வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.30 ஆயிரம் மட்டும் கட்டினால் போதும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.30 ஆயிரம் மட்டும் கட்டினால் போதும்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை,ஜூலை 30- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று (29.7.2022) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்து திரும்பிய பிறகு இன்டன்ஷிப் பயிற்சி பெற வேண்டும். அதற்கு கட்ட ணமாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வசூலிக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை ரூ.2 லட்சம் வசூலிக்கிறது. ஆக மொத்தம் பயிற்சி பெற ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு வெளிநாடுகளில் படித்து வரும் மாணவர்கள் இங்கு பெரிய அளவில் பணம் கட்ட முடியாததால்தான் கடுமையான குளிர் போன்ற சிரமங்களையெல்லாம் தாங்கி படித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் பயிற்சி பெற ரூ.5 லட்சம் என்பது மிக அதிகமான கட்டணமாக இருப்பதாக அரசிடம் முறையிட்டார்கள். அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மருத்துவ பல்கலைக்கழகம் வசூலித்த ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை குறைத்து வெறும் ரூ.30 ஆயிரம் மட்டும் செலுத்த உத்தரவிடப்பட்டது. இதே போல் மக்கள் நல்வாழ்வுத் துறை வசூலித்து வந்த ரூ.2 லட்சமும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆக இனி வெளிநாட்டில் மருத்துவம் படித்து இங்கு பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் ரூ.30 ஆயிரம் மட்டும் கட்டினால் போதும். அதேபோல் வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்களில் 7.5 சதவீதம் பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்பட்டது. இப்போது அதையும் தேசிய மருத்துவ கவுன்சில் கவனத்துக்கு கொண்டு சென்று 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

-இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா பல்கலை.யில்

70 வயதில் பி.எச்.டி. பட்டம் பெற்றவருக்கு பாராட்டு

சென்னை,ஜூலை 30- சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் 1978ஆம் ஆண்டு ஆர்.ராஜகோபால் என்பவர் வேதியியல் பொறியியல் துறையில் பி.டெக். பட்டம் பெற்றார். அதன் பிறகு 1980ஆம் ஆண்டு எம்.டெக். பட்டம் பெற்றார். 

இதன் பிறகு அவர் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். பல்வேறு ஊர்களில் பணியாற்றிய ராஜகோபால் 2013ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் சென்னை திரும்பினார். அவர் பணியாற்றிய காலங்களில் ஓ.என்.ஜி.சி.யில் உருவாகும் கழிவுநீர் பிரச்சினைக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண முயன்றார். அப்போது அவரது முயற்சியை கண்டறிந்த ஓ.என்.ஜி.சி. பொது மேலளார் அவரை ஊக்கப்படுத்தி பி.எச்.டி. படிக்குமாறு அவ்வப்போது ஊக்கம் அளித்து வந்தார். 

இந்த சூழலில் ஓய்வுக்கு பிறகு சென்னை திரும்பிய அவர் தொழில் துறையில் பொறியியல் பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருந்த தனது மகளை பல்கலைக்கழகத்தில் விடுவதற்காக வந்து செல்வார். அப்போது பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பை தொடர அவருக்கு மீண்டும் ஆர்வம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்புக்கு விண்ணப்பித்து தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். 70 வயது ஆன நிலையிலும் படிப்பு மீதுள்ள ஆர்வம் காரணமாக ஆராய்ச்சி படிப்பை முடித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 

இதுகுறித்து ராஜகோபால் கூறுகையில், "ஓ.என்.ஜி.சி. யில் உருவாகும் கழிவுநீர் பிரச்சினைக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண முயன்றேன். ஆய்வகத்தில் உள்ள தண்ணீரை 2 வெவ்வேறு முறைகளில் சுத்திகரித்தேன். அவை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் வருமா? என்பதை கண்டறிய முடிவுகளை ஒப்பிட்டு பார்த்தேன். இது ஒரு ஆரம்ப ஆய்வுதான். 

-இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா வரைபடத்தின் 

இலவச வரைபட செயலி

சென்னை, ஜூலை 30 மேப் மை இந்தியா (MapmyIndia)  நிறுவனம், இந்தியாவில் டிஜிட்டல் வரைபட (Map) மற்றும் நுண்ணிய தொழில்நுட்பத் தயாரிப்புகள் (deep-tech products) மற்றும் அதுசார்ந்த தகவல் தரும் நிறுவனமாகும். 

இந்நிறுவனம் மேப்பிள்ஸ் ரியல் வியூ (Mappls Real View) எனும் இந்தியாவின் முதலாவது மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்திய தெருக்களை 360 டிகிரி கோணத்தில் (Panoramic Street View)  பார்க்கும் வகையில் 3டி மெடாவெர்ஸ் (3D Metaverse)  வரைபட சேவையை இந்தியாவுக்காக தயாரித்துள்ளது. இது இந்தியாவில் உருவான, வளர்ந்த நிறுவனமாகும். இலவச வரைபட தளமான - <https://www.mappls.com/> இணையதளத்தை ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப்பிலும்; மேப்பிள்ஸ் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் அய்.ஓ.எஸ். இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இது குறித்து  இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி  ரோஹன் வர்மா  கூறுகையில்,  சுற்றுலாப் பயணிகள், குடியிருப்பு பகுதி மற்றும் வர்த்தகப் பகுதிகளையும், எந்தெந்த நெடுஞ்சாலைப் பகுதியில் பயணிக்கலாம் என்பன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பயனர்கள் முப்பரிமான கோணத்தில் (3டி) இந்தியா முழுவதையும் வரைபடங்கள் மூலம் பார்க்கலாம். மேலும் உரையாடல் சார்ந்த வழிகாட்டுதலையும் இது அளிக்கும் என அவர் 

தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment