டில்லி ஜவகர்லால் நேரு பல்கலை.யில் தமிழுக்குத் தனித்துறை தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிதியுதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலை.யில் தமிழுக்குத் தனித்துறை தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிதியுதவி

சென்னை,செப்.8- டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகள் மய்யத்தில் தமிழ்ப் பிரிவு, இந்திப் பிரிவு, உருதுப் பிரிவு, இந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னட மொழி இருக்கை, ஒடிய மொழி இருக்கை, வங்க மொழி இருக்கை ஆகிய அமைப்புகளைக் கொண்டு இயங்குகின்றது. பல்கலைக்கழக நல்கைக்குழு வாயிலாக பேராசிரியர் (Professor)  ஒருவரும் தமிழ்நாடு அரசின் நிதி நல்கையின் வாயிலாக உதவிப் பேராசிரியர் (Assistant Professor)ஒருவரும் நியமிக்கப் பெற்று 2007ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என மூவகையாக விரிவுப்படுத்தி டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பிரிவு இனி, தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறையாக இயங்கிட உள்ளது தமிழ்நாடு அரசு. இதற்கென 5 கோடி ரூபாய் நிதி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

உலகெங்கும் தமிழின் ஆய்வுத் தொன்மையை நிலை நாட்டும் ஆராய்ச்சி முயற்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊக்குவித்து வருகிறார். இந்நிலையில் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு இப்பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்தி சிறீ பண்டிட் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் வெளியிட்ட கடிதத்தில் கூறுகையில், “தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தாங்கள் செய்கின்ற மாபெரும் தொண்டாகக் கருதுகிறேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்ற முறை யிலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்ற முறையிலும் முதலமைச்சரின் இந்த முன் னெடுப்பு மிகுந்த பெருமை அளிக்கிறது. பல்கலைக்கழகத் தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியோடு தமிழ் வாழ்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பெரும் துறையாக உருவெடுக்கும் தமிழ் இலக்கி யவியல் துறை வாயிலாக ஒப்பாய்வு, முதுகலை தமிழி லக்கியப் படிப்பு, வல்லுநர்வழி மொழியாக்கம், விருந்து நிலைப் பேராசிரியர்வழி ஆய்வுப் பெருந்திட்டம், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி, தமிழாசிரியர்களுக்கு ஆய்வுப் பயிலரங்கம், அயலகப் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், தரமான நூல்களை வெளியிடுதல், ஜே என் யூ தமிழியல் எனும் பெயரில் 100 பக்க அளவில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு இதழ் வெளியிடுதல் போன்ற பணிகள் மேற் கொள்ளப்படும்.

வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ் துறையாகவும் தமிழாய்வுகளை விரைந்தும் விரிந்தும் செய்யும் பெருமிதமும் தனித்தியங்கும் தன்மையையும் கொண்டு உலக அளவில் கவனம் பெறும் துறையாக தமிழ் இலக்கியவியல் துறை மாறும் எனவும் தமிழ்ச் சான் றோர்களும், தமிழார்வலர்களும் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment