மன்னார்குடி ஜீயரை குண்டர்
சட்டத்தில் கைது செய்க!
தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கோரிக்கை
சென்னை,மே7-தமிழ்நாட்டில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள மன்னார்குடி ஜீயரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குன்றக்குடி ஆதீனம் முதல் தமிழ்நாட்டின் அனைத்து ஆதீனங்களும், காலத்துக்கும், கடவுளுக்கும் ஒவ்வாதது என்று கைவிட்ட , பட்டணப்பிரவேசம் என்ற மனிதனை, மனிதன் தூக்கும் பல்லக்கு மரபை மீண்டும் கையிலெடுத்து தமிழ்நாட்டின் சமத்துவ மரபுக்கு எதிராக நிற்கிறார் தருமபுர ஆதீனம். குமூடிமலை சிவனடியார் ஆறுமுகசாமியை , சிதம்பரம் தீட்சிதப் பார்ப்பனர்கள் தாக்கிய போதும் மவுனம் காத்தவர்தான் தருமபுர ஆதீனம். தமிழ் மக்களின் பணத்தில் வாழும் தருமபுர ஆதீனம், தமிழ்நாடு மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் கே.என்.ரவியை மடத்துக்கு அழைத்து விழா நடத்துகிறார்.
மதுரை ஆதீனம் ஆளுங்கட்சியினருக்கு எதிராக பாஜக ஆதரவு இராம ரவிவர்ம குமார், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பேசுகிறார். மன்னார்குடி ஜீயரான செண்டலங்கார ஜீயர், “பல்லக்குத் தூக்குவதைத் தடுத்தால் தமிழ்நாடு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாட்டில் நடமாட முடியாது” என மிரட்டுகிறார். ஆதீனங்கள் - பாஜக- ஆளுநர் ஆதரவு - திராவிட இயக்க எதிர்ப்பு ஆன்மீகத்தில் மதவெறி அரசியலைக் கலப்ப தாகும். தமிழ்நாட்டின் பொது அமைதியை சீர்குலைக்க முயலும் மன்னார்குடி ஜீயரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆளுநர் மீதான மக்களின் எதிர்ப்பை திசைதிருப்பும் விதமாகவே பாஜக தலைவர் அண்ணா மலையும், எச்.ராஜாவும், பட்டணப் பிரவேச பிரச்சினையை வைத்து தமிழ்நாடு அரசிற்கு எதிராகப் பேசுகிறார்கள். பட்டணப் பிரவேசத் தடை சரியான நடவடிக்கையே. மனித நேயமற்ற, கண்ணியக் குறைவான, அரசியல் சட்ட விரோத செயலை உடனே கைவிட வேண்டும். -இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment