18-59 வயதினருக்கு இலவச பூஸ்டர் டோஸ்: ஒன்றிய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

18-59 வயதினருக்கு இலவச பூஸ்டர் டோஸ்: ஒன்றிய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

சென்னை, ஜூலை 10 தமிழ்நாட்டில் 35.52 லட்சம் கரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதால் 18- - 59 வயதினருக்கு இலவசமாக பூஸ்டர் தவணை செலுத்த அனுமதிக்குமாறு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண் டார்.

கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலை மையில் டில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம்   நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம், மருந்து துறை இயக்குநரகத்தில் இருந்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய தாவது:

கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய வற்றைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் முதல்வர் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டில் 2,866 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை களில் மருந்துகள், ரத்தம், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கொசு ஒழிப்பு பணியில் தினமும் 21,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மலேரியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 140 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள் ளனர். 17 மாவட்டங்களில் மலேரியா தொற்று இல்லை.

இந்த ஆண்டில் ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் 13 பேர் பாதிக்கப்பட்டுள் ளனர்.  இதற்கு தடுப்பூசி போடப்படுகிறது. 9-12 மாத குழந்தைகளுக்கு முதல் தவணை, 16-24 மாத குழந்தைகளுக்கு 2ஆவது தவணை தடுப்பூசி போடும் பணி 90 சதவீதத்துக்கு மேல் முடிக்கப்பட்டுள்ளது.

மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, கொசுக்கள் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக அனைத்து தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

ஜூலை 6ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 78.79 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. வரும் செப்டம்பர் மாதத்துடன் 35.52 லட்சம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளன. இவை வீணாகாமல் தடுக்க, 18-59 வயதினருக்கு தனியார் மய்யம் தவிர்த்து அரசு மய்யத்திலேயே இலவச மாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போட ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment