இலங்கை : வாழ வழியின்றி ஏதிலிகளாக வரும் தமிழர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட ஒன்றிய அரசு உதவிட வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

இலங்கை : வாழ வழியின்றி ஏதிலிகளாக வரும் தமிழர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட ஒன்றிய அரசு உதவிட வேண்டும்!

தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு உதவிட ஒன்றிய அரசு முன் வரவேண்டும்

கடலூர் - நாகப்பட்டினத்தில் தமிழர் தலைவர் பேட்டி

கடலூர், ஏப்.11 -  இலங்கை அரசின் நிர்வாகத் திற னற்ற தன்மையால் அவதிப்பட்டு, வாழ முடியாத நிலையில் உயிரைப் பணயம் வைத்து கடல் வழியாக ஏதிலிகளாகத் தமிழ்நாட்டுக்கு வரும் தமிழர்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உதவிட வேண்டும்  - தமிழ்நாடு அரசின் முயற்சிக்கும் உதவிட வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

நீட் எதிர்ப்பு, புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் பறிப்பு எதிர்ப்புப் பிரச்சார பயணக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடலூர், நாகப்பட்டினம் பகுதிகளுக்குச் (10.4.2022)  சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவ்விவரம் வருமாறு:

செய்தியாளர்: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதே?

தமிழர் தலைவர்: 15 ஆவது நிதி ஆணையப் பரிந் துரையில் மோடி அரசு தெளிவாக அறிவித்திருக்கிறது. உள்ளாட்சித் துறையில் இதுவரையில் சொத்து வரியை நீங்கள் உயர்த்தவில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்துவது என்ற விதிமுறையில், கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தவில்லை. கடந்த ஆட்சியினர் 300 சதவிகிதம் அதிகமாக உயர்த்துவதாக அறிவித்து, பிறகு நிறுத்திவிட்டனர்.

வரியை உயர்த்தவில்லையென்றால்
உள்ளாட்சி மானியம் கிடையாது

இப்பொழுது நீங்கள் சொத்து வரியை உயர்த்த வில்லை என்றால், உங்களுக்கு உள்ளாட்சி மானியம் கிடையாது என்று தெளிவாக எழுதியிருக்கிறார்கள். எனவே, திட்டக்குழுவில் உள்ள நிதி ஆலோச கர்கள் சொத்து வரியை உயர்த்துவதுதான் சரியானது என்று அவர்கள் சொன்ன காரணத்தினால்தான்,

முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் தெளி வாக, ''மனமுவந்து இதனை நாங்கள் செய்யவில்லை; வேறு வழியில்லாததால்தான் நாங்கள் இதனை செய்திருக்கிறோம்'' என்று சொன்னார்.

அதிலும்கூட 50 விழுக்காடு நடுத்தரத்தில் இருப்பவர்களுக்குப் போடவில்லை. இதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால், அதை மறுபரிசீலனை செய்யவும் அவர் திறந்த மனதோடு அணுகுவார். காரணம், மக்கள் முதலமைச்சர் - மக்களால் முதலமைச்சர் ஆனவர் என்ற உணர்வு படைத்தவர்.

இலங்கைத் தமிழர்களை மீட்பதற்கு
எடுத்த நடவடிக்கை என்ன?

செய்தியாளர்: இலங்கையில் வறுமையின் காரணமாக அதிகமான மக்கள் வெளியேறுகிறார்கள். அதிலும் குறிப்பாக, தமிழர்கள்தான் அதிகமாக வெளியேறுகிறார்கள். பசி, பட்டினியில் சாவதைவிட, உயிரைப் பணயம் வைத்து கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று வருகிறார்கள். அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்?

 தமிழர் தலைவர்: இலங்கையில் ஒரு கொடுமையான ஆட்சியை நடத்துகின்ற குடும்பம், ராஜபக்சே குடும்பம். அவர்களுடைய திறமையற்ற நிர்வாகத்தினாலும், மக்களைப்பற்றி கவலைப்படாத ஓர் ஆட்சி அங்கே அமைந்திருக்கக் கூடிய காரணத்தினால், விலைவாசி உயர்ந்திருக்கக்கூடிய கொடுமை; பொருளாதாரத்தில் மிகப்பெரிய நலிவு ஏற்பட்டு, அங்கே ஆட்சியை நடத்த முடியாத அளவிற்கு - மக்கள் தவிர்க்க முடியாத அளவிற்கு வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள்.

முதலில் தமிழர்களுடைய வாழ்வாதாரத்தைப் பறித்தபொழுது, அது அவர்களுக்குத்தானே என்று நினைத்தவர்கள், இன்றைக்குத் தங்களுக்கும் சேர்த்துத்தான் வந்திருக்கிறது என்ற பாடத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால், நம்மைப் பொறுத்தவரையில், மனிதாபிமானத்தோடு இந்தப் பிரச்சினையைப் பார்க்கின்றபொழுது, அந்த மக்களுக்கு இந்திய ஒன்றிய அரசு உதவி புரிவது என்பது தவறல்ல.

அதேநேரத்தில், வெளியேறக்கூடிய  தமிழர்களுடைய நிலை மிக மோசமாக இருக்கிறது. நம்முடைய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இப்பொழுதுகூட தொடர்ந்து கைது செய்துகொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இருந்து வெளியேறுபவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை இந்திய ஒன்றிய அரசு செய்துகொண்டிருக்கின்ற இந்த நேரத்தில்,

தமிழர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு, அவர்களைப்பற்றியும் கவலைப்படவேண்டும்.

காஷ்மீரில் இருக்கக்கூடிய பண்டிட்டுகளுக்காக இன்னமும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர,

இலங்கையில் இருக்கக்கூடிய தமிழர்களின் வாழ்வாதாரத்தைப்பற்றி அன்றும் கவலைப்படவில்லை; இன்றும் கவலைப்படவில்லை. இந்த சூழ்நிலையில்தான், அவர்கள் ஏதிலிகளாக இங்கே வருகின்றபொழுது, அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க, அவர்களுக்குத் தஞ்சம் அளிக்க தமிழ்நாடு அரசு, இன்றைய முதலமைச்சர் அவர்கள் கருணை உள்ளத்தோடும், மனிதாபிமானத்தோடும் அதனை செய்து, பிரதமரைப் பார்க்கும்பொழுதுகூட, அதற்குரிய வாய்ப்பு வசதிகளை உருவாக்கித் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இனப் பிரச்சினையல்ல - 
மனிதநேயப் பிரச்சினை

ஆகவே, இது ஒரு மனிதநேய பிரச்சினையாகும் - இனப் பிரச்சினைகூட அல்ல. அதையும் தாண்டி மனிதநேய பிரச்சினை - இதில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டியது அவசியம்.

இலங்கையில் மக்களாட்சி நடைபெறாமல், ஒரு சர்வாதிகார ஆட்சி நடந்தால், அதுவும் ஒரு திறமையற்ற ஆட்சியாக இருந்தால், இப்படிப்பட்ட சங்கடங்களை சந்திக்கவேண்டும். மக்கள் தஞ்சமடைவதைவிட, அவர்கள் எங்கே தஞ்சமடைவது என்று ஆளுகின்றவர்கள் நினைக்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.

இந்தக் கொடுமையான நிலையை நன்றாகப் புரிந்துகொண்டிருக்கின்றோம். மாநில அரசு, தமிழ்நாடு அரசு, தி.மு.க. அரசு மனிதநேயத்தோடு இதை செய்யவேண்டும் என்று நினைத்தாலும், அதற்கு ஒன்றிய அரசு உரிய ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்துவோம்.

இலங்கையிலிருந்து வெளியேறுகின்ற தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழ்நாடு அரசு தவறாமல் செய்யும், செய்து கொண்டிருக்கிறது, செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

புதுவையில் பா.ஜ.க.வினர்
ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறார்களே!

செய்தியாளர்: புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சி முழுமையாக செயல்பட முடியவில்லை. முதலமைச்சராக பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவரை ஆக்கவேண்டும் என்கிற முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அங்கே உள்ள ஆளுநரும் அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தி பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. இதேபோன்று சூழ்நிலை தொடர்ந்தால், மாநில அரசுகளின் உரிமை என்னவாகும்? வாக்களித்த மக்களின் நிலைமை என்னவாகும்?

தமிழர் தலைவர்: ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் - தி.மு.க. இணைந்த ஓர் அரசை - திட்டமிட்டே, ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஒரு சிலரை விலைக்கு வாங்கி, சிலரை அச்சுறுத்தி, அந்த ஆட்சியைக் கவிழ்த்தார்கள்.

அதன் பிறகு தேர்தல் நடைபெற்றது; அந்தத் தேர்தலில் பா.ஜ.க.வினர், இன்றைய முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தினார்கள்.

ரங்கசாமியின் தயவின்றி, புதுவையில் வர முடியாது என்று பா.ஜ.க.வினர் உணர்ந்த காரணத்தினால், அவரைப் பயன்படுத்தி, கூடாரத்திற்குள் ஒட்டகம் முதலில் நுழைவதைப்போல நுழைந்தார்கள். பிறகு, கூடாரத்திற்குள் உள்ளவர்களை வெளியேற்றிவிட்டு, கூடாரம் முழுவதும் எங்களுடையது என்று ஒட்டகம் எண்ணுவதைப் போல இருக்கிறது.

இது இன்று அல்ல - அப்பொழுதே நாங்கள் தெளிவாக சொன்னோம். இவருடைய ஆட்சியை நிலைக்க விடமாட்டார்கள் என்றோம்.

அதுபோலத்தான் இன்றைக்கு நடைபெறுகிறது. முன்பு இருந்த ஆட்சிக்கு இடையூறாக எப்படி ஆளுநர் கிரண்பேடி பயன்பட்டாரோ, அதுபோல இப்பொழுது இருக்கின்ற ஆளுநரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புதுச்சேரி மக்கள் இதையெல்லாம் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படி வந்தால், நிச்சயமாக வருகின்ற அரசுகூட ஒரு நிலையான ஆட்சியைத் தர முடியாது.

ஒட்டுமொத்தத்தில் புதுவை மாநிலத்தினுடைய நலன் என்பதும், மக்களுடைய தீர்ப்பு என்பதும் அங்கே கேலிக்கூத்தாக ஆகியிருக்கிறது.

விரைவில் இந்த நாடகத்தை உலகம் அறியும் - எல்லோரும் உணர்வார்கள். இந்த நாடகத்திற்கு முடிவு சோக முடிவா? அல்லது வேறு காவியமா? என்பதை அரசியல் ரீதியாக விரைந்து மக்கள் பார்ப்பார்கள்.

கீழடி வேலைகளைச் செய்துதான் பா.ஜ.க.வினர்ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள்

இது பா.ஜ.க.விற்குக் கைவந்த கலை; அவர்கள் எல்லா இடங்களிலும் முதலில் உள்ளே நுழைவதைப்போல நுழைவார்கள். அப்படித்தான் மற்ற மாநிலங்களிலும் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மக்கள் வாக்களிப்பதைவிட, இதுபோன்ற கீழடி வேலைகளைச் செய்துதான் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.


No comments:

Post a Comment