‘தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும்!’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

‘தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும்!’

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

பெங்களூரு, மே 10 தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பில் தமிழைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை காணொலியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

தாய்மொழியில் சிந்திக்கும் குழந்தைகளின் திறன் மேம்பட்டதாக இருக்கும். தாய்மொழியான தமிழில் படித்ததால் தான் என்னால் அறிவியலில் சாதனை படைக்க முடிந்தது. இதை நான் பெருமையாக சொல்கிறேன்.

நிலவு, செவ்வாய்க் கோளிற்கு விண்கலம் அனுப்ப பல நாடுகள் முயற்சி செய்தன. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் நிலவுக்கு சந்திரயான் செயற்கைக்கோள் முதல் முயற்சியிலேயே அனுப்பி வெற்றி பெற்றோம். மங்கள் யானுக்கும் விண்கலத்தை அனுப்பினோம். தமிழர்களுக்கு இயல்பாகவே அறிவாற்றல் அதிகம். தாய்மொழியில் படிக்கும் போது சுயமாக சிந்திக்க முடிகிறது. அந்த சுயசிந்தனை தான் கூர்மையான அறிவுக்கு அடித்தளமாக அமைகிறது. தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும். இயல், இசை, நாடகத்தை அடுத்து அறிவியலில் தமிழ் வேகமாக வளர்ந்து வருகிறது. 

இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

இப்படியும் நடக்கிறது!

ஏழை ஹிந்துவின் அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்

திருவனந்தபுரம்,மே10- கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் பாபு (38) ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த 5 மாதங் களாக அவர் ஆட்டோ ஓட்டவில்லை.

இப்போது சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ராகேஷ் பாபு, கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது அறுவை சிகிச்சைக்காக மலப்புரத்தில் உள்ள இருபதுக்கும் அதிகமான பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் நிதி வசூலித்தனர்.

ஏழை ஹிந்துவின் அறுவை சிகிச்சைக்காக அந்த தொழுகை நேரத்தில் மட்டும் 1.38 லட்சம் ரூபாய் நிதி திரண்டது. அவர்கள் நிதி சேர்த்த பக்கெட்டில் ‘ராகேஷ் பாபு சிகிச்சை நிதி” என்று எழுதப் பட்டிருந்தது.

ராகேஷ் பாபுவின் சிகிச்சைக்கு உதவுவதற்காக அமைக் கப்பட்டிருக்கும் கமிட்டியின் செயலாளர் பாசிம்பாரி, “நிதி திரட்டி சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று மட்டுமே நினைத் தோம். அவரது மதம் பற்றி சிந்திக்கவே இல்லை. அவரது அம்மாவின் சிறுநீரகம் அவருக்குக் கொடையாக வழங்கப் பட்டு 11 ஆண்டுகள் ஆகிறது. அப்போதே அவரது சொந்த வீட்டை விற்றுதான் அறுவை சிகிச்சை நடந்தது. கொடையாகப் பெற்ற சிறுநீரகமும் சேதமானது. மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய ரூ.15 லட்சம் செலவாகும்.. நாங்கள் விரை விலேயே மீதித் தொகையையும் திரட்டுவோம். இதை நாங்கள் சொன்னதும், மசூதிகளின் இமாம்களும் ஏற்றுக் கொண்டனர்” என்றார்.

கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே மத ரீதியான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 6 மாதங்களில் மட்டும், இரு தரப்பிலும் சேர்த்து 5 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த சூழலில் இந்த மனிதநேயச் செயல் இரு சமூக புரிதலுக்கு துணைநிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment