புதுச்சேரி,செப்.29- புதுச்சேரி மாநிலத் தில் மின்துறை தனியார் மயமாக்கப் படுவதற்கு முன்னோட்டமாக பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட்டிருப்பதால் அம்மாநிலத்தில் மின்துறை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள் ளனர். யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முடிவு செய்து அதற்கான பூர்வாங்க வேலைகளையும் தொடங் கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்துறை தனியார் மயமாக்கும் திட் டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுவையில் தொடர்ந்து போராட்டங்கள் நடை பெற்று வந்தன.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு அமைச்சரவை கூட்டத்தில் மின் துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது தனியார் மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதே அதனை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் கால வரையற்ற வேலைநிறுத்த போராட் டத்தை தொடங்கினர். முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு வார்த்தை நடத்தி வேலைநிறுத்த போராட்டத்தை திரும்பப் பெற செய்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மின்துறை தனியார் மயத்திற் கான ஒப்பந்தம் நேற்று முன்னாள் (27.9.2022) மாலை திடீரென வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'புதுச்சேரி அரசு மின்துறையை ஏலம் எடுக்க ஆர்வ முள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். முன்மொழிவுக்கான கோரிக்கைக்கு ஏலதாரர்கள் 5 லட்சத்து 90 ஆயிரம் செலுத்தவேண்டும். ஏலம் எடுக்கும் நிறுவனத்தின் வங்கி செக்யூரிட்டியாக 27 கோடி வங்கிக் கணக்கில் இருக்க வேண் டும். முன்மொழிவுக்கான கோரிக்கை வருகிற 30ஆம் தேதி தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் மாதம் 25ஆம் தேதி மாலை 4 மணி ஆகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மின்துறை ஊழியர்கள் நேற்று மாலை கூடி ஆலோசனை நடத்தி இதனை எதிர்த்தும், ஒப்பந்தம் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். அதன்படி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் மின்துறை பணிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment