* 1971 இல் சேலம் மாநாட்டையொட்டி, புழுதிப் பிரச்சாரம் செய்தவர்கள் தோற்றனர்
* இப்பொழுது அதே பாணியில் ''ஆன்மிகம்'' என்ற போர்வையில் தி.மு.க. ஆட்சிமீது அவதூறு பிரச்சாரம்
* இன்று ''ஆஸ்திகம்'' என்பது உயர்ஜாதியினர் நலம் - இன்று ''நாஸ்திகம்'' என்பது
''பெருவாரியான தமிழ் மக்களின் நலன்'' - தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தமிழ்நாடு அரசுக்கு அடிகளாரின் கருத்தை நினைவூட்டுகிறோம்
நாம் நடத்துவது மதச்சார்பின்மை ஆட்சி - ஹிந்துராஷ்டிர ஆட்சியல்ல!
1971 - சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ராமன் அவமதிக்கப்பட்டான் என்று அவதூறு கூறித் தேர்தலில் தோல்வியடைந்த கூட்டம் - இன்று ஆன்மிகம் என்ற பெயரில் தி.மு.க. ஆட்சியின்மீது அவதூறு பரப்புகின்றனர். அதுபற்றி நமது முதலமைச்சர் கலைப்படவேண்டாம்; நாம் நடத்துவது ஜனநாயக - மதச்சார்பின்மை ஆட்சி - ஹிந்துராஷ்டிர ஆட்சியல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு.
அருமை நண்பர்களே! தமிழ் இன உணர்வாளர்களே! திராவிட தமிழ் உறவுகளே!
மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் அறிக்கையைப் பெட்டிச் செய்தியாக வெளியிட்டுள்ளோம்!
ஏன் அதை அனுப்பினார்?
எப்படிப்பட்ட சூழ்நிலையில் அதை வெளியிட நமக்கு அனுப்பினார் என்ற பழைய அரசியல் வரலாற்றை சற்றுத் திரும்பிப் பார்க்க உங்களை 1971 ஆம் ஆண்டுக்கு - 51 ஆண்டுகளுக்கு முன்னே அழைத்துச் செல்ல விழைகிறோம்.
1971 சேலம் நிகழ்ச்சியும் -
எதிரிகளின் திட்டமிட்ட பிரச்சாரமும்!
1971 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட் டினையொட்டி நடந்த பேரணியில் இராமன் அவமதிக் கப்பட்டான் என்று ஒரு விஷயத்தை - உண்மையில் அந்த சம்பவம் நடைபெறுவதற்கு மூலகாரணம் அன்றைய பாரதீய ஜன சங்கக் (அப்போது பி.ஜே.பி. கட்சி பிறக்கவில்லை)காரர்கள் தந்தை பெரியாருக்குக் கருப்புக் கொடி காட்டுகிறோம் என்று காவல்துறையில் அனுமதி வாங்கி ஓரிடத்தில் காட்டத் திரண்டு இருந்த போது, செருப்பை பெரியார்மீது வீசியதன் எதிர் வினையாகவே நிகழ்ந்த தற்செயலாகும். அடுத்து சில வாரங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, கலைஞர் தலைமையில் உள்ள தி.மு.க. ஆட்சியைப் பிடித்துவிடக் கூடாது என்று அன்றைக்கு ஆச்சாரியார் தலைமையில் திரண்ட கூட்டணியினரும், பார்ப்பனர்களும், ஊடகங்களும் ஒரு சேர, தி.மு.க. ஆட்சி - கலைஞர் ஆட்சி சனாதனத்திற்கு விரோதமான ஆட்சி என்று பெரிதாக ஊர்தோறும் ஊதி ஊதி கடைசி நேரத்தில் தேர்தலில் - பிரச்சாரப் பெரும் புழுதியைக் கிளப்பினர்!
'ஆன்மிகம்' என்ற பெயரால் இன்றைய தி.மு.க. ஆட்சிக்கு எதிர்ப்புப் பிரச்சாரம்
தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ள கடவுள் பக்தியினை (இப்போது அதை ‘ஆன்மிகம்' என்ற அர்த்தமற்ற ஒரு சொற்றொடர்மூலம் குறிப்பிடுகின்றனர்) பலர் தி.மு.க. வுக்கு எதிராக ஏவிவிட்டு, வேறு வகையில் இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் ஓராண்டு ஆட்சி சாதனைகளை நூறாண்டு வரலாறு பேசும் என்ற ‘திராவிட மாடல் ஆட்சி'க்கு எதிராகப் பார்ப்பனர்கள், அவர்தம் 'சுற்றுக்கிரகங்கள்', தமிழ் நாட்டில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க ‘வித்தை கள்' செய்யும் - காவிக்கட்சியினர் ஆகிய தரப்பினர் ஏதாவது பிரச்சினை கிடைக்காதா என்று வாய் பிளந்து நின்று வக்கணை பேசி பதவிக்கான கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
500 ஆண்டுகால ஆன்மிகமா?
பல ஆண்டுகாலமாக தருமபுர ஆதீனம் பல்லக்கில் பவனி வருவதை முன்பு இருந்த ஆதீனகர்த்தர் - தவத்திரு குன்றக்குடி அடிகளார் சமரசத்தின் காரணமாக பிறகு நிறுத்தி பல ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது என்ன ‘500 ஆண்டுகால' ஆன்மிகம் என்ற வாதம் தலைநீட்ட வேண்டும்?
கரோனா காலத்திலும்கூட நிறுத்தாமல் நடந்தது; இப்போதுதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூற முடியுமா?
தமிழ்நாடு அரசின் சரித்திர சாதனைகளைக் கண்டு இனி இவர்களை வெல்ல முடியாது என்பதால் இப்படி சிலரை ஆட்சிக்கு எதிரான தங்களது கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர்.
இல்லையானால், பா.ஜ.க. தலைவர் தானே பல்லக்குத் தூக்குவேன் என்று கூறுவாரா? பூனைக்குட்டி வெளியே வருகிறது!
முதலமைச்சருக்கு நமது வேண்டுகோள்!
ஜீயர் பார்ப்பனர்கள் - அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் நடமாட விட முடியாது என்று பகிரங்கமாக சவால் விடுகின்றனர் என்றால், இது 1971 ஆம் ஆண்டு ஆத்திக - நாத்திகப் பிரச்சாரத்தின் ‘புதிய அவதாரம்'தானே!'
இதன் பின்னணி, பின்பலம் எங்கே, எந்த நோக்கத்துடன் என்பது மிகவும் ஆராயத்தக்கதும், புரிந்துகொள்ளவேண்டியதும் ஆகும்!
இது முழுக்க மனிதநேய பிரச்சினையின்பாற் பட்டதாகும். தி.மு.க. ஆட்சியின் முற்போக்குக் கொள்கைத் திட்டங்களை மிரட்டி பணிய வைத்து முடக்கும் ஒரு காவித் திட்டம்.
இதில் ஓட்டை போட்டுவிட்டால் மற்றபடி மற்ற திட்டங்களில் நாம் வெற்றி அடையலாம் என்பதற்கான ஓர் ஒத்திகை என்பதை தமிழ்நாடு அரசுக்கு குறிப்பாக மரியாதைக்குரிய நமது முதலமைச்சர் அவர்களுக்கு நாம் கனிவுடன், உரிமையுடன் கொள்கை உணர்வு காரணமாக சுட்டிக்காட்டுகிறோம்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அன்று சுட்டிக்காட்டியதுபோல், பெரும்பான்மை மக்கள் நலனுக்கும் - சமூகநீதிக்கும் எதிரானவர்கள்தான் இந்த ஆன்மிக போர்வை போர்த்திய ‘நரியர்கள்!'
எனவே, இதுபற்றிய அச்சுறுத்தல்கள், அவதூறு புழுதிகள்கண்டு பின்வாங்கினால், எந்த ஒரு மாற்றமும், புரட்சிகரமான முன்னெடுப்புத் திட்டங்களும் வரும் நான்கு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியும், இன்றைய முதலமைச்சர் அவர்களும் செய்யவே இயலாத அளவுக்கு ஆக்கவே இன எதிரிகள் துணிவார்கள்.
‘‘துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கு''
நடைமுறைத் திட்டங்களில் மறுபரிசீலனை - ஆட்சிக்கு இவையெல்லாம் சிக்கலை ஏற்படுத்தும்.
மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று தவத்திரு அடிகளார் போன்றவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதன்பின்னர் மக்கள் ஏமாறாததால்தான் அன்று தி.மு.க. அமோக வெற்றி பெற்றது.
முன் எப்போதும் பெறாத 184 இடங்களை வென்று, 'ரெக்கார்டு சாதனை' பெற்று, சரித்திரத்தில் நிலைத்தது!
ஹிந்துராஷ்டிர ஆட்சி அல்ல - மதச்சார்பற்ற ஆட்சி என்பதை உணர்த்துவோம்!
வெற்றி வீரர் கலைஞருக்குத் தந்தை பெரியார் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்,
‘‘உங்களைப் பாராட்ட எனக்கு தமிழில் வார்த்தை இல்லை. எனக்குப் பழி நீங்கியது - உங்களுக்கு உலகப் புகழ் கிடைத்தது.''
அதையே இன்று நாம் சுட்டிக்காட்டி, காவிப் பூச்சாண்டிகளுக்கு நினைவூட்டுகின்றோம்.
மதச்சார்பற்ற ஜனநாயக ஆட்சி!
இது ‘ஹிந்துராஷ்டிரா ஆட்சி அல்ல' என்பதை உணர்த்திட வேண்டும்!! இந்திய அரசமைப்புச் சட்டப்படி நடைபெறும் மக்களாட்சியாகும் இது!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.5.2022

No comments:
Post a Comment