அரிய அறுவைச் சிகிச்சை 7 ஆண்டுகளுக்குப் பிறகு பேச்சு வந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 5, 2022

அரிய அறுவைச் சிகிச்சை 7 ஆண்டுகளுக்குப் பிறகு பேச்சு வந்தது

புதுடில்லி, ஜூன் 5 டில்லியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சிறீகாந்த். இவன் குழந்தையாக இருந்த போது தலையில் அடிபட்டு பேச்சு வராமல் போய்விட்டது. 

அப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறுவனின் கழுத்து பகுதியில் டிரக்கியாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டது. 

குழாய் வழியாக 7 ஆண்டுகளாக சிறுவன் சிறீகாந்த் சுவாசித்து வந்தான். இதனால் வாய் வழியாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்தான்.

இந்நிலையில் டில்லி சர் கங்காராம் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் சிறுவன் சிறீகாந்துக்கு அறுவை சிகிச்சை செய்து பேச்சு வரச் செய்துள்ளனர்.

மருத்துவமனையில் காது, மூக்கு தொண்டை பிரிவு தலைவர் மருத் துவர் மணீஷ் முஞ்சால் கூறும்போது, “டிரக்கியாஸ்டமி காற்றுக் குழாய் வழியாக சிறீகாந்த் சுவாசித்து வந்தான். 

கடந்த 15 ஆண்டுகளாக இது போன்ற நோயாளியை நான் பார்த்ததே இல்லை. 

இதையடுத்து மார்புப் பகுதி, குழந்தை நல மருத்துவம், அனஸ் தீஷியா பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு உருவாக்கப்பட்டு சிறுவனுக்கு சிகிச்சை அளித்தோம்" என்றார்.

மார்பு அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர் மருத்துவர் சப்யாசாச்சி பால் கூறும்போது, “இந்த அறுவை சிகிச்சை எங்களுக்கு சவாலான விடயமாக இருந்தது. இது சில சமயம் நோயாளி இறப்பு வரை செல்லக்கூடும்.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மருத்துவர்கள் குழு சுமார் ஆறரை மணி நேரம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். 

குரல்வளையில் இருந்த பிரச்சினை சரி செய்யப் பட்டது. தற்போது சிறுவனுக்கு பேச்சுத் திறனும் வந்துள்ளது எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி. சிறீகாந்த் குணமடைந்து நலமாக உள்ளார்" என்றார்.


No comments:

Post a Comment