சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 16 அடி உயரத்தில் கலைஞர் முழுஉருவ வெண்கலச்சிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 16 அடி உயரத்தில் கலைஞர் முழுஉருவ வெண்கலச்சிலை

குடியரசுத் துணைத் தலைவர் திறக்கிறார்

சென்னை,மே 8- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் (ஜூன் 3) அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

அதன்படி, 3.6.2022 அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்  12 அடி பீடம் அமைக்கப் பட்டு 16 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்து வருகிறார்.  குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை அவரது வீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் சந்தித்து பேசினார். தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உடனிருந்தார். அப்போது ஜூன் 3ஆம் தேதி அரசு சார்பில் நடைபெறும் கலைஞரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்று சிலையை திறந்து வைக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்த மாத இறுதிக்குள் சிலை செய்து  முடிக்கப்பட்டுவிடும் என்பதால் பீடம் அமைக்கும் பணியும் ஓமந்தூரார் வளாகத்தில் தொடங்கிவிட்டது. இந்த சிலை அண்ணா அறிவாலயம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை போன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத் தக்கது.

கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி இறந்த விவகாரம்: தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு

சென்னை, மே 8 கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி இறந்த விவகாரத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் 6.5.2022 அன்று கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க. உறுப்பினர் சுதர்சனம் (மாதவரம் தொகுதி), காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை (சிறீபெரும்புதூர் தொகுதி), இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.ராமச்சந்திரன் (தளி தொகுதி) ஆகியோர், ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை பார்த்த தொழிலாளி முத்துக்குமரன் விஷவாயு தாக்கி இறந்தது குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்கள்.

அதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:- ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு என்.எஸ்.கே. கார்டன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி முத்துக்குமரன் விஷவாயு தாக்கி மரணமடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற குணசேகரன் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களை அனுப்பி செய்துள்ளது. ஆனால், மாநகராட்சியிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. இந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத் திடம் இருந்து உரிய நிவாரண உதவியை பெற்று இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment