பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேனாள் மாணவர்கள் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேனாள் மாணவர்கள் சந்திப்பு

தஞ்சாவூர், ஜூலை 10 பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் மேனாள் மாணவர் (1993-1997) வெள்ளி விழா ஆண்டு மாணவர்கள் சந்திப்பு வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 8.7.2022 அன்று பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின்  வேந்தர் கீ.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும்
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 85 முன்னாள் மாணவர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், பெரியார் மணியம்மை மேனாள் மாணவர் சங்க நிதிக்கு 2 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்கள்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்

எஸ் வேலுசாமி; பதிவாளர் முனைவர் பி.கே.சிறீவித்யா; கல்விப்புல முதல்வர் முனைவர் ஏ. ஜார்ஜ் , மற்றும் பிற புல முதல்வர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், ஆசிரிய பெருமக்கள் மேனாள் மானவர்கள் சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெரியார் மணியம்மை முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தாயின் உடலை மருத்துவமனைக்கு கொடையளித்த மனிதாபிமான மகள்கள்

சென்னை,ஜூலை 10- திருவொற் றியூர் ராமானுஜம் நகர் ஒத்தவாடை பகுதியைச் சேர்ந்தவர் மீனா (வயது 53). அச்சகத்தொழில் நடத்தி வந்த இவருடைய கணவர் முருகானந்தம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு காயத்ரி, சுவாதி என 2 மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக மீனா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவரது சிறுநீரகம் செயல் இழந்து விட்டது. 

மீனா சமூக சிந்தனையும், பல்வேறு முற்போக்கு கருத்துகளையும் கொண்டிருந்தவர். எனவே தனது மரணத்துக்கு பிறகு தனது உடலை எரிக்கவோ, புதைக்க வோ கூடாது. 

பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தனது உடலை பயன்படுத்த வேண்டும் என தனது மகள்களிடம் உறுதிமொழி வாங்கி இருந்தார். இந்த நிலையில் சிறுநீரக பிரச்சினையால் இறுதிக் கட்டத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டி ருந்தார். அவர் உடல் மிக மோசமாக பாதிக்கப்பட்டபோது தனது மகள்களிடம் கடைசி ஆசையாக தனது உடல் உறுப்புகளை பொதுமக்கள் அல்லது மருத்துவ கல்லூரிகள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதற்கிடையில் மீனா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

அவரது கடைசி ஆசைப்படி அவரது மகள்கள் தங்கள் தாயின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கினர். தாயின் ஆசையை நிறை வேற்றிய மகள்களின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற் படுத்தியது. அவர்களை மருத்துவக் கல்லூரி பேராசிரி யர்கள் வெகுவாக பாராட்டினர்.

கி.பி. 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த 

தூம்பு கல்வெட்டு கண்டெடுப்பு  


பெரம்பலூர், ஜூலை 10 பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரையில் கி.பி. 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால தூம்பு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.  

 பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியை சுற்றியுள்ள பகுதியில் சூழலியல் செயல் பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, வரலாற்று ஆய்வாளர் முனைவர் மகாத்மா செல்வபாண்டியன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது ஏரியின் கிழக்கு கரைப் பகுதியில் இரட்டை தூணுடன் கூடிய தூம்பு கல்வெட்டு இருப்பதை கண்டு ஆராய்ச்சி செய்தனர். மேலும் அந்த கல்வெட்டு எழுத்துகளை படிக்கும் முறைக்காக, படி எடுத்து தொல்லியல் அறிஞர் ராஜகோபால், கருநாடகா மாநிலம் மைசூரில் உள்ள முனைவர் முனிரத்னம் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் ஆய்வு செய்ததின் அடிப்படையில், கி.பி.17ஆம் நூற்றாண்டை சார்ந்ததும், சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய தெலுங்கு மொழி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட நாயக்கர் கால தூம்பு கல்வெட்டு என கண்டறியப்பட்டது. 

இதுகுறித்து ரமேஷ் கருப்பையா, மகாத்மா செல்வபாண்டியன் ஆகியோர் கூறுகையில், சங்க காலம் முதலே அரசர்களும், நிர்வாக பொறுப்பில் இருந்தவர் களும் நீர்நிலைகளை உருவாக்கி பாசனத்திற்கும், பிற தேவைகளுக்கும் முறைப்படுத்த தூம்புகளை அமைத் துள்ளனர். இதற்கான சான்றுகளை சங்க இலக்கியங்கள் பல்லவர், சோழர், பாண்டியர் முதல் நாயக்கர் காலம் வரையிலான கல்வெட்டுகள் வழியாகவே அறியலாம். பொதுவாக ஏரிக்கரையில் இருந்து சற்றுத்தொலைவில் ஏரியின் உட்பகுதியில் குமிழ் தூம்புகள் அமைக்கப்படும். ஏரியின் தரைமட்டத்தில் கருங்கற்களாலான தொட்டி கட்டப்பட்டு, அதன் துளையின் மூலம் சுரங்க கால்வாய் வழியாக நீர் சென்று வெளியே இருக்கும் பாசன கால்வாயை அடையும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். 

பாசன தேவைக்கேற்ப வெளிச்செல்லும் நீரின் அளவை கூட்டவும், குறைக்கவும் தூம்புக்கல் உதவும். இதனை மேலும் கீழும் இயக்குவதற்கு ஏதுவாக கற்சட்டம் அமைக்கப்பட்டிருக்கும். 

ஆங்கிலேயர் காலத்தில் பொதுப்பணித்துறையினர் ராட்சத ஷட்டர்களை, மதகுகளை அமைத்து நீர்நிலை களை பராமரிக்க தொடங்கியதால் காலப்போக்கில் தூம்புகள் கைவிடப்பட்டன. 

எனவே தமிழ்நாடு அரசு இந்த தூம்பினை வரலாற்று சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும், என்றனர்.


No comments:

Post a Comment