தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்புக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் ராகுல் காந்தி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 5, 2022

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்புக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் ராகுல் காந்தி கண்டனம்

புதுடில்லி, ஜூன் 5  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பிஎப் சேமிப்புக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. 2021-2022ஆம் நிதி ஆண்டுக்கு 8.1 சதவீத வட்டி அளிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு பிஎப் வட்டி விகிதம் 1977-1978ஆம் நிதி ஆண்டில் 8 சதவீதமாக இருந்தது. தற்போது அதே நிலைக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இபிஎப் அமைப்பு ஓய்வூதிய சேமிப்பு மீதான வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைத்தது. இதனால் 6.4 கோடி ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்பட்டனர்.

வட்டிக் குறைப்பு பரிந்துரைக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சேமிப்புதாரர்களுக்கு வட்டி அளித்தது போக நிதியத்திடம் உபரியாக ரூ. 450 கோடி நிதி இருக்கும் என்று தெரிகிறது.

இபிஎப்ஓ அமைப்பிடம் உள்ள வருமான அளவான ரூ. 76,768 கோடி தொகையாகும். அதாவது வட்டி வருவாய் 7.9 சதவீத அளவிலேயே உள்ளது என்று கடந்த மார்ச் மாதமே குவஹாட்டியில் நடைபெற்ற இபிஎப்ஓ கூட்டத்தில் ஒன்றிய தொழிலாளர்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் குறிப்பிட்டிருந்தார்.

2013 - 2014இல் அதிகபட்சம்

2019-2020ஆம் நிதி ஆண்டில் வட்டி விகிதம் 8.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. முன்னர் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2015-2016ஆம் நிதி ஆண்டில் 8.80 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து 2013-2014ஆம் நிதி ஆண்டில் 8.75 சதவீதமாகவும் இருந்ததே அதிகபட்ச வட்டி விகிதமாகும். 2011-2012ஆம் நிதி ஆண்டில் மிகவும் குறைந்த அளவாக 8.25 சதவீதம் இருந்தது.

பிஎப் வட்டி குறைக்கப்பட்டதற்கு மேனாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "பிரதமர் மோடி பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்து மக்களின் வருவாய் குறையும் வழிமுறையைக் கையாள்கிறார். இது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் இப்போதைய வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாதிக்கும். இது 6.5 கோடி ஊழியர்களின் வாழ்க்கையை சிதைக்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். லோக் கல்யாண் மார்க் வீட்டிலிருந்து மக்களுக்கு எவ்வித நலனும் கிடைக்காது" என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் 7, ரேஸ் கோர்ஸ் சாலை இது 7 லோக் கல்யாண் மார்க் என 2016இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒரே நாளில் 

கரோனா பாதிப்பு 4,000 அய் தாண்டியது 

15 பேர் பலி:  4ஆவது அலைக்கான அறிகுறியா?

புதுடில்லி, ஜூன் 5 நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 4,270 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,76,817 ஆக உயர்ந்தது. * புதிதாக 15 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,692 ஆக உயர்ந்தது.

 

No comments:

Post a Comment