சென்னை, ஜூலை 26 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளான வரும் 28ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை: மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 ஆவது பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு வரும் 28ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 28ஆம் தேதி ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு அரசு முதன்மைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் குறிப்பில் கேட்டுள்ளார். இந்த கோரிக்கையை அரசு கவனமுடன் சதுரங்க பரிசீலித்து மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளான 28ஆம் தேதி (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அந்த விடு முறையை ஈடுசெய்யும் வகையில், ஆக.27ஆம் தேதி (நான்காவது சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், பள்ளிக் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப் படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment