புதுவை ஜிப்மரில் ஹிந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

புதுவை ஜிப்மரில் ஹிந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம்

சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 500 பேர் கைது

புதுச்சேரி,மே10- ஜிப்மர் மருத்துவமனை யில் ஹிந்தித் திணிப்பதைக் கண்டித்து திமுகவினர் முற்றுகை போராட்டம் நடத்தியதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வர் உள்பட 500-க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாநிலம், கோரிமேட்டில் ஒன்றிய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புதுவை மட்டுமல்லாமல் தென் இந்தியாவில் தமிழ்நாடு, கருநாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங் களைச் சேர்ந்த நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிலையில் ஜிப்மரில் அனைத்து கோப்பு கள், பதிவேடுகள் மற்றும் தலைப்புகளில் ஹிந்தி கட்டாயம் என்று ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தர விட்டிருந்தார். இதனை கண்டித்து திமுக சார்பில் நேற்று (9.5.2022) ஜிப்மர் மருத் துவமனை எதிரே முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். அவைத் தலை வர் எஸ்.பி.சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் புதுச்சேரி மாநில சட்ட மன்ற திமுக உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். ஜிப்மரில் ஹிந்தித் திணிப்பு உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி முழக்கங்களை எழுப்பினர். ஜிப்மர் முதன்மை வாயிலை நோக்கி திமுகவினர் முன் னேறிச் சென்றனர். அவர்களைக் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்துத் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு சட்டமன்ற உறுப் பினர்கள் உள்பட 500-க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர். காவல் நிலையத்தில் சிறிதுநேரம் வைக்கப்பட்ட பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


No comments:

Post a Comment