ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் 'இம்பீச்மெண்ட்' கொண்டு வருக!
இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கடுமையான முறையில் கருத்துக் கூறியவரை மூத்த நீதிபதி களைப் பின்னுக்குத்தள்ளி உச்சநீதிமன்ற நீதிபதி யாக நியமிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
சமூகநீதிக்கு எதிரானவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி யாக நியமனம் பெறுவது ஆபத்தானது
கவுகாத்தி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜாம்ஷெட் பர்ஜோர் பர்திவாலா ஆகிய இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக மே 9 ஆம் தேதி பதவி ஏற்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்,
உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் நியமனம் - நீதிபதிகளே அதிர்ச்சி!
நீதிபதிகளின் மூப்பு பட்டியலில் (Seniority List) பின் வரிசையில் இருந்த இந்த இரு நீதிபதிகளும் பலரையும் பின்னுக்குத் தள்ளி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது நீதித்துறை வட்டாரத்தில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக பத்திரிகை களில் செய்தி வந்துள்ளது.
அதாவது, நீதிபதி சுதன்ஷு துலியா, அகில இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மூப்புப் பட்டியலில் 30 ஆம் இடத்தில் இருந்தார். தன்னைவிட ‘‘சீனியர்களாக” இருக் கும் 23 தலைமை நீதிபதிகள் மற்றும் 6 நீதிபதிகளையும் பின்னுக்குத் தள்ளி உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட் டுள்ளார்.
அதேபோன்று அகில இந்திய மூப்புப் பட்டியலில் 49 ஆம் இடத்திலும், குஜராத் உயர்நீதிமன்றத்தில் மூன் றாவது இடத்திலும் இருந்த நீதிபதி ஜே.பி.பர்திவாலா, அனைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்/பொறுப்பு தலைமை நீதிபதிகள் ஆகியோரை முந்தியது மட்டுமல்லாமல், பணி மூப்பு வரிசையில் உள்ள மேலும் 25 உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் தாண்டிச் சென் றுள்ளார்.
மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் என்னவாயிற்று?
மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீதிபதி துலியாவின் தேர்வு உத்தரகாண்ட் மாநிலத்திற்குப் பொருந்தும் என்றாலும், நீதிபதி பர்திவாலாவின் நியமனம் அவ்வாறு சொல்ல முடியாது. காரணம் குஜராத்தில் இருந்து ஏற் கெனவே இரு நீதிபதிகள் உள்ளனர். பல மாநிலங்கள் - ஒடிசா, பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் (அசாம் தவிர) - நீண்ட காலமாக பிரதி நிதித்துவம் இல்லாமல் உள்ளன என்றும் செய்திகள் வந்துள்ளன.
48 மணிநேரத்தில் நியமனம் - அப்படி என்ன அவசரம்?
முன்னதாக, கவுகாத்தி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுதன்ஷூ துலியா, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜாம்ஷெட் பி.பர்திவாலா ஆகிய இருவரின் பெயர்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலை மையிலான கொலிஜியம் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்தது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திர சூட் மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொலி ஜியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.
மே 5ஆம் தேதியன்று மாலை ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட பரிந்துரை, மே 7ஆம் தேதி சனிக்கிழமை அதாவது 48 மணி நேரத்தில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது என்பது இதுவரை இல்லாத வகையில் வேகமாக நடந்த செயலாகும். இதற்கு முன்பு அனுப்பப்பட்ட பரிந்துரைகள் பல வாரங்கள், மாதங் களாகக் கிடப்பில் கிடந்த நிலையில் தற்போது இவ்வளவு அவசரம் காட்டி ஒப்புதலைத் தந்துள்ளது மோடி அரசு என பலரும் கருதுகின்றனர்.
குடியரசுத் தலைவர் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜம்ஷெட் பர்ஜோர் பர்திவாலா ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி அடைவதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடுக்கு எதிராகக் கருத்துச் சொன்னவர் உச்சநீதிமன்றத்தில் நியமனமா?
தற்போது உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப் பட்ட நீதிபதி ஜே.பி.பர்திவாலா, 2028 இல் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் வாய்ப்பும் உள்ளது.
நீதிபதி பர்திவாலாவை உச்சநீதிமன்றத்திற்கு உயர்த் துவது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2015 இல் குஜராத் மாநிலத்தில் படிதார் (PATIDAR COMMUNITY) ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல் தலைமையில் படிதார் அனமத் அந் தோலன் சமிதியினர்(Patidar Anamat Andolan Samiti) போராட்டம் நடத்தி, கைது செய்யப்பட்டனர். தேச விரோத நடவடிக்கை என்பதாக காவல்துறை ஹர்திக் படேல் மற்றும் சங்க உறுப்பினர்கள்மீது வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக 2015 டிசம்பர் ஒன்றாம் தேதி, ஹர்திக் படேல் மற்றும் பிறர் தாக்கல் செய்த ரத்து மனு மீதான தீர்ப்பில், நீதிபதி ஜே.பி.பார்திவாலா கூறியதாவது:
Paragraph 62 of the judgment, observed,
“If I am asked by anyone to name two things, which has destroyed this country or rather, has not allowed the country, to progress in the right direction, then the same is, (i) Reservation and (ii) Corruption.
It is very shameful for any citizen of this country to ask for reservation after 65 years of independence. When our Constitution was framed, it was understood that the reservation would remain for a period of 10 years, but unfortunately, it has continued even after 65 years of independence.”
தீர்ப்பின் தமிழாக்கம்:
தீர்ப்பின் 62 ஆம் பத்தியில்,
“இந்த நாட்டை அழித்த அல்லது நாட்டை சரியான திசையில் முன்னேற அனுமதிக்காத இரண்டு விஷ யங்கள்பற்றி என்னிடம் கேட்டால், அதற்கு என்னுடைய பதில்:
(வீ) இட ஒதுக்கீடு,
(வீவீ) ஊழல் எனும் இரண்டு தான்.
சம்பந்தப்பட்ட நீதிபதியை எதிர்த்து எஸ்.சி.,
ஓ.பி.சி.யினர் கண்டனம் தெரிவித்ததுண்டே!
நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பிறகும் எந்த ஒரு குடிமகனும் இட ஒதுக்கீடு கேட்பது மிகவும் வெட்கக்கேடானது. நமது அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று புரிந்து கொள்ளப்பட்டது, ஆனால், துர திர்ஷ்டவசமாக, சுதந்திரம் அடைந்த 65 ஆண்டுகளுக் குப் பிறகும் அது தொடர்கிறது” என தீர்ப்பில் கூறியிருந்தார்.
நீதிபதி ஜே.பி.பர்திவாலாவின் இந்த தீர்ப்பின் வாச கங்களுக்கு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
டிசம்பர் 12 அன்று அகமதாபாத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், குஜராத் மற்றும் இந்திய அரசின் மேனாள் அமைச்சர்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினரில் உள்ள முன்னணி உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் நீதிபதி பர்திவாலாவை பதவி நீக்கம் செய்திடவேண்டும் என தீர்மானம் நிறை வேற்றினர்.
அரசியல் ஒதுக்கீட்டுக்கும் - கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக்கூட தெரியாதவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனமா?
தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியின ருக்கான நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் கூட்டம் டிசம்பர் 17 ஆம் தேதி நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சி வேறுபாடுகளைக் கடந்து, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பர்திவாலவின் "இடஒதுக்கீட்டுக்கு எதிரான" கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து, அவருக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்தனர். மேலும், டிசம்பர் 23ஆம் தேதி
பி.ஆர்.அம்பேத்கர் சிலை முன் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்தக் கூட்டத்தில் மோடி அரசில் அமைச்சர்களாக இருக்கும் ராம்விலாஸ் பஸ்வான், தாவர் சந்த் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய மற்றும் மாநில சட்டமன்றங்களில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு அரசியல் இடஒதுக்கீடு களுக்கு பத்தாண்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவ்வாறான கால வரம்பு எதுவும் இல்லை என்கிற புரிதல் நீதிபதிக்கு இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்றும் அனைவரும் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இட ஒதுக்கீடு குறித்து நீதிபதி பர்திவாலாவின் கருத்து, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாகக் கூறி, 58 மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை தலைவரிடம், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மீது பதவி நீக்கம் செய்திடும் மனுவை அளித்தனர்.
58 எம்.பி.,க்கள் மாநிலங்களவைத் தலைவரிடம் மனு கொடுத்தார்களே!
மனுவில் திருச்சி என்.சிவா (திமுக) மற்றும் ஆனந்த் சர்மா, திக்விஜய் சிங், அஸ்வனி குமார், பி.எல்.புனியா, ராஜீவ் சுக்லா, ஆஸ்கார் பெர்னாண்டஸ், அம்பிகா சோனி, பி.கே.ஹரிபிரசாத் (காங்கிரஸ்), டி.ராஜா (சிபிஅய்), கே.என்.பாலகோபால் (சிபிஅய்-எம்), ஷரத் யாதவ் (ஜேடி-யு), எஸ்.சி.மிஸ்ரா மற்றும் நரிந்தர் குமார் காஷ்யப் (பிஎஸ்பி), மற்றும் டி.பி.திரிபாதி (என்சிபி) ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.
நீதிபதியின் அவதானிப்புகள் நீதித்துறை நடவடிக் கைகளில் இடம் பெறுவதால், "அது அரசியல் சாசனத் திற்கு எதிரானது மற்றும் இந்திய அரசமைப்புக்கு எதி ரான நடத்தை தவறானது. அதுவே எங்களது குற்றச்சாட்டுக்கு அடித்தளமாக அமைகிறது'' என்று தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அத்துடன், அக மதாபாத்தில் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை யும் இணைத்திருந்தனர்.
நீதிபதி பர்திவாலாவுக்கு எதிராகப் பதவி நீக்க நடவடிக்கை தொடங்குமாறு மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் எம்.பி.க்கள் வேண்டுகோள் விடுத்து, தேவையான ஆவணங்களையும் இணைத் துள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்டதாக மாநிலங்களவை தலைவர் அலுவலக வட்டாரங்கள் உறுதி செய்ததுடன் மனு "பரிசீலனையில் உள்ளது" என்று தெரிவித்தனர்.
நீதிபதி, தான் எழுதிய வரிகளை நீக்கினார் -
ஆனால், வருத்தம் தெரிவிக்கவில்லை!
இடஒதுக்கீடு குறித்த தனது "அரசமைப்புச் சட்டத் திற்கு முரணான" கருத்துகளுக்கு எதிராக மாநிலங் களவை எம்.பி.க்கள் பதவி நீக்க தீர்மானத்தை சமர்ப்பித்த நிலையில் நீதிபதி ஜே.பி.பர்திவாலா, தனது டிசம்பர் ஒன்றாம் தேதி கூறிய ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்கினார்.
ஆனால், தனது கருத்து தவறு என்றோ, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றோ இன்றுவரை அவர் கூறவில்லை.
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் “சமூக நீதி”க்கு முன்னுரிமை தந்துள்ளனர் அரசமைப்புச் சட் டத்தை உருவாக்கிய தலைவர்கள். இட ஒதுக்கீடு என்பதன் தத்துவத்திற்கு எதிரான சிந்தனை கொண்ட, அதுவும், அரசியல் பதவிக்கான இட ஒதுக்கீட்டிற்கும், கல்வி, வேலை வாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிற்கும் வேறுபாடு தெரியாத ஒருவர்தான் தற்போது உச்சநீதி மன்ற நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், சமூகநீதிக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மக்களுக்கு நீதிமன்றம்தான் நீதியை நிலை நாட்டும் என இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், அங்கும் சமூகநீதிக்கு எதிரான சிந்தனை கொண்டவர் களை நியமிக்கும் போக்கு மிக ஆபத்தானது; கவ லைக்குரியது.
உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தகுதி வாய்ந்த மூத்த நீதிபதிகள் தகுதியில் சில தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளா, சென்னை போன்ற பல உயர்நீதிமன்றங்களில் உள்ள நிலையில், சமூகநீதி அடிப்படையில் அனைத்து சமூகத்தினருக்கும் போதிய பிரதிநிதித்துவம் தருவதுபற்றி நாடாளுமன்றத்தில் தற் போதைய ஒன்றிய அரசின் சட்ட அமைச்சரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திரு.வில்சன் அவர்களின் கடிதத்திற்குப் பதில் அளித்த தலைமை நீதிபதியும் முன்பு கூறியிருந்ததற்கு இந்த இரண்டு நியமனங்களும் எதிரான நடவடிக்கை அல்லவா?
நாடாளுமன்றத்தில் 'இம்பீச்மெண்ட்' கொண்டுவருக!
இதனை நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுத்து, அகில இந்திய அளவில் உள்ள மற்ற ஒடுக்கப்பட்ட சமூக எம்.பி., க்கள் - நாடா ளுமன்ற இரு அவையின் உறுப்பினர்களும் இணைந்து - இந்தப் பகிரங்க சமூக அநீதிபற்றி விளக்குவதுடன், 'இம்பீச்மெண்ட்' தீர்மானத்தையும் கொடுத்து, இதனை அம்பலப்படுத்துவது நீதித்துறையின் மாண்பையும், அதன்மீது மக்களுக்குள்ள நம்பிக்கையையும் உயர்த் துவதாக அமையும்.
அரசமைப்புச் சட்டத்தின் சமூகநீதிக் கொள்கைக்கு நேர் விரோதமான இந்த நியமனங்கள்பற்றி உலகறியச் செய்து பரிகாரம் தேடினால்தான், பாதிக்கப்பட்ட பல மூத்த ஒடுக்கப்பட்ட நீதிபதிகளுக்கு - நீதித்துறையின் பாதுகாப்பு உரியதாகும். எதிர்காலத்தில் இத்தகைய நிர்வாணத் தன்மையிலான பகிரங்க சமூகநீதி மீறல் போக்காவது தடுத்து நிறுத்தப்பட வழி ஏற்படக் கூடும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
11-05-2022
(சிங்கப்பூர் கேம்ப்)


No comments:
Post a Comment