்கு நாங்கள் எப்பொழுது வந்தோம் என் றால், 12 வயதில் வந்தோம். பெண்ணாகரத்தில் தோழர் நஞ்சையா. அப்பொழுது தருமபுரி நகரத்திற்குத் தலைவராக இருந்தவர் குமரன் பிரஸ் என்ற பெயரில் அச்சகம் வைத்திருந்த பொன்னுசாமி அவர்கள்தான்.

பொன்னுசாமி யார் என்றால், அமைச்சராக இருந்த .இராசாராம் அவர்களுடைய சித்தப்பா ஆவார்.

எம்.என்.நஞ்சையா அந்தக் காலத்தில் ஜமீன்தார். எங்களையெல்லாம் மிகவும் உற்சாகப்படுத்துவார். அதேபோன்று பெண்ணாகரம் இராமமூர்த்தி அவர்கள்.

இங்கே கட்டடத்தை எவ்வளவு சீரமைத்திருக் கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டுப் போங்கள் என்று சொன்னார்கள்; ஆனால், இங்கே வந்து பார்த்ததும்தான் தெரிந்தது, இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கட்டடத்தைப் பார்ப்பதைவிட, உங்களையெல்லாம் சந்திப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

பெரியார் அய்யாவிற்கு இரண்டாவது சிலை

தருமபுரியில்தான்!

இந்தக் கட்டடத்திற்கு என்ன சிறப்பு என்றால், இதை உருவாக்கியவர் தந்தை பெரியார் அவர்கள் தான். இங்கே இருக்கிற தந்தை பெரியார் சிலையை அண்ணா அவர்கள் திறப்பதாக இருந்தது. பெரியார் அய்யாவிற்கு வைத்த இரண்டாவது சிலை தருமபுரியில்தான். முதல் சிலையை திருச்சி யில் காமராசர் அவர்கள் திறந்து வைத்தார்.

அப்பொழுது  அண்ணா அவர்கள் முதலமைச்சராக ஆகிவிட்டார். சிலை திறப்பு தேதியெல்லாம் குறித்த பிறகு, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை தொந்தரவு செய்யவேண்டாம் என்று விட்டுவிட்டோம்.

ஆனால், கெட்ட வாய்ப்பாக, அண்ணா அவர்கள் மறைந்துவிட்டார். கெட்ட வாய்ப்பாக இருந்தாலும், அந்தப் பணியைத் தொடர்ந்தவர் நம்முடைய முத் தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

இந்த சிலையைத் திறப்பதற்கு, கலைஞர் அவர்களை அழைத்து வந்தோம். அந்த விழாவில் கலைஞர் ஆற்றிய உரை எங்களுக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

தோழர்கள் சம்பந்தம், உசேனி பீரான் போன்றவர்கள் எல்லாம் இருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தில் கலைஞர் உரையாற்றும்பொழுது, ''நான் இளைஞராக இருக்கும்பொழுதே, பெரியார் அவர்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அய்யாவின் பின்னால் சென்றுவிட்டேன். எங்கள் ஊரில் இருந்த பல பேர் என்ன சொன்னார்கள் என்றால், ''பெரியாரோடு போனவர் உருப்படுவாரா?'' என்று எனக்கு சாபம் கொடுத்தார்கள். நான் உருப்பட்டு இருக்கிறேனா, இல்லையா? என்று ஊர் அறியும், உலகம் அறியும்'' என்றார்.

இங்கேதான் பழைய பயணியர் விடுதி இருந்தது. சிலைக்குப் பின்னால் இருந்த இடத்தைப் பார்த்தார் தந்தை பெரியார்.

தருமபுரிக்கும், கிருஷ்ணகிரிக்கும் பெரிய போட்டி, காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது.

என்ன போட்டி என்றால்,  மாவட்டத்தைப் பிரிக்கும் பொழுது, தருமபுரி தலைநகரமா? கிருஷ்ணகிரி தலை நகரமா? என்ற போட்டிதான் அது.

பெரிய பிரச்சினையாயிற்று அது. அய்யாவை பொறுத்தவரையில், கிருஷ்ணகிரியைவிட, தரும புரியைத்தான் சொந்த மாவட்டம் போன்று கருதினார். பல கருத்துகளை சொன்னார்.  நடுவில் இருப்பது தருமபுரிதான். ஆகவே, தருமபுரியைத்தான் தலைநகர மாக ஆக்கவேண்டும் என்று என்னை அழைத்துச் சொன்னார். இதுகுறித்து ஒரு தலையங்கத்தை எழுதுங்கள் என்று சொன்னார்.

நாகராஜ மணி அவர்கள் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். அவர் கிருஷ்ணகிரியைத்தான் தலைநகர மாக்க வேண்டும் என்று சொல்கிறார்.

பெரியார் ஒரு பக்கமாக சாயமாட்டார்; நடுநிலையோடுதான் சொல்வார்

'விடுதலை'யில் வெளிவந்த தலையங்கத்தைப் பார்த்த முதலமைச்சர் காமராஜர் அவர்கள், அவருடைய செயலாளரை அழைத்து, ''ஏம்பா, நாம் திக்குமுக்காடிக் கொண்டிருந்தோம் - கிருஷ்ணகிரியா? தருமபுரியா? என்று;  தரும புரியைத்தான் தலைநகரமாக்கவேண்டும் என்று பெரியார் சொல்லியிருக்கிறார். பெரியார் ஒரு பக்கமாக சாயமாட்டார்; நடுநிலையோடுதான் சொல்வார். ஆகவே, தருமபுரியையே தலை நகரமாக ஆக்குங்கள்'' என்று சொன்னார்.

இந்த இடத்தைப் பார்த்த தந்தை பெரியார் அவர்கள், ஒரு படிப்பகத்தைத் தொடங்கினால் நன்றாக இருக்குமே என்று சொன்னவுடன், அதற்கான வேலைகளை தொடங்கியவுடன், அய்யா அவர்களே பணம் கொடுத்து, அய்யாவே இரும்பு வாங்கச் சொன்னார்.  அப்பொழுது நகர தலைவராக இருந்தவர் உசேனி பீரான் அவர்கள்.

அய்யா அவர்கள் ஒவ்வொரு முறையும் பார்த்துதான், பழைய கட்டடம் இங்கே வந்தது.

அப்பொழுது இயக்கத்திலிருந்து சிலரை  வெளி யேற்றினார்கள் கட்டுப்பாட்டிற்காக. இங்கே பழைய தோழர்கள் ஏராளம் உண்டு.  மாவட்டத் தலைவர் நஞ்சைய்யா அவர்களுக்குப்  பிறகு நிறைய பட்டியல் உண்டு.

இந்தக் கட்டடம் கட்டி முடித்த பிறகு, அரசாங்கம் ஜி.. கொடுத்தது தவறா? சரியா? என்று அய்யா காலத்திற்குப் பிறகு,  அம்மா காலத்திற்குப் பிறகு, நான் பொறுப்பேற்ற பிறகு, வழக்குத் தொடர்ந்தார்கள்.

அந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரையில் சென்றது. நானே டில்லி உச்சநீதிமன்றத்திற்குச் சென்றேன், நமக் காக வாதாடுவதற்கு பிரபல வழக்குரைஞர் கே.கே.வேணு கோபால் ஆஜரானார்.

வழக்கு விசாரணையின்போது  மனுதாரர், ''நாங்கள் எல்லாம் கடைகள் வைத்திருக்கிறோம்; வியாபாரம் செய்கிறோம்'' என்று சொன்னார்.

அந்த அமர்வில் தலைமை நீதிபதி, ''படிப்பகம் இருக்கிறதா? இல்லையா?'' என்று கேட்டார்.

ஆமாம், படிப்பகம் நடக்கிறது; வாடகைப் பணத்தை அதற்காகத்தான் செலவு செய்கிறார்கள்; அதற்குண்டான கணக்கு வழக்குகளை வைத்திருக்கிறார்கள் என்று மனுதாரர் வழக்குரைஞரே சொன்னார்.

அப்பொழுது நீதிபதி குறுக்கிட்டு, ''அது ஒரு அறக்கட்டளை - படிப்பகம் நடத்துவதென்றால், அதற் குண்டான செலவுகளைª சய்யவேண்டும். அதற்கு வருவாய் வேண்டும் என்பதற்காகத்தான், பெரியார் அவர்கள் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருக் கிறார்; அந்த வாடகையை வாங்கித்தானே படிப்பகம் நடத்துகிறார்கள். படிப்பகம் பொதுமக்களுக்குப் பயன் படக் கூடியதாகத்தானே இருக்கிறது'' என்று சொன்னார்.

பிறகுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

இந்தக் கட்டடத்திற்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. திராவிட இயக்க வரலாறு - திராவிட இயக்க எழுச்சி வரலாறு - இவை அத்தனையையும் விழுங்கிவிட்டுத்தான் இந்தக் கட்டடம் இருக்கிறது.

ஆகவே, இந்தக் கட்டடம் இன்றைக்கு எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அதேபோன்று நீங்கள் எல் லோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறவர்கள் - மிகப்பெரிய அளவிற்கு, போராட்டத்திற்குப் பிறகு கட்டட வழக்கில் நாங்கள் எப்படி வெற்றி பெற்றோமோ, அதுபோன்று நீங்களும்  போராட்டத்திற்குப் பிறகுதான் வெற்றி பெற்று வந்திருக்கிறீர்கள்.

உள்ளாட்சியும், நம்மாட்சிதான்!

அதிலும் குறிப்பாக நிறைய சகோதரிகள், தாய்மார்கள் வந்திருக்கிறார்கள்.

உள்ளாட்சியும், நம்மாட்சிதான் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொன்னார்.

உள்ளாட்சியும் நம்மாட்சியாக இருந்தால் மட்டும் போதாது, உண்மையாக மக்களாட்சியாக இருக்க வேண் டும். அதற்காக  நீங்களெல்லாம் பணியாற்ற வேண்டும் என்று தாய்மார்களையும், சகோதரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

பெண்கள் 50 விழுக்காட்டிற்குமேல் வரவேண்டும் என்பதுதான் பெரியாருடைய கொள்கை. அதை அருமையாக செய்துவிட்டார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். பாதிக்குமேல் பெண்கள்தான்.

 பார்ப்பன ஆதிக்கத்தைவிட மிகக்  கொடுமையாக இருந்தது ஆணாதிக்கம்

ஒரு காலத்தில், பெண்களை நாற்காலியில் உட்கார அனுமதிக்கமாட்டார்கள், ஆண்கள். அந்த அளவிற்கு ஆணாதிக்கம் இருந்தது. பார்ப்பன ஆதிக்கத்தைவிட மிகக்  கொடுமையாக இருந்தது ஆணாதிக்கம்.

பார்ப்பன ஆதிக்கத்தையாவது நகர்த்திவிடலாம்; ஆணாதிக்கத்தை நகர்த்த முடியாது.

ஒரு சிலர் கேட்கிறார்கள், ''பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவராக, நகராட்சி மன்றத் தலைவராக, பேரூராட்சித் தலைவராக ஆகிவிட்டார்கள் என்பதெல் லாம் உண்மைதான்; ஆனால், இன்னும் அவர்கள், அவர்களுடைய கணவன்மார்களின் பின்னால்தானே வருகிறார்கள்; கணவரைப் பார்த்துத்தானே பதில் சொல்கிறார்கள்.  அவர்தானே எல்லாவற்றையும் சொல் லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்'' என்று கேட் கிறார்கள்.

அது உண்மைதான்; தவறில்லை. பயிற்சி பெறாத - இதுவரையில் அடுப்பங்கரையில் உட்கார வைத்திருந்த ஒருவரை, இன்றைக்குப் பஞ்சாயத்து அலுவலகத்தில் அமர வைத்தால், அவர்களுக்கு திடீரென்று 'ஞானம்' பிறந்துவிடாது; அவர்களுக்கு அனுபவம் வரவேண்டும்.

எல்லோரும் அப்படித்தான்; படிப்பறிவே இல்லாமல் தான் பள்ளிக்கூடங்களுக்குச் செல்கிறோம்; முதலில் தட்டுத்தடுமாறித்தான் படித்துவிட்டுவருகிறோம்.

அதுபோன்று, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு துணைவரோ, மற்றவரோ, உதவியாளர்களோ இருப்பது தவறேயில்லை. நாடகத்தில் நடிக்கும்பொழுது வச னத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காக பின்னால் இருந்து சொல்லிக் கொடுப்பார்கள்; அதுபோன்று சொல்வதில் தவறில்லை.

இது ஒன்றும் கடைசிவரையில் இருக்கப் போவ தில்லை. அப்படி கேள்வி கேட்டவர்களுக்கு நான் பதில் சொன்னேன். ஒரு கூட்டத்தில் அவருடைய கணவர் சொல்கிறபடி செயல்படுவார்கள்; இரண்டாவது, மூன்றாவது கூட்டங்களிலும் அப்படியே அவரது சொல்படியே செயல்படுவார். நான்காவது கூட்டத்தில், நீங்கள் சொல்லவேண்டாம்; நானே பார்த்துக் கொள்கிறேன் என்று துணிச்சலுடன் சொல்வார்கள்.

அய்ந்தாவது, ஆறாவது, ஏழாவது கூட்டம் முடிந்தவுடன், கணவரிடம், உங்களுக்கு என்ன சந்தேகம், நான் சொல்கிறேன் என்று சொல்கின்ற அளவிற்கு வருவார்கள்.

பெண்கள் முடிவெடுத்துவிட்டால்,

அதில் உறுதியாக இருப்பார்கள்!

ஆண்களுக்கும் - பெண்களுக்கும் என்ன வேறுபாடு என்றால், ஆண்கள் முடிவெடுப்பதில் கொஞ்சம் தடுமாறுவார்கள்; பெண்கள் முடிவெடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பார்கள்.

ஆகவே, இது ஒரு நல்ல வாய்ப்பு. விருப்பு - வெறுப்பு இல்லாமல், ஊர்நலம் ஓம்புதல் என்பதுதான் மிக முக்கியம்.

நீங்கள்தான் அரசாங்கத்திற்கு நல்ல பெயரை உருவாக்கக் கூடியவர்கள். இதுவரையில் கட்சிக்கு  எம்.எல்.., க்கள், எம்.பி.,க்கள் இருக்கலாம்; ஆனால், நீங்கள்தான் மக்களை நேரிடையாக சந்திக்கக் கூடிய வாய்ப்புப் பெற்றவர்கள்.

ஆகவே, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்; உங்கள் பகுதிகளுக்கு நான் வருவேன்; மக்களிடத்தில் நீங்கள் தொடர்பிலேயே இருக்கவேண்டும். ஊரைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒருவர் வீட்டில் இருக்கும் குப்பையை எடுத்து, அடுத்தவர் வீட்டு வாயிலில் போட்டுவிட்டுச் செல்வது தான் வாடிக்கை. அப்படி இல்லாமல், தூய்மைப் பணியில் மிகச் சிறப்பாக செயல்படவேண்டும்.

இப்பொழுது நிதிப்பற்றாக்குறை இருக்கிறது. மாநில சுயாட்சி கேட்கிற நிலையில் - உள்ளூர் சுயாட்சி எங்களுக்கு வேண்டும் என்று கேட்கிறீர்கள்.

ஆகவே, உங்களுக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட் டாலும், அதை அரசாங்கத்தினுடைய கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள். ஒரு நல்ல முதலமைச்சர் - அவரே உள்ளாட்சியிலிருந்துதான் வந்தவர்.

அவருடைய அரசியல் வாழ்க்கையைப் பொறுத்த வரையில், மேயர் - பிறகுதான், அமைச்சர்,  துணை முதலமைச்சராக வந்தவர்.

உள்ளாட்சியிலிருந்துதான் முதலமைச்சரின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது

ஆகவேதான், உள்ளாட்சியிலிருந்துதான் அவரு டைய அரசியல் வாழ்க்கைத் தொடங்கியது.

அதுபோல, வெற்றி பெற்ற அத்துணை பேருக்கும், இருபாலர்களாக இருந்தாலும், முப்பாலர்களாக இருந் தாலும், எப்பாலர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் திறன்பட செயல்படுங்கள்; நல்ல பெயர் எடுங்கள் - அதுதான் மிகவும் சிறப்பானது.

எல்லா வகையிலும் ஒழுக்கம், நாணயம், திறமை  என்பது இருக்கவேண்டும்.

தெரியவில்லை என்பதைப்பற்றி கவலைப்படா தீர்கள், கூச்சப்படாதீர்கள். கேட்டுத் தெரிந்துகொள் ளுங்கள். நீங்கள் எல்லோரும் நன்றாகப் படித்திருக் கிறீர்கள், உங்களுக்குத் தெளிவு இருக்கிறது.

ஆகவே, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment