உசிலம்பட்டி, ஜூன் 5 உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவாரத்தில் கள்ளபட்டி கிராமம் உள்ளது. கிராமத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவில் அருகே இருந்த இந்த கற்சிலையை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், வரலாற்று ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கற்சிலை 400 ஆண்டுகள் பழமையானது என கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த கற்சிலை நடுகல் வடிவில் சுமார் 3.5 அடி உயரத்திலும், 2.8 அடி அகலத்திலும் உள்ளது. இந்த நடுகல் உள்ளூர் மக்களால் பட்ட வினையன் என அழைக்கப்படுகிறது. நடுகல்லின் தலை உச்சியில் ஒரு பக்க கொண்டையுடனும், கழுத்தணிகள் மற்றும் இடது கையில் வேலும், வலது கையில் வளரித்தடியும் உள்ள ஒரு வீரனின் சிற்பம் அமைந்துள்ளது.
இப்பகுதியில் வாழ்ந்த இரண்டு இனக்குழு மக்களிடையே நடைபெற்ற போரின் போது உயிரிழந்த வீரனின் அடையாளமாக அமைக்கப்பட்ட சிற்பமாக இருக்கலாம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்ட வளரி என்ற தொன்மையான ஆயுதங்களை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
அதுபோல இந்த பகுதியில் அடுத்தடுத்து வளரி சார்ந்த தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன என்றனர். இதேபோல் நாகமலை புதுக்கோட்டை அருகே வடபழஞ்சி கிராமத்தில் உள்ள பாண்டி விநாயகர் கோயிலின் முன்பு பழங்கால கல்வெட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொல்லியல் மூத்த அறிஞர் சாந்தலிங்கம் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் ராமகிருஷ்ணன், அறிவு செல்வம், தேவி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் 175 செமீ உயரமும் 1 அடி நீளம் மற்றும் அகலம் கொண்ட செவ்வக வடிவிலான கல்வெட்டு 15ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.
கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களில் 21 வரிகள் உள்ளன. மகாபலி வாணாதிராயர் என்பவர் காலத்தில் இக்கிராமம் சர்வ மானியமாக கொடுக்கப்பட்டதாக செய்தி உள்ளது. இதன் மேற்புறத்தில் சூலமும் அதற்கு கீழே மயில் ஒன்று வாயில் பாம்பை கவ்வியபடி உள்ளது. எனவே இங்குள்ள முருகன் கோயிலுக்கு உரிய எல்லை கல்லாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வீட்டு வசதி வாரிய மனை பத்திரங்கள்
மதுரை, ஜூன் 5 தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரையில் வீட்டு வசதி வாரியத்தில் மனைக்கான ஒப்பந்தம் மற்றும் விற்பனை பத்திரங்கள் தமிழில் அச்சடித்து கலைஞர் பிறந்தநாளில் (3.6.2022) அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பொதுமக்கள் சார்புடைய வாரிய ஒதுக்கீடு ஆணை, வீட்டு மனை அடுக்குமாடி குடியிருப்புகள் ஒப்பந்தம் மற்றும் விற்பனை பத்திரம் உள்ளிட்டவைகள் ஆங்கிலத்திலேயே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி ஆங்கிலத்திற்கு பதிலாக தமிழில் அச்சிடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி மானிய கோரிக்கையின்போது முன்வைத்தார். இந்த கோரிக்கையை சட்டப்பேரவையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி வாரிய ஒதுக்கீடு ஆணை, வீட்டு மனை அடுக்குமாடி குடியிருப்புகள் ஒப்பந்தம் மற்றும் விற்பனை பத்திரம் உள்ளிட்டவைகள் தமிழ்மொழியில் அச்சடிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையின் அடிப்படையில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மதுரை சரக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உச்சப்பட்டி, தோப்பூர் துணைக்கோள் நகர அலுவலகத்தில் தமிழில் அச்சடிக்கப்பட்ட விற்பனைக்கான மனை பத்திரங்களை மதுரை சரக வீட்டுவசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் தியாகராஜன் தலைமையில் செயற்பொறியாளர் பழனிக்குமார், இருளப்பன், மேலாளர் கோகிலாவாணி மற்றும் தொமுச மாநில தலைவர் ராஜேந்திரன் ஆகியோர், பயனாளர்களான சரஸ்வதி, ராமலட்சுமி ஆகியோருக்கு வழங்கினர்.
இதுகுறித்து மேற்பார்வை பொறியாளர் தியாகராஜன் கூறுகையில், ‘‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் அடிப்படையில் மதுரையில் தமிழில் வீட்டு மனை பத்திரங்களை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வீட்டுவசதி வாரியம் துவங்கப்பட்ட 1961ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஆங்கிலத்தில் விற்பனை மனை மற்றும் ஒப்பந்த பத்திரங்கள் அச்சிடப்பட்டு வந்தன. தற்போது கலைஞர் பிறந்த நாளில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை வீட்டு வசதி வாரிய உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகர அலுவலகத்தில் மனை வாங்கிய பயனாளிகளுக்கு தமிழில் பத்திரம் வழங்கப்படும்’’ என்றார்.
தனிநபர்களின் திறனை கண்டுபிடித்து
வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம் அறிமுகம்
சென்னை, ஜூன் 5 படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தரும் திட்டத்திற்காக உலகில் முதல் டிஎன்ஏ தலைமையிலான சுய கண்டுபிடிப்பு தயாரிப்பான ‘ஜென்டிஸ்கவர்’அய் அறிமுகப்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட நபர்களின் தற்போதையை திறனை கண்டுபிடித்து அவர்களின் திறனை மேம்படுத்தி அதற்கு ஏற்ப வேலைவாய்ப்பை நோக்கி அவர்களை கொண்டு செல்லும் குறிக்கோளுடன் இந்த தயாரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜென்லீப்-இன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சச்சின் சந்தீர் கூறினார். இது பணியிடத்தில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் மேலும் மனதிற்கு நிறைவான வேலைவாய்ப்பை ஒரு நபர் பெறும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறினார். ஆரம்பப்பள்ளி மாணவர்கள் முதல் வேலையில் உள்ள மூத்த தொழில் நிபுணர்கள் வரை அனைவருக்கும் உகந்த வேலைவாய்ப்பை அடைய அறிவியல் ரீதியாக நிருபிக்கப்பட்ட கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குவதாக ஜென்லீப்-இன் நிறுவனர் மற்றும் இணை-தலைமை நிர்வாக அதிகாரி நிமிஷ் குப்தா கூறினார்.

No comments:
Post a Comment