சனாதன தர்மத்தை உடைத்து நொறுக்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

சனாதன தர்மத்தை உடைத்து நொறுக்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி

தொகுப்பு: 

முனைவர் வே.ராஜவேல்

4.9.2022 அன்று திருவாரூரில் திரும்பும் பக்கமெல்லாம் கழகத்தின் இலட்சியக் கொடிகளும், சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டின் விளம்பரப் பதாகைகளும் அனைத்துத் தரப்பு மக்களையும் மாநாட்டிற்கு வருக வருக வருக என அழைப்பு விடுத்து அணிவகுத்து நின்றன. திருவாரூரைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாலை 4 மணியளவில் பலநூறு வாகனங்களில் அய்ந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திராவிட இயக்கக் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த தோழர்கள் பொறுப் பாளர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக திருவாரூர் தெற்கு வீதியில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய மாநாட்டு பந்தலில் குவியத் தொடங்கினர். 

கொள்கை கீதம் வாசித்த இன்னிசை நிகழ்ச்சி

5 மணியளவில் மாநாட்டின் தொடக்கத்தில் திராவிடர் கழக மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன், மன்னார்குடி வழக்குரைஞர் சு.சிங்காரவேலு, திருவாரூர் முனியாண்டி, தஞ்சாவூர் பாவலர் பொன்னரசு, நன்னிலம் ஆறுமுகம், உறந்தை கருங்குயில் கணேசன் ஆகி யோர் திராவிட இயக்க கொள்கை விளக்கப் பாடல்களை பாடி கூடியிருந்த இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் எழுச்சி ஏற்படும் வகையில் கொள்கை கீதமழை பொழிந் தனர். 

90 வயதிலும் இளைஞராய், இளைஞர்களுக்காக எழுச்சி முழக்கமிட, எதிர்கால தலைமுறைக்கு சமதர்ம சமுதாயம் படைத்திட ஏழு மணி அளவில் மேடைக்கு வந்தார் முதல் ஆளாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். அவரைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த ஆளுமைகள் மேடை ஏற மேடை முழுவதும் திராவிட இயக்க சித்தாந்த தலைவர்கள் கூடாரமாய் அந்த மேடை கண்கொள்ளாக் காட்சியாக காண்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந் திருந்தது. மாநாட்டிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று திருவாரூர் மாவட்ட தலைவர் வி.மோகன் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து இந்த மாநாட்டிற்கு முழு ஏற்பாடுகளையும் முன்நின்று செய்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் நகர செயலாளர் வாரை எஸ்.பிரகாஷ் உரையாற்றினார். மேனாள் அமைச்சர் தமிழ்நாடு அரசு தாட்கோ தலைவர் உ மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட செயலா ளர், தமிழ்நாடு அரசு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கவு தமன், திருவாரூரில் இந்த மாநாடு மிக சிறப்பாக நடைபெறு வதற்கு பேருதவியாக இருந்த திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், இந்திய தேசிய காங்கிரஸ் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

எது சனாதன தர்மம்?

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் மு.செந்திலதிபன் "எது சனாதன தர்மம்? தமிழ்நாட்டின் ஆளுநர்பதவியில் உட்கார்ந்து இருக்கும் ரவி சனாதனத்தை போற்றி அகவல் பாடுகிறார். அரசு நிகழ்ச்சி என்றில்லாமல் போகிற இடங்கள் எல்லாம் சனாதன தர்மத்திற்கு வக்காலத்து வாங்குகிறார். இந்தியா முழுவதும் சனாதன தர்மம் என்பது ஒரு பண்பாடு என்று சொல்லுகிறார். நாம் கேட்கிறோம் - இந்த மண்ணில் இருந்து - எது சனாதன தர்மம்?

இந்தியா முழுவதும் ஒரே பண்பாடு என்று சொல்கிறீர் களே, இந்தியா முழுவதும் ஒரே நாடா? ஒருக்காலும் இல்லை. தந்தை பெரியார் இந்த மண்ணில் இருந்து அந்த முழக்கத்தை எழுப்பினார். ஒருபோதும் இந்தியா ஒரே நாடாக இருந்த தில்லை என்று கூறி, எது சனாதனம் - இந்தி சமஸ்கிருதம் அதை திணிப்பதற்கு பெயர்தான் சனாதனம், அரசுப் பள்ளியிலேயே படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது. கொடுத்தால் தகுதி தரம் குறைந்துவிடும் என்று ஒன்றிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது என்றால் -  இதற்குப் பெயர்தான் சனாதன தர்மம், அதை உடைத்து நொறுக்குவதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி, அந்த திராவிட மாடலுக்குள்ளே சுயமரியாதை கோட்பாடு அடங்கி யிருக்கிறது, திராவிட மாடலுக்குள்ளே பொதுவுடைமை சித்தாந்தம் அடங்கியிருக்கிறது, திராவிட சித்தாந்தம் அடங்கியிருக்கிறது, சமூக நீதி அடங்கியிருக்கிறது, அந்த திராவிட மாடல் ஆட்சியை நாம் பாதுகாக்க வேண்டும் என்று உரையாற்றினார்.

சனாதனம் தான் பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறது, அதை வேரோடும் வேரடி மண்ணோடும் அறுப்பதற்காகத்தான் இந்த மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தன்னுடைய உரையில், "சமீப காலமாக மிக வேகமாக வன்முறையை எப்படியும் தூண்ட வேண்டும், கலகத்தை உருவாக்க வேண்டும், கலகத்தின் மூலமாக அரசி யல் ஆதாயம் பெற வேண்டும், என்ற அற்ப புத்தியோடு ஒரு கூட்டம் தொடங்கி இருக்கிறது. சுதந்திர தின விழாவில் 8 கோடி தேசிய கொடியேற்றப்பட்டதாக ஏடுகளில் செய்தி வெளிவந்தது. அதே தேசியக்கொடி பறக்கிற காரில் தான் செருப்பு வீசப்படுகிறது. 

மனுதர்மம் என்ன சொல்லுகிறது என்று சொன்னால் நான்கு வர்ணங்களாக பிரிக்கிறது. அந்த நான்கு வர்ணக் கொள்கை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான் மனுதர்மம், அதுதான் சனாதன தர்மம்.

ரவீன்னு ஒருத்தர் தமிழ்நாட்டில் இருக்கிறார் அவர் ஆளுநர் என்ற தகுதியோடு செயல்படவில்லை - அவர் பிஜேபியின் பிரச்சாரகராக செயல்படுகிறார், சனாதனம் தான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது என்று சொல்லு கிறார். சனாதனம் தான் பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறது. மக்களை மொழியால் பிளவுபடுத்துகிறது, ஜாதியால் பிளவு படுத்துகிறது. இன்னும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமை, இளம் பெண்களுக்கு எதிரான கொடுமை. இத்தனை கொடு மைகளுக்கும் காரணமாக இருப்பது சனாதனம். அந்த சனா தனத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அறுப்பதற்கு பொருத்தமான இடம் தான் இந்த திருவாரூர் மாநாடு. இந்த மாநாட்டில் ஒலிக்கின்ற முழக்கம் தமிழ்நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும் அதற்காக இணைந்து செயல்படுவோம் என்று கூறி உரையாற்றினார்.

இந்தியாவை பிரிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிற கூட்டம் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்று கையில் "திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டிலே நடந்து கொண்டிருக்கிறது, காங்கிரசை கேட்டால் அவர்கள் காங்கிரஸ் மாடல் என்று சொல்லுவார்கள், இடதுசாரிகளான எங்களுக்கு இடதுசாரி மாடல் இருக்கிறது, நான் ஆர்.எஸ்.எஸ்.அய் பார்த்து கேட்கிறேன். பிஜேபியை பார்த்து கேட்கிறேன். உங்கள் மாடல் என்ன? குண்டு வெடிக்கிற மாடல் தானே, உங்களு டைய மாடல் இந்த நாட்டிலே வன்முறையை வெடிக்கிற மாடல் தானே, உங்களுடைய மாடல் நல்ல சிந்தனையா ளர்களை தேச பக்தர்களை இந்த நாட்டு விடுதலைக்காக அர்ப்பணித்த அவ்வளவு பேரையும் கொன்று குவித்த மாடல் தானே? உங்களுடைய மாடல், வேறு என்ன மாடல் உங்களுடைய மாடல், வேறு எதை நோக்கி நீங்கள் செல்லுகிறீர்கள். 

ஒரு காலத்தில் தந்தை பெரியாரை பார்த்து இவர்கள் சொன்னார்கள் - அவர் பிரிவினைவாதி என்று. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களை பிரிவினைவாதி என்று சொல்லுவதுதான் அவர்கள் வழக்கம்.

இங்கே நான் பகிரங்கமாக சொல்லுகிறேன் இந்தியாவை பிரிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிற கூட்டம் தான் பிரிவினைவாதிகள், அவர்கள் யாரென்று சொன்னால் ஆர்எஸ்எஸ், பிஜேபி என்கிற அந்த மதவெறி கூட்டம் தான் இந்தியாவை பிரிக்கத் துடிக்கிறது. ஏனென்றால் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணித்தால், ஒரே மொழியை திணித்தால், ஒரே பண்பாட்டை திணித்தால், இந்தியா என்கிற ஒற்றுமை இருக்குமா? மலர் மாலை போல அழகாக தொடுக்கப்பட்டு இருக்கிற இந்திய தேசம் குரங்கு கையிலே மாட்டிய பூ மாலை போல சிதறடிக்கப்படாதா? ஆகவே தான் இது அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படுகிற நிகழ்ச்சி அல்ல, இந்த தேசம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும். என்று எழுச்சியுரையாற்றினார்.

பெரியாருடைய பெயரை, அண்ணாவின் பெயரை, பெருந்தலைவர் காமராஜர் பெயரை கலைஞருடைய பெயரை உச்சரித்தால் மட்டும் தான் தமிழ்நாட்டுக்குள்ளே நுழைய முடியும்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றும்போது "இந்த மாநாட்டை பார்த்த பிறகாவது சனாதானத்திற்கு சாமரம் வீசுபவர்கள் கொஞ்சம் பார்த்துப் பேச வேண்டும். ஏனென்றால், இந்த மேடையில் இருக்கிறவர்கள் எல்லாம் யார் யார் என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலிலே புதிதாக ஒரு குட்டி வந்திருக்கிறது ஆனால் அந்த குட்டி அதிகமாக பேசுகிறது. அந்த குட்டியை போன்று பல குட்டிகளை பார்த்து பழக்கப்பட்ட இயக்கம் இந்த இயக்கம், எங்களை எதிர்த்தவன் எல்லாம் காணாமல் போய் இருக்கிறான். இது வரலாறு என்பதை மறந்து விடக்கூடாது. வடநாட்டிலே நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் பெரியாரும், அண்ணாவும் கலைஞரும் பெருந் தலைவர் காமராஜரும் உலாவிய இந்த மண்ணிலே நிச்சய மாக உங்கள் சாயம் எடுபடாது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கிற அண்ணாமலைக்கு சொல்லுகிறேன். நீ அய்பிஎஸ் ஆனாய் என்று சொன்னால் அது திராவிட இயக்கத்தால் பெரியாரும் அண்ணாவும் இந்த மண்ணிலே பெற்றுக் கொடுத்த உரிமை என்பதை நீ மறந்து விடக்கூடாது. கல்வி உரிமைக்காக, இடஒதுக்கீடை அமல்படுத்த இந்தியா வினுடைய அரசமைப்புச் சட்டத்தில் முதல் சட்ட திருத் தத்தை கொண்டு வந்த மண் இந்த தமிழ் மண். அதற்கு பெரியாரும் அண்ணாவும் காமராஜரும் காரணம். அந்த உரிமை அன்றைக்கு பறிபோய் இருந்தால் இன்றைக்கு அண்ணாமலை ஆடு, மாடு தான் மேய்த்திருக்க வேண்டும். நான் ஆசிரியரை பார்த்து கேட்க விரும்புவது ஒன்றுதான் நீங்கள் கிளம்பி விட்டீர்கள் என்றால், இந்த கூட்டம் உங்கள் பின்னாலே தொடரும் என்றால், தமிழ்நாட்டில் வேறு எவனும் கால் ஊன்ற முடியாது. பெரியாருடைய பெயரை, அண்ணாவின் பெயரை, பெருந்தலைவர் காமராஜர் பெயரை கலைஞருடைய பெயரை உச்சரித்தால் மட்டும் தான் தமிழ்நாட்டுக்குள்ளே நுழைய முடியும் இல்லை யென்றால் பாஸ்போர்ட் வாங்கிக் கொண்டுதான் வரவேண் டும் - அந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிடும், அந்த அளவிற்கு அக்கிரமம் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. மோடி செய்கிற வேலைகள் நீதிமன்றத்தின் வாயிலாக ஒன்றன் பின் ஒன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது.

இந்த மாநாடு போல தமிழ்நாடு பூராவும் நடத்தி இளை ஞர்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறி உரையாற்றினார்.

ஜனநாயக மாடல் தான் திராவிட மாடல் - அது சமூக நீதியை தரும் - பெண் விடுதலையைத் தரும்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் தன்னுடைய உரையில் "சனாதன சக்திகளை விரட்டி அடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் முன்னால் ஒரு சவாலாக கிடைக்கிறது. எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தளபதிகளுக்கும் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தளபதிகளுக்கும் உண்டு என்பதற்கு இந்த மாநாடு ஒரு சான்று. இந்த மாநாட்டு பந்தலும் இந்த மாநாட்டு எழுச்சியும், சனாதன சக்திகளுக்கு மிகப்பெரும் அச்சத்தை நடுக்கத்தை ஏற்படுத்தும் - அவர்கள் ஆயிரம் இரண்டாயிரம் பேரை திரட்டி இதே இடத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி ஏதோ சாதித்து விட்டதைப் போன்ற ஒரு இறுமாப்பில் இருக்கிறார் கள். பெரியார் அண்ணா ஆகியோரின் சிந்தனைகளால் ஒரு போராளியாக உருவெடுத்து, இந்த தெற்கு வீதியில் நின்று தான் இந்திக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார், அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அய்ந்து முறை ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். 50 ஆண்டு காலம் தமிழ்நாடு அரசியலில் தலைப்புச் செய்தியாக, தமிழ்நாடு அரசியலில் அச்சாணியாக விளங்கினார். 13 வயதில் இப்படி ஒரு நிலையை எட்டுவோம் என்கிற எண்ணம் அவருக்கு இருந்திருக்காது. இன்றைக்கு தமிழ்நாடு கண்டு இருக்கிற அத்தனை மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் காரணம் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. அவருடைய பெயரை இந்த தெற்கு வீதிக்கு சூட்டியது தவறு என்று ஒரு கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்தியதே அந்த கும்பல் தான் சனாதனக் கும்பல், அந்த சக்திகள் தான் சனாதன சக்திகள், அந்த சனாதனக் கும்பல் தான் தமிழ்நாட்டை குறி வைத்து இருக்கிறார்கள் திராவிட இயக்க அரசியலை தூக்கி எறிவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். இந்த தெற்குவீதிக்கு கலைஞரின் பெயரை வைக்க வேண்டும் என்று திருவாரூர் நகர மன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அண்ணன் தளபதி அவர்களே எதற்கும் தயக்கம் வேண்டாம் எடுக்கிற முடிவின்படி முன்னேறிச் செல்லுங்கள் வேகமாகச் செல்லுங்கள் என்று ஊக்கமூட்டுவதற்காக தான் தமிழர் தலைவர் ஆசிரியர் இங்கு எங்களையெல்லாம் அழைத்து இருக்கிறார். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். திருவாரூர் தெற்கு வீதி இனி முத்தமிழறிஞர் கலைஞர் வீதி என்று அழைக்கப்படும். ஆரிய மாடல் என்பது வர்ணாசிரமம், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற வர்ணங் களால் இங்கே மனித குலத்தை பிரித்து வைப்பதுதான் சனாதனம். ஜனநாயக மாடல் தான் திராவிட மாடல் அது சமூக நீதியை தரும், பெண் விடுதலையை தரும், சனாதன சக்திகளை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் விரட்டி அடிக்கிற பொறுப்பு நமக்கு இருக்கிறது. தளபதி அவர்களின் தலைமையில் அந்தக் களத்தில் நாம் கைகோர்த்து நிற்போம் சனாதனத்தை வேரறுப்போம் ஜன நாயகத்தை வென்றெடுப்போம் என்று கூறி உரையாற்றினார்.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் இம்மாநாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து இணைப்புரை வழங்கினார். இறுதியாக திருவாரூர் மாவட்ட தி.க.செயலாளர் வீர.கோவிந்தராசு நன்றியுரை கூறினார். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களைச் சார்ந்த பொறுப்பாளர்கள் தோழர்கள் மற்றும் பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment