அடுத்த பயணத்திற்குக் காத்திருக்கிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

அடுத்த பயணத்திற்குக் காத்திருக்கிறோம்

 - ம. கவிதா, திருப்பத்தூர்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியருக்கு வயதாகிவிட்டது என்று யார் சொல்ல முடியும்? அவர் இளமைக்கால சுறுசுறுப்போடு  இயங்கிக் கொண்டிருக்கிறார்! மாபெரும் தடுப்பூசித் திருவிழாவை நடத்தி முடித்துவிட்ட 'களை' தெரிகிறது அவர் முகத்தில் - வெயிலின் களைப்புக்கு  இடையிலும்.

தன் வாழ்வையே தமிழர்களின் நலனுக்காக 'நேர்ந்து' விட்ட தலைவருக்கு பயணங்கள் ஒன்றும் புதிதல்ல என்றாலும் இப்பயன்பட்ட பயணம் அவர் வாழ்விலும் பணியிலும் அவர் சூடியிருக்கும் புகழ் மகுடத்தில் மற்றுமொரு 'வரலாறு படைக்கும் வைரக்கல்' என்றால் மிகையல்ல.

எதற்காக நா வறள  
இந்த நாற்பது கூட்டங்கள்?

தொண்டை கரகரத்தாலும் தொண்டின் இன்பத்தில் இளைப்பாறிக் கொண்டு பேசி பேசி  தொடர்ந்த தொண்டறம் எதற்காக?

'பழைய கள் புதிய மொந்தை' என்று தலைவர் அடிக்கடி சொல்லுவார்.

அப்படித்தான் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை எல்லாரும் படிக்கக்கூடாது என்றிருந்த நிலையைப் போராடி மாற்றிய ஒரு காலகட்டத்தில் மீண்டும் 'இன்னாருக்கு இன்னது தான்' எனும்படியான அதே ஆயிரம் ஆண்டுகால புளித்துப்போன குலக்கல்வி எனும் பழம் 'கள்' புதிய கல்வி என்ற பார்ப்பதற்கு மினுமினுப்பான, வளர்ச்சி -தகுதி என்ற பெயரில் பளபளப்பான புதிய மொந்தையில் மாற்றி வைக்கப்படும்போது, எதையும் முன்னோக்கிச் சொல்லும் முழுமதியாளர் நம் கழகத் தலைவர் ஆசிரியர் ஆபத்து நேரும்போது,  தூங்காமல் விழித்திருந்து நம்மை விழிக்க வைக்கும் சங்கொலியாக முழங்கி வந்திருக்கின்றார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், நகராட்சி -ஊராட்சி மன்றத் தலைவர்கள்- உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்றுகூடி வரவேற்று வாழ்த்திய இப்பயணத்தில், வந்தவர், சென்றவர், இருந்தவர், வாழ்த்தியவர் என்று ஒருவரையும் விடாமல் விழிப்பூட்டி வந்திருக்கின்றார் வீரமானத் தலைவர்!

உணவு கொடுத்து, உடை கொடுத்து, முட்டை- பழமும் சேர்த்துக் கொடுத்து,  சைக்கிள் கொடுத்து, பை கொடுத்து இன்று உயர்கல்விக்கு ஊக்கத் தொகை என்பது வரை தூக்கிவிட கைகொடுத்து, படி படி என  படிக்கவைத்து  கட்டமைக்கப்பட்ட  கல்விக் கோட்டையை இடி இடி என்று அடியில் வைக்கும் கண்ணிவெடிகளைக் கண்டு ஒழிக்க, விழிப்பு ஏற்படுத்த நாகர்கோயில் முதல் சென்னை வரை ஏப்ரல் 3 முதல் 25 வரை தேர்தல் திருவிழா போல 'தலைமுறைக் காப்புவிழா' நடத்திய தலைவர் கிளிப் பிள்ளைக்கு சொல்வதுபோல் திரும்பத்திரும்ப ஓயாமல்  பேசியது இதைத்தான்...

"எண்ணிப் பாருங்கள் தோழர்களே! இந்த நீட்- புதிய கல்விக் கொள்கை எல்லாம் நம் மாநில உரிமையைப் பறித்து, கல்வியைப் பறித்து நம்மை பின்னோக்கித் தள்ளும். இன்று இந்தியாவிலேயே சிறந்த கல்வி வழங்குவதில் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. அதில் இப்போது கொண்டு வந்த

National educational policy    என்பது

No educational policy  யே தவிர வேறில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஒன்றிய அரசே நீட்டை இன்னும் நீட்டாதே! நீட் எதிர்ப்புத் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றி 200 நாள்கள் கடந்து விட்டன. எந்தப் பெயரிலும்

மாநில உரிமைகளைப் பறிக்காதே! ஆளுநரின் வேலை என்பது 
அஞ்சல்காரர் வேலை மட்டுமே! 

ஒத்திசைவுப் பட்டியல் என்பது நம் கல்வியை ஒழித்துக் கட்டும் பட்டியல் அன்று. நம்முடைய நாட்டில் நம்முடைய பிள்ளைகள் படித்தால்தான் நம் மக்களுக்கு மருத்துவம் பார்க்க முடியும். மொழி தெரியாத பிள்ளைகள் வந்து இங்கு படித்து விட்டு வெளியூருக்குச் சென்று விட்டால் நம் மக்களின் கதி என்ன? நம் பிள்ளைகள் அடுக்கடுக்கான பொதுத்தேர்வுகளை கடந்து எடுக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் பலன் இல்லையா? எவ்வளவு சதி இது?

நீட் தேர்வு என்பது தகுதி தேர்வு அல்ல, தடுப்புத் தேர்வு! நுழைவுத் தேர்வு அல்ல, நுழைய விடாத்தேர்வு!

நண்பர்களே! இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய, எல்லாரையும் தட்டி எழுப்பக்கூடிய இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை சரக்கு எது தெரியுமா? பெரியார்! பெரியார்! பெரியார்!"

இப்படி எல்லாம் எடுத்துச் சொல்ல ஆசிரியரை விட்டால் நமக்கு யார் இருக்கிறார்கள்? இப்படிப்பட்ட ஒரு தலைவருக்குத் தான், சூட்ட வேண்டிய தகுதியான புகழ் மாலையாக, எட்டுக் கோடி தமிழர்களின் முகமான நம் முதலமைச்சர் அவர்கள், "கொள்கைகளில் எந்த சமரசமும் இன்றி இந்த திராவிட மாடல் ஆட்சியை நடத்திச் செல்வேன்" என்ற உறுதியளித்து, "ஆசிரியரின் உழைப்பை வாழ்த்து கிறேன், பாராட்டுகிறேன் வணங்குகிறேன்" என்று சொல்லும்பொழுது தம் மக்கள் என்பதையும் மறந்து எழுந்து- நெகிழ்ந்து நன்றியை  வணக்கமாக்குகிறார் தமிழர் தலைவர்.

இக்காட்சியைக் கண்ணுற்ற கருஞ்சட்டைத் தோழர்களின் விழிகளின் ஓரத்திலும் ஈரம் கசிந்தது இன்பத்தில் ‌.

தலைவரைக் காண்பதே தொண்டருக்கின்பம்!

திரைப்படம் பார்ப்பதும் திருவிழா போவதுமாக மக்கள் இருக்கையில், நமக்கு நம் தலைவர் பொதுக்கூட்டத்தில் பேசுவதை முன் இருக்கையில் அமர்ந்து உலகம் மறந்து கேட்பதைவிட வேறு  இன்பம் என்ன இருக்கப் போகிறது? கரோனாவால் இரண்டு ஆண்டுகள் அந்த வாய்ப்பே இல்லாமல் இருந்த நிலையில் நோயின் தாக்குதலுக்கு ஆளாகி மீண்டு வந்த தலைவரை வரவேற்க எல்லா மாவட்டங்களிலும் குடும்பம் குடும்பமாக நம் தோழர்கள் குவிந்து தலைவரைக் கண்டு -அவர் உரையைக் கேட்டு இன்பம் கொண்டார்கள்.  அவரும் கொஞ்சமும் அலுப்பு சலிப்பு இல்லாமல் சந்திப்பின் மகிழ்வில் தன்னை உந்தித் தள்ளி தயார்ப்படுத்திக் கொள்ளுகிறார் அடுத்த கூட்டத்திற்கு. அந்தந்தப் பகுதிகளிலும் இயக்கத் தோழர்களை தவறாமல் நினைவூட்டிச் சொல்கின்றார்... அவர்களின் உழைப்பை எடுத்துக்காட்டி பெருமைப்படுத்துகிறார்...

வழியெல்லாம் வழிந்தோடும் நிகழ்ச்சிகளாக மக்கள் வெள்ளத்தில் கடக்கின்றார்... அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அவரைச் சந்திக்க  வருகிறார்கள்... மேடையை நிறைக்கிறார்கள்...

(அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் இப்படி வாய்விட்டு சொல்லியே விட்டார் திருவண்ணாமலையில். ஆசிரியர் தம் தோழர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் மூலம்  கொள்கையைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்திலும் யாராவது இப்படி இளைஞர்கள் வருவார்களா என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார் சற்றே ஆதங்கத்துடன்)

தொடர்ந்து தொடர்கிறார் தலைவர்!

ஈரோட்டில் பரப்புரைப் பயண மேடையிலேயே ஓர் இணையேற்பு நிகழ்வை நிகழ்த்துகிறார்... இன்னொரு இடத்தில்

ஒரு குழந்தைக்கு அறிவுச்செல்வன் என பெயர் சூட்டுகிறார்...

கூட்டங்களின் முடிவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார்...

ராஜாஜியையே இந்தி நெவர்; இங்கிலிஷ் எவர் என்று சொல்ல வைத்த இயக்கம் இந்த இயக்கம் என்கிறார்...

ஆங்கிலத்திற்கு இருக்கின்ற செறிவு இந்திக்கு ஒருபோதும் கிடையாது. துளசிதாஸ் இராமாயணத்தைத் தவிர அதிலே ஒன்றும் கிடையாது. தாம் தூம் பஜனை தான் செய்யலாமே தவிர வேறு ஒன்றும் இல்லையே என்கிறார்.

பெரியார் வைத்திருந்த தார்ச்சட்டியும் பிரஷ்சும் இன்னும் அப்படியே இருக்கிறது, ஏப்ரல் 30இல் எழும்பூர் இரயில் நிலையத்தில் இந்தி எழுத்தை தார் பூசி அழிப்போம் என்று மேட்டுப்பாளையத்தில் போராட்ட முழக்கமிடுகிறார்...

மக்களின் உணர்வுகள் என்ற எரிமலையின் மீதமர்ந்து மகுடி வாசிப்பவர்கள், இலங்கையில் தங்களை அசைக்க முடியாது என்றவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள் என்று குன்னூரில் வெப்ப மூட்டுகிறார்...

கலைஞர் தான் எம் மொழியை செம்மொழி ஆக்கினார். பின்புதான் சமஸ்கிருதம் அப்படி ஆகவில்லை என்று தெரிந்தது. கலைஞர் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்காததால், சமஸ்கிருதமும் செம்மொழி ஆயிற்று அவ்வளவுதான். 'நெல்லுக்கு பாய்ந்த நீர் ஆங்கே தர்ப்பைப் புல்லுக்கும் பொசிந்தது' என்று சுவைபட உண்மை நிலை உணர்த்துகிறார்... 

சாய்வாலா என்று சொன்னவர் ஆட்சியில் தேனீர் கூட 15 ரூபாய், நாங்கள் கொடுக்கும் இந்தப் புத்தகம் மட்டும்தான் பத்து ரூபாய். எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது என்பதால்தான் புத்தகங்களாக கொடுக்கிறோம் என்று முத்தாய்க்கிறார் முடிவில்...

(பல இலட்சம் ரூபாய் மதிப்புக்கு நூல்கள் மேடையிலேயே விற்றுத் தீர்ந்தது)

கண்ணிவெடிகளை அகற்றும் படை

திராவிடர் கழகம் என்பது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எனும் இராணுவத்திற்கு முன்னால் சென்று கண்ணிவெடிகளை அகற்றும் தூசிப்படை போன்றது. அதில் ஓரிருவர் உயிர் இழந்தாலும் பரவாயில்லை என்று கழகத்தின் கடமையை எடுத்துக்காட்டிப் பேசுகிறார் திருவண்ணாமலையில்...

இந்த ஊருக்கு திராவிடர் இயக்க வரலாற்றில் சிறப்பான இடம் உண்டு, பக்திக்கு சொல்வார்கள் நான் சொல்வது புத்திக்கு என்று  இடைச்செருகல் செய்து இனிமை யூட்டுகிறார்...

தலபுராணங்கள் போல செல்லும் ஊர்களின் சிறப்புகளை எல்லாம் அள்ளி இறைக்கிறார்... காமராஜர் ஆட்சியில் மாவட்டத் தலைநகர் தருமபுரியா? கிருஷ்ண கிரியா? என்று தடுமாற்றம் வந்தபோது தருமபுரியைத் தேர்ந்தெடுக்கலாம் என விடுதலையில் தலையங்கம் எழுதச் சொன்னார் பெரியார் என்றதும் பெரியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என தருமபுரியையே காமராஜர் தேர்ந்தெடுத்தார் என்ற வரலாற்றுத் தகவலை எடுத்துச் சொல்லி அறியப்படுத்துகிறார்... பரப்புரைப் பயணக் கல்வெட்டையும் திறக்கிறார்...

மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்

சேலம் தனக்கு தாய்வீடு போன்றது என்று தந்தை பெரியார் சொன்னதைச் சொல்லி சேலம் மாவட்டத்தினர்க்கு சிலிர்ப்பு தருகிறார்...  சேலம் செயலாற்றும் காலம் என அண்ணா சொன்னதையும் கலைஞர் நண்பர்களோடு  அங்கிருந்ததையும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வல நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்கிறார்...

திண்டுக்கல், திருத்தணி, அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட அத்தனை இடங்களிலும், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு 50 விழுக்காடு உள்ளாட்சியில் ஒதுக்கீடு கொடுத்ததன் காரணமாக இன்றைக்கு இத்தனைப் பெண்கள் மேயர்களாகவும் துணைமேயர்களாகவும் நகரமன்றத் தலைவர்களாகவும் நாற்காலியில் அமர முடிகிறது என்றால் இதை நாங்கள் வெறும் பதவியாக மட்டும் பார்க்கவில்லை, தந்தை பெரியார் கொள்கையின் 'வெற்றிக் கனிகள் இவர்கள்' என்று உச்சி மோந்து பாராட்டுகிறார்...

தீப்பந்த வரவேற்பு

கடலூரின் தீப்பந்த வரவேற்பும் திருப்பத்தூரின் இருசக்கர வாகன அணிவகுப்பு வரவேற்பும் தலைவரின் வருகையை மிடுக்காய் ஒலித்தன.

ஓசூரில் கழகக் காப்பாளர் துக்காராம் அவர்களின் மறைவுக்கு அவரின் இல்லம் சென்று இரங்கல் தெரிவிக்கின்றார்... 

ஓசூர் பரப்புரைக் கூட்டத்தில்,

"நான் இங்கே வரக்கூடாது அவர் வந்தால் அப்படிப் பேசுவார் இப்படிப் பேசுவார், கடவுள் இல்லைன்னு சொல்லுவார் என்று காவல்துறையில் கடிதம் கொடுத்தார்கள், ஏன்யா இல்லாததை இல்லை என்றுதானே சொல்லணும் - இதில் என்ன இருக்கு? கரோனா ஒன்று போதாதா இல்லையெனச் சொல்ல? கடவுள்கள் எல்லாம் போர்வை போத்திக்கிட்டு உள்ளே இருந்துச்சே... நீங்க சொல்லலைன்னா இது எனக்கு நினைவுக்கு வந்திருக்காதே" என்று கடவுள் சங்கதியை சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கிறார்...

நீங்கள் எவ்வளவு எதிர்த்தாலும் நாங்கள் உங்களுக்காகப் பாடுபடுவோம். உங்கள் மிரட்டல் எல்லாம் எங்களிடம் பலிக்காது. ஆறு முறை என்னை கொல்வதற்கான முயற்சிகள் நடந்தன. உங்களுக்காக என் உயிர் போனால், வாழ்க்கை முடிந்தால், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக  பயன்பட்டால் மகிழ்வேன்" என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியதில் அனைவரையும் உறைய வைத்து விட்டார்.

பெரியார் எனும்
'சார்ஜர்'!

30 தோழர்களின் ஒருங்கிணைப்பு-  உடனிருப்புடன் சிறப்பாக பயணத்தை முடித்துவிட்டு நள்ளிரவுக்கு மேல் சென்னை வந்த நம் தலைவர் மறுநாள் காலையிலேயே ஒரு மணி நேரம்   செய்தியாளரைச் சந்திக்கிறார். உங்களுக்கு இவ்வளவு ஒரு நீண்ட பயணம் (4700 கி.மீ) அயர்ச்சியைத் தரவில்லையா? உங்களால் எப்படி முடிந்தது? என்று செய்தியாளர் கேட்கிறார். தலைவர் ஒற்றை விரலை பதிலாகக் காட்டுகிறார். அவர் காட்டிய இடத்தில் ஒய்யாரமாய் தந்தைபெரியார் நிற்கிறார்.

அடையாளம் 
காட்டுவோம்!

ஆசிரியரின் அகவையை நாம் காட்டிக்கொடுக்கத் தேவையில்லை...

அவ்வளவு சுறுசுறுப்பாகத் தான் அவர் இயங்குகிறார்... நாள்தோறும் பேசுகிறார், எழுதுகிறார், பயணிக்கிறார், தொண்டர்களைச் சந்திக்கிறார்... முதலமைச்சர் எடுத்துக் காட்டியதைப் போல திராவிடக் கருத்தியலின் உயிர் வடிவமாக உலவுகின்றார்...

"தமிழ்நாட்டிலிருந்து நாங்கள் யாரேனும் பேசினால் பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கிறது‌.  நாங்கள் பேசும் பொழுது மதிக்கிறார்கள் என்பதை விட பயப்படுகிறார்கள்  என்றால் அந்த பயத் திற்கு காரணம் இதோ இந்த முதிய உருவம் தான்" என்ற நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்களின் கூற்றில் இப் பெரிய மனிதர் வாழ்ந்த வாழ்க்கை- உழைப்பு வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது.

பெரியார் என்ற தத்துவத்தையே தலையில் தாங்கிக் கொண்டு, பெரியாரின் உழைப்பையே எடுத்துக்காட்டி உணர்வு கொண்டு,

ஊர் நலம் ஓம்பவே ஊர் ஊராய் சளையாமல் அலையும் நமதருமைத் தலைவர் ஆசிரியரின் அகவையை நாம்  ஏன் அவருக்கு அடிக்கடி நினைவூட்டப் போகிறோம்  என்றாலும்,   தொண்ணூறு நெருங்கும் வேளையிலும் இப்படி உழைக்கிறாரே  இத்தலைவர்,பாருங்கள் மக்களே! யாருக்காக இதெல்லாம்? நமக்காக- நம் வீட்டுப் பிள்ளைகளின் உயர்வுக்காக! என்று ஊருக்கெல்லாம் அவர் உழைப்பை- தொண்டினை தண்டோரா போடத்தான், அந்த காலக் கணக்கீட்டை எடுத்துக் காட்டுகிறோம்! 

இத்தகு  தமிழர்தலைவரைப் பெற்றதே எம் வாழ்வில் இறுமாப்பென பின்தொடர்கின்றோம்!

முனைந்து அவர் முன்னெடுத்த நெடும் பயணம்  விரைவில் வெல்லும்  நாளுக்காய்க் காத்திருக்கின்றோம்!


No comments:

Post a Comment