பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்முறை! சாமியார் தலைமறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்முறை! சாமியார் தலைமறைவு

பாலாசோர், மே 10- ஒடிசாவின் பாலாசோரை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த பெண்ணின் கணவர் வீட்டார், அதிக வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்ந்து பெண்ணுக்குத் தகராறு இருந்து வந்தது. இதனால் கணவரின் குடும்பத்தினர் சாமியார் ஒருவரை அணுகினர். அவரும், இந்த பிரச் சினையை முடிக்க வேண்டுமென்றால், அந்த பெண் தன்னுடன் சில மாதங்கள் தங்க வேண்டும் எனக் கூறி யுள்ளார். இதற்கு  அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால் கணவரின் குடும்பத்தினரே அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, சாமியாரின் வீட்டில் சேர்த்து விட்டனர். அவரது மகனையும் அனுப்பி வைத்தனர்.  இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை தனது வீட்டில் அடைத்து வைத்து கடந்த 79 நாள்களாக சாமியார் வலுக்கட்டாயமாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மகன் கண் முன்னே நடந்துவந்த இந்த கொடூரம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தற்போது அந்த பெண்ணை மீட்டுள்ளனர். தப்பி ஓடிய சாமியாரை தேடி வருகின்றனர். பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத் தினரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க பரிந்துரை

தஞ்சாவூர், மே 10 தஞ்சை மாவட்ட வேளாண் வல்லுநர் குழு சார்பில், மேட்டூர் அணை பாசன பகுதியில் பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.

இது குறித்து வல்லுநர் குழுவை சேர்ந்த கலைவாணன் கூறியதாவது:- நடப்பு ஆண்டு மேட்டூர் அணை பாசன பகுதிக்கு பாசனத்திற்காக இயல்பாக திறக்க வேண்டிய ஜூன் 12 ஆம் தேதி அணையை திறக்கலாம் என தமிழ் நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி மேட்டூர் அணைக்கு வர வேண்டிய நீரை உறுதியாக பெற்றுத்தர வேண்டும்.

அணை திறப்புக்கு முன்னதாக அனைத்து ஆறு, வாய்க்கால், நீர்நிலைகளை தூர்வாரி பாசனத்திறனை உயர்த்திட, போதிய நிதி அளித்து செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் முன்னேற்பாடு செய்திட வசதியாக நீர் திறப்பை 15 நாட்களுக்கு முன்பும், மூடும் காலத்தை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டு அணை மூடும் நாளை நீட்டிக்கக் கூடாது.

அணையின் நீர் தேவையை குறைத்திட நிலத்தடி நீர் உள்ள இடங்களில் குறுவை பருவத்தில் நாற்றுவிட்டு நடவு பணிகளை முடிக்க அறிவுரை வழங்க வேண்டும். மே, ஜூன் மாதங்களில் தடையின்றி மும்முனை மின்சாரம் அளிக்க வேண்டும். குறுவை, சம்பா பருவங்களில் அதிக அளவில் நேரடி நெல் விதைப்பு செய்திட விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். குறுகிய கால ரகங்களை மே முதல் ஜூன் முடியவும், நீண்ட கால ரகங்களை ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 7 ஆம் தேதி வரையும், மத்திய கால ரகங்களை செப்டம்பர் மாதம் முழுவதும் விதைக்க வேண்டும். இந்த காலத்திற்குள் விதைக்காமல் காலம் தாழ்த்தி விதைப்பவர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய இயலாது. அரசு இழப்பீடு வழங்க இயலாது. எனவே முன் கூட்டியே அறிவிப்பு செய்தால் விவசாயிகள் காலத்தே உழவு பணிகளை மேற்கொள்வார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment