"இப்படி நடவாமல் இருந்தால்" என்பது பொருளற்ற பேச்சு தான்!
ஆனால் அழுத்தமான விதிவிலக்குகள் அனைத் திற்கும் உண்டே.! ஏனெனில் தந்தை பெரியார் மட்டும் பிறவாமல் இருந்திருந்தால் எனும் ஒரு கேள்வி நாளும் நம் உள்ளத்தில் மின்னல் போல் எழாமல் இல்லை.
தந்தை பெரியாரே கூட ஆதங்கப்பட்டு இப்படிச் சொன்னார்,
"ஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கைகளை வளர்க்கக்கூடியதும், தமிழ் மக்களுக்கு சமுதாயத்திலும் அரசியலிலும் உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக்கூடியதுமான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளை போக்குவதற்காக பாடுபடும் பத்திரிகை ‘விடுதலை'. ‘விடுதலை' பத்திரிகை இல்லா திருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடு களை ஏன் என்று கேட்க நாதியே இல்லாமல் போயிருக்கும்!" என்று சொல்கிறார் என்றால் இந்த நாடு எத்தகைய நிலையில் இருந்தது என்பதை மறைப்பதற்கில்லை.
அடுத்து,விடுதலை ஆசிரியர் பற்றிக் குறிப்பிடு கையில், "உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேர தொண்டிற்கு இசையா திருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வார பத்தி ரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்." என்கிறார்.
ஆம், தந்தை பெரியார் மட்டும் நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சடித்து, நானே படிக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை, எழுதுவோம் இதழ் நடத்துவோம் என்று விடாப்பிடியாக இல்லாமலிருந் திருந்தால், தனக்குப் பின்னாலும் தொடர்ந்து நடத்த தன்னை போலவே தகுதி படைத்த ஒரு வராக தமிழர் தலைவர் ஆசிரி யரை அடையாளப் படுத்தாமல் இருந்திருந்தால் என்ன ஆகி யிருக்கும்? தமிழ்நாட்டின் வரை படத்தில் வடநாடு வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதொன்றே முடிந்த முடிவாகியிருக்கும் அல்லவா?
ஏடுகளே ஏவிய ஆயுதங்கள்!
சுயமரியாதை இயக்கக் கருத்துகள் பட்டி தொட்டி எல்லாம் பரவ வேண்டும் என்று சுற்றிச் சுற்றி சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்த பெரியார் மக்களிடையே அறிவுத்தீயைக் கொளுத்தி விட ஏடுகளே மிகச்சிறந்த ஆயுதமென உறுதியாக நம்பினார். முதன் முதலில் 1925இல் 'குடிஅரசு' வார இதழைத் தொடங்கினார். ஆங்கிலேயரின் எதிர்ப்பு, பழைமையாளர்களின் எதிர்ப்பு, பார்ப்பனர்களின் எதிர்ப்பு என அத்தனையையும் எதிர்த்துப் போராடி வெளி வந்த ‘குடிஅரசு' ஏடு பல்வேறு நெருக்கடிகளால் இடையில் நிறுத்தப்பட்டபோது 1933 இல் 'புரட்சி' எனும் இதழைத் தொடங்கினார். புரட்சி வார ஏட்டிற்கும் வழக்குகள் - பொருள் இழப்புகள் என தொல்லைகள் தொடர்ந்ததால் 'பகுத்தறிவு' என்னும் ஏட்டை தொடங்கினார். இவ்வேட்டிற்கும் அரசு ஜாமீன் தொகை கட்டுமாறு கேட்டது. மீண்டும் குடிஅரசு இதழ் வெளிவரும் சூழல் ஏற்பட்டதால் பகுத்தறிவும் நிறுத்தப்பட்டு மறுமுறை குடிஅரசு 1949 வரை வெளி வந்தது.
இதற்கிடையில் சுயமரியாதை இயக்கக் கருத்துகளை ஆங்கிலத்திலும் பரப்பும் வகையில் ‘ரிவோல்ட்' (கட்டுப்பாட்டைத் தகர்த்தல் என்று பொருள்) என்ற ஆங்கில வார ஏட்டை 1928 முதல் 1930 வரை நடத்தினார் பெரியார்.
'திராவிடன்' (1917) என்பது நீதிக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு. பார்ப்பனரல்லாத மக்களுக்காகத் தொடங்கிய முதல் இதழ் எனும் பெருமைப் பெற்ற அவ்வேடு 1931 க்குப் பிறகு வெளிவராத சூழலில் பெரியாரின் அறிவுறுத்தலில் 1.6. 1935 ஆம் நாளிலிருந்து (14, மவுண்ட் ரோடு மதராஸ் எனும் முகவரியிலிருந்து) டி.ஏ.வி.நாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வாரம் இருமுறையாக வெளிவந்தது தான் ‘விடுதலை' ஏடு. நீதிக் கட்சியால் அதைத் தொடர முடியாத நிலையில் 1937இல் தந்தை பெரியார் ஈரோட்டிலிருந்து காலணா விலையில் விடுதலை ஏட்டை வெளியிட்டார். அது முதல் எழுத்துச் சீர்திருத்தத்துடன் அதாவது விடுத விடுதலையாக மாறிற்று.
விடுதலை ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரைக்காக விடுதலை வெளியீட்டாளர் ஈ..வெ. கிருஷ்ணசாமி அவர்களுக்கும், அதன் ஆசிரியர் பண்டித முத்துசாமி பிள்ளைக்கும் (ராஜாஜியின் அரசு வழக்கு தொடர்ந்து) ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிற சூழலில் பொன்னம்பலனார் அதன் ஆசிரியராக பொறுப் பேற்கிறார்.
இப்படி விடுதலை தொடங்கியபோதே பல அடக்குமுறைகளுக்கு ஆளாகினாலும் எப்பாடுபட் டாவது விடுதலையை நிறுத்தாமல் நடத்த வேண்டும் என்ற போர்க் குணத்தோடு தந்தை பெரியார் அவர்கள் இருந்த காரணத்தால் தான் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலை ஏடு 88 ஆண்டுகளாக தம் எதிர்நீச்சல் பணியில் வென்று வருகிறது. குலக்கல்வி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பிராமணாள் பெயர் நீக்கம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், பெண்களுக்கான கல்வி- சொத்துரிமை, 69 சதவிகித இட ஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு எதிர்ப்பு, மதச்சார்பின்மை, அறி வியல் மனப்பான்மை வளர்ப்பு என விடுதலை கண்ட வெற்றிக்களங்கள் எண்ணிலடங்காதது. அறிஞர் அண்ணாவும் அன்னை மணியம்மையாரும் ஆசிரி யர்களாக இருந்த பெருமையும் பெற்றது விடுதலை ஏடு.
விடுதலையோடு ஆசிரியரின் பயணம்!
1962 இல் தந்தை பெரியார் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியரை விடுதலை ஆசிரியர் நாற்காலியில் தானே கொண்டுபோய் அமர வைத்த போது ஆசிரியருக்கு வயது 29. குத்தூசி குருசாமி போன்ற எழுத்தாற்றல் மிகுந்த ஆசிரியர்கள் தமக்கு முன்னால் அந்த பொறுப்பில் இருந்ததால் சற்றே தயக்கத்தோடு தம் பணியை ஆரம்பித்தாலும், "தந்தை பெரியாரின் கொள்கையை முற்றிலும் உள்வாங்கிய காரணத்தால் எந்த நிலையிலும் அதற்கு முன்பு பலமுறை 'இது என் கருத்தல்ல' என்று பெரியார் குறிப் பிட்டபடி தான் எழுதத் தொடங்கிய பின் அத்தகைய சங்கடம் ஒருபோதும் தனக்கு நிகழ்ந்ததில்லை, மாறாக அய்யா சுற்றுப்பயணங்களில் இருக்கும் பொழுது எந்த செய்தியைப் பற்றி எழுதச் சொல்லி கார்ட் அனுப்புவாரோ அதற்கு முதல் நாளே அதைப் பற்றி நான் எழுதி அது அன்றைய விடுதலையில் வந்திருக்கும். இவையெல்லாம் நான் பெற்ற பேறு!" என்று தன் பயணத்தை பற்றி மகிழ்ந்து சொல்லும் ஆசிரியர் 1963 இல் இருந்து தொடர்ச்சியாக ஒவ் வொரு செப்டம்பர் 17 அன்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் தவறாமல் வெளியிட்டு வருவ தாகவும் தந்தை பெரியார் இருக்கும் வரை அவர் அதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததையும், முதலமைச்சர் ஆக இருந்த அண்ணாவிடம் ‘அந்த வசந்தம்' என்ற வரலாற்று சிறப்புமிக்க கட்டுரையை பெற்று வெளியிட்ட அனுபவங்களையும் தன் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளாக பதிவு செய்கிறார் தமிழர் தலைவர்.
தாம் தொடர்ந்த விடுதலை ஆசிரியர் பணியில் நான்கு பக்கமாக இருந்த விடுதலையை வண்ணங் களோடு எட்டு பக்கமாக மாற்றினார். திருச்சியிலே மற்றொரு பதிப்பை ஏற்படுத்தினார். விடுதலையில் ஆசிரியர் என்ன அறிக்கை கொடுக்கிறார் என்பதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் படி ஒவ்வொன் றையும் விழிப்புடன் நோக்கி அலசி ஆராய்ந்து தெளிவுற மக்களுக்கு மட்டுமின்றி அரசியல் கட்சியினருக்கும் ஒரு மிகச்சிறந்த 'கைடு' என்பதைப் போல ஆசிரியரின் அறிக்கைகள் நாளும் வெளி வருகிறது என்றால் அவர் உழைப்பு மிகையானது. அஃதுடன் பல்வேறு பணிகளுக்கு இடையிலும் ஆயிரத்திற்கும் மேல் வாழ்வியல் கட்டுரைகளை மிகச் சிறப்பாக தொகுத்து அளித்து விடுதலையில் வெளியிட்டு பலரையும் ஈர்த்தவர் ஆசிரியர் அவர்கள். கரோனா காலங்களிலும் தம் இல்லத்தையே அலுவலகமாக்கிக் கொண்டு விடுதலை ஏட்டை பி.டி.எப் வடிவில் பல்லாயிரம் பேரைச் சென்றடைய வைத்தவர் ஆசிரியர். உலகிலேயே இது போன்ற தொரு பகுத்தறிவு நாளேடு இல்லை எனும் பெருமை பெற்ற ஒரு நாளோட்டின் வரலாற்றில் ஏறக்குறைய முக்கால் பாகம் இணைந்து பயணிக்கும் பெரும் பெருமை தமிழர் தலைவருக்கு மட்டுமே உண்டு!
விடுதலையைப் போல் வேறு ஏடு ஏது?
இன்றைய காலகட்டத்தில் அரசியல், பொழுது போக்கு, விளையாட்டு என பல்வேறு செய்திகளைத் தாங்கி பன்னூறு ஏடுகள் வெளிவந்தாலும், ஆதாயம் பார்க்காமல் எது உண்மை எது பொய் என்று அடித்துச் சொல்லவும், எளியவர் எவரொருவர் ஒடுக்கப்பட் டாலும் உரக்க போர்க்குரல் எழுப்பவும், பாலியல் நீதி பேசவும், கடவுள், மதம், ஜாதி, என்ற பெயரால் மனிதர்களை முட்டாள்களாக்கி மூடத்தனங்களை அவர்களுக்குள் புகுத்தி அவர்களை பிளவுபடுத்த வுமான சூழ்ச்சியை எதிர்த்துப் போராடவும் விடுதலையை விட்டால் வேறு ஏது?
அறிவுக்கு சற்றும் பொருந்தாத கட்டுக் கதைகளை ஆன்மீக சிறப்பிதழ் என்று வெளியிடுவதும், ஜோசியம், ஜாதகம் என்று பக்கம் பக்கமாக வெளியிட்டு மக்களை மடையர் களாகவே வைத்திருப்பதும், ராசி பலன் வெளியிட்டு அவர்களின் தன்னம் பிக்கையை உருக்குலைப்பதும், மக்கள் விருப்பம் என்று சொல்லி அசிங்கம் ஆபாசம் எதை வேண்டுமானாலும் பத்திரிகைகளில் நிறைத்து பணம் காசு பார்க்கலாம் என்று நினைக்கிற ஒரு நாட்டில் எந்த விளம்பரமும் இல்லாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முற்றிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு போராட்டம்- பிரச்சாரம் என்று ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது ஓர் இதழ் என்றால் அதன் பணி சாதாரணமானது அல்ல.
அறிவுக்கு விடுதலை தர ‘விடுதலை'யை கொண்டு சேர்ப்போம்
இலட்சங்களுக்காக எல்லோரும் பத்திரிகை தொழில் செய்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் அனைத்தும் என்ற இலட்சியத்திற்காக பீடு நடை போடுகிற ஒரு ஏடு விடுதலை என்பதால் பொருள் ஈட்டுதலைப் பற்றி அக்கறை கொள்ளாமல் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படாமல் மக்களின் எண்ண ஓட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த அயராது உழைக்கிறது.
அன்றன்று புரட்டிப் பார்த்துவிட்டு தூக்கி எறியும் வெறும் செய்தி ஏடு அல்ல நம் விடுதலை. பல ஆண்டுகள் கழித்துப் பிரித்தாலும் நம் இன வரலாற்றை விளக்கும் ஒரு வரலாற்றுச்செப்பேடு!
பெரியாரின் பொன்மொழிகள், ஆசிரியரின் அறிக்கை, செய்தியும் சிந்தனையும், தலையங்கப் பகுதி, வாழ்வியல் சிந்தனைகள், பொதுக்கூட்ட மேடைகளில் தலைவரின் பேச்சு, கழகக் களங்கள், உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள், ஆர்ப்பாட்டங்கள் தெருமுனைக் கூட்டங்கள், மகளிர் அரங்கம், மருத்துவப் பகுதி என பயனுள்ள செய்திகள் மட்டுமே வடிகட்டப்பட்டு முற்றிலும் ஒரு கருத்திதழாக நம் விடுதலை ஏடு வெளியாகிறது.
உங்களோடு பணியாற்றுவதே எங்களுக்கு வரலாற்றுப் பெருமை
தமிழர் தலைவர் அவர்கள் ஆசிரியர் பொறுப் பேற்று 60 ஆண்டுகளாக எவ்வித தொய்வுமின்றி விடுதலை வெளிவந்து கொண்டிருக்கிறது. திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அய்யா அவர்கள் பொறுப்பாசிரியராக கழகத் தலைவர் ஆசிரியருக்கு பேருதவி புரிகிறார்.
பெரியார் திடலுடனான என் பயணம் பெற்றோர் (திருமகள் - இறையன்) இருக்கும் பொழுதே தொடங்கினாலும் விடுதலை அலுவலகத்திற்குள் நான் காலடி எடுத்து வைத்தது கடந்த 10 ஆண்டு களாகத் தான். விழுப்புண்களை எல்லாம் தாங்கி வீறு நடைபோடும் விடுதலையின் விழுமியங்களை நான் உள்ளிருந்து அறிந்து கொண்ட போது, விடுதலை அலுவலகத்தில் பணிபுரியும் பெருமை வாய்க்கப் பெற்றேன். நம் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியராக பொறுப்பேற்ற அன்றைய நாள்களில் 1000 சந்தாக்களை சேர்த்து தந்தை பெரியாரை மகிழ்வித்தார். இன்று நம் தோழர்கள் ஆசிரியரின் நெடிய உழைப்பின் நன்றியாகவும் அவர் ஆயுளை நீட்டிப்பதற்காகவும், 60,000 விடுதலை சந்தாக்களை சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று நாள்- பொழுது பாராமல் களத்தில் காரிய மாற்றுகிறார்கள். தலைவரின் ஆயுள் நீட்சியில் பெரு மகிழ்வு கொள்ளும் வேளையில், விடுதலை ஆசிரியராக அவர் பணியாற் றும் பணிக்காலமும் இதன் மூலம் பல்லாண்டுகள் கூடும் என்பது விடுதலை பணிமனையில் இருக்கும் எம் போன்ற அத்துணைத் தோழர்களுக்கும் இனிப்பானதொரு செய்தியாகும். எனவே விடுதலைக் குழுமத்தின் சார்பில் எங்கள் விடுதலை ஆசிரியரை வாழ்க வாழ்க என்று உளமார வாழ்த்துகின்றோம்!


No comments:
Post a Comment