''தகுதி திறமை'' என்ற பெயரால் உலகில் புகழ்பெற்ற கல்லூரிகளில்கூட சேர்ந்திட நடக்கும் சில மோசடிகள்! பொய்யான சான்றிதழ்கள் அளித்து கடந்த 8 ஆண்டுகளாக 25 மில்லியன் டாலர் கொள்ளையடிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

''தகுதி திறமை'' என்ற பெயரால் உலகில் புகழ்பெற்ற கல்லூரிகளில்கூட சேர்ந்திட நடக்கும் சில மோசடிகள்! பொய்யான சான்றிதழ்கள் அளித்து கடந்த 8 ஆண்டுகளாக 25 மில்லியன் டாலர் கொள்ளையடிப்பு!

'தகுதி - திறமை' என்ற பெயரால் அடிமட்ட மக்களிடமிருந்து மருத்துவர்களை வராமல் தடுப்பது தடுக்கப்படவேண்டும்

தமிழ்நாடு நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் உடனடி ஒப்புதல் தேவை!

தகுதி - திறமைக்கு அடையாளம் மதிப்பெண்கள் மதிப்பெண்கள் என்று கூறி, பொய்யான சான்றிதழ் களைப் பெற்று வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் பணக்கார வீட்டுப் பிள்ளைகளைச் சேர்க்கும் மோசடிகளை ஆதாரத்துடன் கழகத் தலைவர் இவ்வறிக்கையில் வெளியிட்டுள்ளார். கிராமப் புறங்களுக்கு சேவை செய்ய, அடித்தட்டு மக்களிடமிருந்து மருத்துவர்கள் வரவேண்டும் - அவ்வாறுவருவதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் நீட் தேர்வு. இந்த நிலையில் தமிழ் நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்குக் காலந்தாழ்த்தாமல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மருத்துவர்களின் சேவையும், தேவையும் இந்திய நாட்டிற்கு - நம் நாட்டில் இன்னமும் ஏராளம் தேவைப்படுகின்ற நிலைதான் உள்ளது.

மக்கள் தொகையில் 1000 பேருக்கு டாக்டர் எண் ணிக்கை 0.9 (அதாவது ஒரு சதவிகிதம்கூட இல்லை) நிலையே உள்ளது.

மருத்துவ சுகாதாரத் துறைக்கு ஒன்றிய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கும் தொகை மொத்த வருமானத்தில் வெறும் 3.5 விழுக்காடேயாகும்.

(ஆதாரம்: ‘தி எகானமிக்ஸ்', புள்ளி விவர ஆண்டு குறிப்பு - பதிப்பு 2022)

அடித்தட்டு மக்களும் மருத்துவராக 

நீதிக்கட்சி வழி செய்தது!

தற்போது மருத்துவக் கல்லூரிகள் திறப்பு எண் ணிக்கை முன்பைவிட கூடுதல் என்பது வரவேற்கத்தக்க தாக - நாடு முழுவதும் உள்ளது என்றாலும், அதன் பலன் - ஜனநாயக ஆட்சியில், மிகப்பெரும்பான்மையினராக உள்ள மக்களை ஒடுக்கப்பட்ட மக்கள் - எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., எம்.பி.சி., சிறுபான்மையோர் இவர்களில் டாக்டர் படிப்பு படித்து, கிராமத்திலிருந்து படித்து வந்து கிராமங் களில் மருத்துவப் பணிபுரியும் வாய்ப்பு பெற்ற ஏழை, எளிய, நடுத்தர விவசாயக் குடும்பங்களிலிருந்து, சமூக நீதி காரணமான இட ஒதுக்கீட்டினால் படித்து முன் னேறும் வாய்ப்பினை நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் வழிகாட்டும் தன்மையில் மருத்துவப் படிப்பினை உயர்ஜாதியினருக்கே (பார்ப்பனருக்கே) கிட்டும் வகையான தடையை உடைத்து - அனை வருக்கும் கதவு திறந்த ஆட்சி - நீதிக்கட்சி என்ற ‘திராவிட மாடல்' ஆட்சி - திராவிடர் ஆட்சி.

பனகல் அரசர் அவர்கள் மருத்துவப் படிப்புக்கு சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மனுபோட முடியும் என்ற ஆணையை மாற்றி, மருத்துவக் கல்வி நீரோ டையில் உள்ள முதலைகளை வெளியேற்றினார்! (இன்றைக்கு சென்னை கே.எம்.சி. மருத்துவமனை இருக்கும் இடத்தின் மனையை இலவசமாக நன் கொடையாகக் கொடுத்தவரும் பனகல் அரசரே!) அதனால் நாட்டில் ஏராளமான ஒடுக்கப்பட்டோரும், கிராம மக்களும் மருத்துவர்களானார்கள்.

இதனைத் தடுக்க இப்போது வைத்துள்ள கண்ணிவெடி தடுப்பு முறைதான் ‘நீட்' தேர்வு - நாடு முழுவதும் ஒரே தேர்வு என்ற சூழ்ச்சியாகும்!

'நீட்' தேர்வால் தற்கொலை 

செய்துகொண்டவர்கள் 20 பேர்

கல்வி, சுகாதாரம் ஒத்திசைவுப் பட்டியலில் (கன் கரண்ட் லிஸ்ட்) அரசமைப்புச் சட்டத்தில் உள்ளபோது, அதை ஒன்றிய அரசே பறிப்பது சரிதானா? கேட்டால் தகுதி, திறமையை வளர்க்க என்று உச்சநீதிமன்றத்தின் மறு ஆய்வுத் தீர்ப்பை ஒரு வழிமுறையாக்கிக் கொண்டு, கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறது - இந்தக் கொடுமைக்கு மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள்கூட வெற்றி பெற முடியாததால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட கொடுமை - அனிதா தொடங்கி இன்றுவரை சுமார் 20 பேருக்குமேல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது!

கேட்டால், இதுதான் தகுதி, ‘நீட்' மட்டுமல்ல ‘கியூட்' என்ற மற்ற கல்லூரி படிப்புகளுக்கும் இப்படி தேர்வு என்று வைப்போம் என்று பிடிவாதம் காட்டி, மனுதர்ம ராஜ்ஜியம் நடத்துகின்றனர்.

‘தகுதி', நீட் தேர்வில் எப்படி என்பது பல வழக்குகள் மூலம் அம்பலமாகியுள்ளது! ஆள் மாறாட்டம், தேர்வில் ஊழல் எல்லாம் வெளிவந்து - வெள்ளையடிக்கப்படு வதுபோல் மழுப்பப்படுகின்றன!

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட இப்படி ‘தகுதி' (மெரிட்) அடிப்படையில் தேர்வுகள் நடத்தியே தரமான கல்வியை அளிக்கின்றனர் என்றே கூறப்படு கிறது.

வெளிநாட்டுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மேற்கொள்ளப்படும் மோசடிகள்

இந்தப் பயிற்சி வகுப்புகளும் - இடைத்தரகர்கள்மூலம் அதிக மதிப்பெண்கள் எப்படி அதிக விலைக்கு வாங்கப் பட்டு, அங்கே பிள்ளைகள் உயர்படிப்பில் எப்படி சேருகின்றனர் என்பதை அம்பலப்படுத்தி,   The Tyranny of Merit என்ற ஒரு நூலே தக்க ஆதாரங்களோடு மைக்கேல் ஜே.சேன்டல் என்ற அறிஞரால் எழுதப்பட்டு, உலக ஆய்வாளர்களை மேற்கோளாகவும் காட்டப்பட் டுள்ளது.

2019ஆம் ஆண்டின் மார்ச் மாதம். உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு கல்லூரிகளில் சேர ஆவலுடன் மாணவர்கள் காத்திருந்த சமயத் தில் அணுகுண்டை வீசியதுபோல் ஓர் அறிவிப்பை வெளியிட்டது வழக்குரைஞர்களின் குழு ஒன்று.

யேல், ஸ்டேன்ஃபோர்ட், ஜார்ஜ் டவுன், தென் கலிஃபோர்னியா உட்பட பல புகழ்பெற்ற பல் கலைக்கழகங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்பிய பல செல்வந்தர்கள் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். ஏமாற்றுவேலை, மோசடி என் றெல்லாம் வர்ணித்திருந்தது அந்த அதிர்ச்சியூட்டிய அறிவிப்பு.

வில்லியம் சிங்கர் என்ற 

மோசடிக்காரர்!

இந்த மோசடிக்கு மூல காரணமாக இருந்தவர் வில்லியம் சிங்கர் என்பவர் தான் என்ற உண்மை வெளி வந்தது. யார் இந்த சிங்கர்? பணக்காரப் பெற்றோர்களை வலையில் வீழ்த்த உயர்கல்விச் சேர்க்கையை ஒரு வியாபாரமாகவே நடத்தி வந்திருக்கிறார் இவர். கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் மேட்டுக்குடி மாணவ மாணவி யருக்கு இடம் கிடைக்க உதவும் ஆலோசகராக, வியூகம் வகுப்பவராக செயல்பட்டு வந்துள்ளார் வில்லியம் சிங்கர். எப்படியாவது தங்கள் பிள்ளைகளுக்கு உயர்தர கல்வி நிலையங்களில் இடம் கிடைத்தால் போதும் என்று அலைந்து கொண்டிருந்த செல்வந்தர்கள் இவர் விரித்த வலையில் விழுந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி நுழைவில் போட்டிகள் அதிகரித்துள்ளன. வளமான வாழ்க் கைக்கு வழி காட்டுபவவை பெயரும் புகழும் பெற்ற பல்கலைக்கழகங்கள் என்ற எண்ணம் எல்லோருடைய மனங்களிலும் வேரூன்றி விட்ட காலம் இது. இதைப் பயன்படுத்திக்கொண்டு வில்லியம் சிங்கரின் மோசடி நிறுவனம் சாதுரியமாக விளையாடி வந்துள்ளது.

அதிக மதிப்பெண் பெற்றதாக 

மோசடி சான்றிதழ்கள்!

புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் கிடைக்க இவரை நாடியுள்ளனர் பணக்கார பெற்றோர்கள். SAT என்ற பெயரிலும் ACT என்ற பெயரிலும் போட்டித்தேர்வுகள் பல அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளில் பிரபல மானவை. இவற்றுக்கான பயிற்சி நிலையங்கள் அங்கு மூலை முடுக்கெல்லாம், முளைத்துள்ளன. வில்லியம் சிங்கர் அத்தகைய பயிற்சி நிலையங் களுக்கெல்லாம் கையூட்டு வழங்கி, தான் சேர்த்துவிட்ட மாணவ மாணவியரின் மதிப்பெண் பட்டியல்களில் தில்லு முல்லு செய்ய வைப்பது வழக்கமாம். தேர்வுத் தாள்கள் திருத்துவதிலும் மோசடி நிகழ்ந்துள்ளது. வில்லியம் சிங்கர் மூலம் இத்தகைய பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்த மாணவ மாணவியர் மிக அதிகமான மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.இவர்களுக்கு உயர் தர பல்கலைக்கழகங்களில் மிக எளிதாக இடம் கிடைத்து விடுமல்லவா? இதுவே வில்லியம் சிங்கரின் சிலந்தி வலை!

விளையாட்டு வீரர்கள் என்ற பொய்யான தகவல்கள் - போட்டோ ஷாப்பிங் - தில்லுமுல்லுகள்!

இதெல்லாம் போதாதென்று பல மாணவ மாணவியரை விளையாட்டு வீரர்கள் என்றும் வீராங்கனைகள் என்றும் போலி சான்றிதழ்கள் பெற வைத்துள்ளார் இந்த மோசடிப் பேர்வழி. அப்படிச் சான்றிதழ்கள் பெற்றவர்கள் பலர் எந்த விளையாட்டிலும் என்றுமே ஈடுபடாதவர்கள். உலகப்புகழ் பெற்ற பல விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களோடு தன் மாணவ மாணவியரின் முகத்தோற்றத்தை மட்டும் வெட்டியும் ஒட்டியும் மார்ஃபிங், ஃபோட்டோஷாப்பிங் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி போலியான புகைப்படங்களையும் தயாரிப்பதில் கை தேர்ந்த வராம் இந்த வில்லியம் சிங்கர்.

இவருடைய சேவைகள் எதுவும் மலிவானதும் அல்ல. சட்ட ஆலோசனைகள் வழங்கி வரும் ஒரு நிறுவனத்தின் அதிபர், தன் மகளை ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் சேர்க்க வில்லியம் சிங்கருக்கு செலுத் திய இடைத்தரகர் கட்டணம் 75,000 டாலர்களாம்! இதுவும் ஒரு நுழைவுத் தேர்வு நடத்திய நிலையம் ஒன்றுக்காக மட்டுமே. தேர்வு கண்காணிப்பாளர் வில்லியம் சிங்கரின் கூட்டாளி. வேறு சிலரும் உடந்தை. உயர்தர கல்வி நிறுவனம் ஒன்றில் சேர எவ்வளவு மதிப்பெண்கள் தேவையோ அவை அந்த மாணவிக்கு முறைகேடான வழியில் கிடைத்து அவர் சேர்ந்தும் விட்டாராம்.

கடந்த 8 ஆண்டுகளில் வில்லியம் சிங்கர் இத்தகைய மோசடிகள்மூலம் அடித்த கொள்ளை 25 மில்லியன் டாலர்கள்

வில்லியம் சிங்கரின் இத்தகைய மோசடிகள் மிக நீண்ட பட்டியல்களில் தான் அடங்கும். கடந்த எட்டு ஆண்டுகளில் இவர் ஈட்டியுள்ள வருமானம் இருபத்தைந்து மில்லியன் டாலர்களாம். போலி யான தகுதிச் சான்றிதழ்கள் மூலம் இவர் பலருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கச் செய்துள்ளார். யேல் பல்கலைக்கழகத்தில் கால்பந்தில் வீராங் கனை என்று ஒரு பெண்ணை இவர் பயிற்சி யாளராக சேர்த்துள்ளார். அந்தப் பெண் ஒரு நாளும் கால்பந்து விளையாடியதில்லையாம். அங்குள்ள தலைமை பயிற்சியாளருக்கு லஞ்சம்! வேறென்ன?

நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பத்திரிகைகளில் இந்த மோசடி தலைப்புச் செய்தியாயிற்று. அமெரிக்க நாடுகளை வில்லியம் சிங்கரின் மோசடிச் செயல்கள் உலுக்கி எடுத்து விட்டன. ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டதிலும் வியப்பில்லை. அறிஞர்களும் கல்வியாளர்களும் இதுபற்றி தீவிரமாக விவாதித்து வருகிறார்கள். பல ஆலிவுட் (Hollywood) பிரபலங்களுக்கும் இந்த மோசடி விளையாட்டுகளில் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.

மதிப்பெண்களை வைத்து தகுதியை நிர்ண யிக்கும் அவலநிலை மாற வேண்டும் என்கிறார்கள் பலரும். செல்வந்தர்கள் பணத்தை தண்ணீர் போல் செலவழித்து கல்லூரிச் சேர்க்கையை கபளீகரம் செய்து விடுவதால் நியாயமாகவும் நேர்மையாகவும் படித்து தேர்ச்சி பெறும் சாமானிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டு விடு கிறது, மதிப்பெண்களும் நுழைவுத் தேர்வு வெற்றிகளும் அளவுகோல்கலாக இருப்பதால்.

டிரம்ப்பின் மருமகள் 

எழுப்பும் கேள்வி

மேனாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மருமகள் லாரா, “எல்லோருக்கும் சம உரிமை சமத்துவம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசுபவர் களைப் பாருங்கள். எப்படிப்பட்ட கபட நாடகம் இது? எங்கே சம வாய்ப்பு? எங்கே பொதுநலம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். வசதி உள்ளவர்கள் இப்படி குறுக்கு வழிகளில் தங்கள் பிள்ளைகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்க வில்லியம் சிங்கர் போன்ற மோசடிப் பேர்வழிகளுக்கு துணை போவது சமூக அநீதியல்லவா என்று அமெரிக்க மக்கள் மனக்குமுறலுடன் கேட்கிறார்கள்.

தகுதி என்பதே கொடுங்கோன்மையின் அடை யாளமாகி விட்டது. இது அடக்குமுறை தந்திரம் தான், எதேச்சாதிகார மனப்போக்கு தான் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் அமெரிக்க அறிவு ஜீவிகள். சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டு விடாத படி லாகவமாக திட்டமிட்டு முறைகேடுகள் நடந் திருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி யுள்ளது.

ஒரு வழக்குரைஞர் குழு வெளியிட்ட 

திடுக்கிடும் தகவல்கள்

2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு வழக்குரைஞர்கள் குழு வெளியிட்ட பரபரப்பான அறிக்கையின் பின்புலம் தான் இத்தனையும். The Tyranny of Merit’என்ற நூலில் அதன் ஆசிரியர் மைக்கேல் ஜே. சேன்டல்  தன் முன்னுரையிலேயே இந்த மோசடிக் கும்பலைப் பற்றியும், உயர்கல்விச் சேர்க்கை என்பதே வியாபாரமாகி விட்ட அவல நிலையைப் பற்றியும் தெளிவாக எழுதியுள்ளார். “பொது நலம் பற்றிய நமது அக்கறைக்கு என்ன ஆயிற்று? எங்கே சமுதாய நலம்?” என்பவை அவர் எழுப்பும் கேள்விகள்.

தகுதி என்ற பெயரால் 

நடக்கும் மோசடிகளை அறிவீர்!

தகுதி என்ற ஒற்றை வார்த்தையே கொடுங் கோன்மையை பிரதிபலிக்கும் சொல்லாகி விட்டது  என்பதே அவருடைய நூலின் மய்யக் கருத்து என்றால் மிகையாகாது.

‘நீட்' தேர்வு என்ற ஊழல்களே நுழையாத வெறும் தகுதி மட்டுமே டாக்டர்களை உருவாக்குகிறதா?

அதில் வெற்றி பெற்றவர்களுக்குக் கூட அத்துணைப் பேரும் இடம்பெற முடியாத பரிதாபகரமான நிலைதானே!

எனவே, தமிழ்நாடு அரசு சமூகநீதிக்கான ஆய்வகமாகி, இதனை எதிர்த்து, தனி விலக்கு பெற தனிச் சட்டம் இயற்றியுள்ளது.  இரண்டாவது முறையும் நிறைவேற்றியுள்ளது. இதனைக் குடியரசுத் தலைவர் கிடப்பில் போட்டிருப்பது நியாயமாகாது.

மேலும் காலதாமதம் செய்யாமல், உடனே ஒப்புதல் தருவது ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் மதிப்பதற்கான அடையாளமாகும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

6.6.2022


No comments:

Post a Comment