ஜாதி, மதங்களின் பின்னால் சென்று வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாதீர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 29, 2022

ஜாதி, மதங்களின் பின்னால் சென்று வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாதீர்கள்

மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் அறிவுரை  

செய்யாறு, மே 29 ஜாதி, மதங்களின் பின்னால் சென்று வாழ்க் கையை பாழாக்கிக்கொள்ளாதீர்கள் என செய் யாறு அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் அறிவுரை வழங்கினார். 

 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்  கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. 

விழாவிற்கு கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். பேராசிரியர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் மேனாள் மாணவரும், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதியுமான என்.கிருபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசுகையில், ''நான் பயின்ற கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கல்வி வியாபார மாகி விட்டது. தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயில ஆண்டிற்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது, ஆனால் அரசு கல்லூரியில் அதிகபட்சமாக ரூ.2,500 கட்டணம் தான் இருக்கும். இதனை உணர்ந்து நீங்கள் படிப்பில் கவனம் செலுத்திட வேண்டும். 

கல்லூரிக் கல்வி என்பது நாற்றங்காலை போன்றது, நன்றாக வளர்ந்தால் தான் அடுத்த உயர் படிப்பிற்கும், வேலை வாய்ப்பிற்கும் அடித்தளமாக அமையும். போட்டிகள் நிறைந்த உலகில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தாய்மொழி தமிழோடு ஆங்கில அறி வையும் வளர்த்துக் கொண்டால்தான் உலகில் வேலைவாய்ப்பு பெற முடியும். 

'நீங்கள் தான் உலகம்' என தங்களது சுக, துக்கங்களை மறந்து உங்களை வளர்த்த பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். சினிமா பிரபலங்களின் நிழல்களை நம்பாமல் நிஜங்களை நம்புங்கள். மாணவர்களாகிய நீங்கள் ஜாதி, மதங்களின் பின்னால் சென்று வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டு பலியாகாதீர்கள்'' என்றார். 

தொடர்ந்து மேனாள் நீதிபதி கிருபா கரன், இக் கல்லூரியை நிறுவிய புலவர் கோவிந்தன் நினைவாக ஒரு லட்சம், தனது தந்தை நடேசன் நினைவாக ஒரு லட்சம் என ரூ.2 லட்சத்திற்கான காசோலையை கல்லூரி முதல்வர் கலைவாணியிடம் வழங்கி அறக்கட்டளையை தொடங்கி வைத்தார். முடிவில் பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment