பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் சொத்துகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் சொத்துகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஏப்.28 - பள்ளிக்கல்வித் துறையின் குரூப்-ஏ மற்றும் குரூப்-பி அதிகாரிகளின் சொத்துகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக டேவிட் லியோ பணி யாற்றினார். அவரை கடந்த ஜனவரி மாதம் இடமாற்றம் செய்து உத்தர விடப்பட்டது. இதை எதிர்த்து அவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், மற்றொரு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால், அவருக்கு தண்டனை அளிக்கும் வகையில் எங்கள் பள்ளிக்கு அவரை இடமாற்றம் செய்தும், என்னையும் தேவையின்றி இடமாற்றம் செய்தும் உத்தரவிடப் பட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என்றும், குறிப்பிட்ட இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகை லஞ்சம் பெறப்படுவதாகவும் மனுதாரர் வழக்குரைஞர் கடுமையான குற்றச் சாட்டை வைத்துள்ளார். இவரைப் போல மேலும் சிலரும் இதே குற்றச் சாட்டை எழுப்பியதால், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை இந்த வழக்கில் தாமாக முன்வந்து இந்த நீதிமன்றம் எதிர்மனுதாரராக சேர்த்துள்ளது.

காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்

கல்வித்துறையில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்திற்காக லஞ்சம் பெறப்படுவது குறித்து பொதுமக்கள், ஆசிரியர்கள் அளிக்கும் புகார்களும் விசாரிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனுவில், கல்வித்துறையில் பதவி உயர்வு, இடமாற்றத்துக்கான லஞ்சம் குறித்து ஆண்டுதோறும் சுமார் 15 ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்படு கின்றன. இவை முறையாக விசாரிக்கப் படுகின்றன என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஆனால் லஞ்சம் குறித்து சுவ ரொட்டிகள் ஒட்டுவது போன்ற வெளிப்படையான புகார்கள் தெரிவிக்கப்பட்டும் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என மனுதாரர் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். எனவே லஞ்ச ஒழிப்பு துறையில் போதுமான எண்ணிக்கையில் அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுக்களை அமைத்து, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத்துறைகளில் குறிப்பாக, பள்ளி கல்வித்துறையில் நடக்கும் ஊழல் குறித்து விசாரிக்க போதுமான அளவில் காவல்துறையினரையும், அதிகாரி களையும் ஒதுக்கிட தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொத்துகளை ஆய்வு செய்ய உத்தரவு

இதேபோல பள்ளிக்கல்வித்துறை யின் குரூப் "-ஏ" மற்றும் குரூப்-பி அதிகாரிகளின் சொத்துகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அது அவர்களின் பணிப்பதிவேட்டில் குறிப் பிடப்பட வேண்டும். முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துகள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட வேண்டும். இதுவும் பள்ளிக்கல்வித் துறையின் ஊழல்களை குறைக்க பெருமளவில் உதவும்.

மனுதாரரின் கோரிக்கையானது, துறை சார்ந்தது. இதில் நீதிமன்றம் தலையிட தேவையில்லை. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment