தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் அபரிமிதமான அன்பைப் பெற்ற, தந்தை பெரியார் அவர்களுக்கு டாக்டராக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அறிமுகமான டாக்டர் ஏ.சி. ஜான்சன் அவர்களும், அவரது வாழ்க்கைத் துணைவியான டாக்டர் திருமதி சத்திய பாமா ஜான்சன் அவர்களும் பல ஆண்டுகளாக அய்யா, அம்மாவிற்கும், நமக்கும் குடும்ப ரீதியாக பழகிய பண்பு மிக்க நண்பர்கள்.
அதுபோலவே அவரது தங்கை வசந்தா, அவரது கணவரும், சத்தியபாமா அவர்களது அண்ணனு மாகிய செல்லா அவர்களும் நம்மோடு மிகவும் நட்புறவு பாராட்டியவர்கள். அவ்விருவரும் டாக்டர் ஜான்சன் மறைவுக்குப்பின், அடுத்தடுத்து மறைந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
டாக்டர் ஜான்சன் அவர்கள் மறைவுக்குப் பின் ஒரு ஆறுதல் டாக்டர் சத்தியபாமா ஜான்சன் இருக்கிறார் என்பதே.
அவரும் சென்ற வாரம் துல்சா நகரில் (ஒக்கல ஹாமா மாநிலம்) காலமானார் என்ற செய்தி கேட்டு எல்லையற்ற துயரத்தால் தாக்குண்டோம்!
எங்களுடைய நட்பு ஜான்சன் குடும்பத்தினரோடு வெறும் நட்பு அல்ல; அதைத் தாண்டிய உறவு - பாசப் பிணைப்புடன் உள்ளது!
6.6.2022 அன்று டாக்டர் ஜான்சன் அவர்களது மூத்த மகன் எபினேசர் அவர்களிடம் தொலை பேசியில் இரங்கலும், ஆறுதலும் நானும், மோகனா அவர்களும், அன்புராஜ் அவர்களும் தெரிவித் தோம். ஏற்கெனவே அருள்செல்வி சிகாகோவி லிருந்து இரங்கலை குடும்ப சார்பில் தெரிவித்துள்ளார்.
எது தவிர்க்க இயலாததோ அதை ஏற்பது இயற்கை விதியாகும்.
மறைந்த அவருக்கு இறுதி நிகழ்வுகள் நடை பெறவிருக்கும் நிலையில், அவரது குடும்பத்தவர் அனைவருக்கும் நமது உளமார்ந்த ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
7-6-2022
குறிப்பு: 11.6.2022 அன்று இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.
No comments:
Post a Comment