சமூகநீதிக்கான அடிப்படை ஜாதிவாரி கணக்கெடுப்பே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

சமூகநீதிக்கான அடிப்படை ஜாதிவாரி கணக்கெடுப்பே!

  • பீகார் முயற்சிப்பதுபோல மற்ற மாநிலங்களும் முனையட்டும்!
ஜாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்பவர்கள் எல்லாம் 
''நாடு முழுவதும் ஒரே ஜாதி'' என்று சட்டம் கொண்டு வரட்டும்!

சமூகநீதிக்கான அடிப்படை ஜாதிவாரி கணக்கெடுப்பே! பீகார் முயற்சிப்பதுபோல மற்ற மாநிலங்களும் முனையட்டும்! ஜாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்பவர்கள் எல்லாம் நாடு முழுவதும் ஒரே ஜாதி என்று  சட்டம் கொண்டு வரட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘‘சமூகநீதி'' என்பது நம் நாட்டில் தனித்த பொருளும், அணுகுமுறையும் கொண்ட கருத்தியல் ஆகும்.

சமூகநீதி என்பது உரிமையின்பாற்பட்டதாகும்
    மற்ற உலக நாடுகளில் சமூகநீதி (Social Justice)  என்பது ஏழை, பணக்காரர்கள் (Rich and Poor)  என்ற பொருளாதார பேதத்தை மய்யமாகக் கொண்டு எழுந்த நியாயமான - தேவையான கோரிக்கை - உரிமையின்பாற்பட்டதாகும்.

ஆனால், நமது நாட்டில், பிறவியினால் உண்டாக்கப்பட்ட செயற்கை பேதமான ‘‘ஜாதி''யை அடிப்படையாகக் கொண்டு மனு, மந்தாதா காலத்திலிருந்து வருணாசிரம அடிப்படையால் கல்வி, உத்தியோகம் போன்ற பல உரிமைகள் பல்லாயிரக்கணக் கான ஆண்டுகாலம் மறுக்கப்பட்டதோடு, மீறிக் கற்றால் அது தண்டனைக்குரிய குற்றமும் ஆகும் என்று எழுதி வைத்து, அரசர்களையும், அரசுகளையும் கடைப் பிடிக்க செய்து வந்த கொடுமை கோலோச்சிய காலம் ஆகும்.

இதனை எதிர்த்துத்தான் சமூகநீதிக்கான குரல் இந்நாட்டில் தொடர்ந்து ஒலித்து, போராடி, வெற்றி பெற்று, இந்திய அரச மைப்புச் சட்டத் திருத்தத்தின்மூலம் இட ஒதுக்கீடு சுமார் 72 ஆண்டுகாலமாக திரா விடர் இயக்கத்தின் சாதனை சரித்திரமாகிவிட் டாலும், இன்று ஒரு சிலரைத் தவிர - ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளைத் தவிர (அவர்களில்கூட பா.ஜ.க. அரசியல் பிரிவு வெளிப்படையாக இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக் கோட்பாட்டை எதிர்க்க இயலாத சூழ்நிலை என்பது யதார்த்தம்) எதிர்ப்பவர் இல்லை.

மூல காரணம் தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும்
    இந்நிலையில், இந்தியாவிற்கே இந்த சமூகநீதி உரிமையை ஒடுக்கப்பட்ட சமூகத் திற்குப் பெற்றுத் தந்ததற்கு ஒரு மூல காரணம் தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஆவார்கள்.

நீதிக்கட்சி என்ற திராவிடர் ஆட்சி - அது போல கருநாடகத்தின் மைசூர் ராஜ்ஜியமாக இருந்த கருநாடக மாநிலப் பகுதிகளில் அந்த நாள் அரசர் போன்றவர்கள் நடத்திய ஆட்சி என்பன சமூகநீதி வரலாற்றுச் சுவடுகள் ஆகும்!

தமிழ்நாடு இந்தியாவிற்கே இதில் பாடம் நடத்தும் ‘‘திராவிட மாடல்'' ஆட்சியைக் கொண்ட ஒரு மாநிலம்!

அரசமைப்புச் சட்ட 76 ஆவது திருத்த பலத்துடன் உள்ள தனிச் சட்டம்!
    அரசியல் கட்சி வேறுபாடு தாண்டி, படிப் படியாக இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில்தான் 69 விழுக்காடு கல்வியிலும், உத்தியோகத் திலும் நிலை பெற்றுள்ளது. (9 ஆவது அட்ட வணை பாதுகாப்பு என்ற அரசமைப்புச் சட்ட 76 ஆவது திருத்த பலத்துடன் உள்ள தனிச் சட்டமாகும்).

அவ்வாறு இருந்தும், மண்டல் பரிந் துரைமூலம் பெற்ற 27 சதவிகித பிற்படுத்தப் பட்டோருக்கான கல்வி, உத்தியோக இட ஒதுக்கீடும் - பல சட்டப் போராட்டங்கள் காரணமாக மறுக்கப்பட முடியாத உரிமை களாக ஆகிவிட்டன!

இதை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் வரும்போது, ஒதுக்கீடுகளை நியாயப்படுத்த ஜாதிவாரி புள்ளி விவரங்கள் - சமூகநீதிக்கான தேவையைப் பிரதி பலிக்கும் வகையில் உண்டு என்பதை ஆதாரமாக தருமாறு கேட்கப்படுகின்றன!

எனவே, ஜாதிகள் இருப்பது மட்டுமல்ல - இன்றைய இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்போடு இருக்கும் நிலையில், அதைப் பார்க்க மறுப்பது அசல் பாசாங்குத் தனம் - திட்டமிட்ட திசை திருப்பல், சமூகநீதி - இட ஒதுக்கீடு மறுப்பதற்காக ‘‘பரந்த விரிந்த மனப்பான்மை வேஷமும்''கூட!

மிகவும் இன்றியமையாதது - காலத்தின் கட்டாயம்!
    எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசே - மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் (சென்சஸ்) செய்வது மிகவும் இன்றியமையாதது - காலத்தின் கட்டாயமும் ஆகும்!

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கல்வித் திட்டம், ஒரே ரேஷன் கார்டு என்ற ‘ஒரே ஒரே' ராகம் பாடும் ஒன்றிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் ஏன் நாடு முழுவதும் ஒரே ஜாதி என்று ஓர் அவசரச் சட்டம் கொண்டு வந்து, நாளையே பிரகடனப்படுத்தத் தயங்குகிறது என் பதே நமது தொடர் கேள்வியாகும்!

இதுவரை பதிலே இல்லை -

காரணம் வெளிப் படை.

பீகார் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
    இந்நிலையில், பீகாரில் தேசிய ஜனநாயக முன்னணி என்ற ஒன்றியத்தினை ஆளும் கூட்டணியில் இடம்பெற்ற நிதிஷ்குமார் கட்சி, அனைத்துக் கட்சிக் குழுவினரோடு சென்று பிரதமரைச் சந்தித்து நேரில் கோரிக்கை வைத்தும்கூட, செவிசாய்க்கப்பட வில்லை என்பதால், பீகார் அரசே தனியே ஜாதிவாரிக் கணக்கெடுப்பினை - மாநிலமே முன்னின்று நடத்த முன்வந்திருப்பது வர வேற்கத்தக்கது!

சமூகநீதிக்கான எதிரிகள் எங்கே எப்படி பதுங்கிய நிலையில், இரட்டை வேடம் போடு கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தும் நடவடிக்கையாகவும் இது அமைந்துள்ளது!

மற்ற மாநிலங்களும் பின்பற்றவேண்டும்!
        மற்ற எல்லா முற்போக்கு சிந்தனையுடன் சமூகநீதியை மக்களுக்கு அளிக்க முற்படும். மாநிலங்களும் இதே முறையை பின்பற்ற வேண்டும்.

ஜோதிபாபூலே, சாகுமகராஜ், டாக்டர் அம்பேத்கர் பிறந்த மண்ணான மகாராட் டிரத்திலேகூட இதனால் சமூகநீதிக்கான வாய்ப்புகளை நீதிமன்றங்கள் கேள்விக் குறியாக ஆக்கும் நிலைதானே உள்ளது?

எனவே, இம்முயற்சி பாராட்டி வரவேற் கத்தக்கது மட்டுமல்ல; மற்ற மாநிலங்களும் பின்பற்றவேண்டிய எடுத்துக்காட்டான செயல்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.6.2022


No comments:

Post a Comment