மது போதை: வண்டி ஓட்டினால் 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிடின் வாகனம் பறிமுதல் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

மது போதை: வண்டி ஓட்டினால் 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிடின் வாகனம் பறிமுதல் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை

சென்னை, நவ. 5 புதிய மோட்டார் வாகன சட்டப்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சிக்கும் நபர்கள், அபராத தொகையை 14 நாட்களில் செலுத்தவில்லை என்றால் சம்பந்தப் பட்ட நபரின் வாகனம் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும் என்று வாகன ஓட்டிகளுக்கு மாநகர போக்குவரத்து காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 26ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறுபவர் களிடம் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, குடிபோதையில் வாக னம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அப ராதம், அவருடன் செல்லும் நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ1000மும், அதே விதிமீறலில் 2ஆவது முறை ஈடுபடுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், தலைகவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1000 அப ராதம் என பல்வேறு விதிமீறல்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  புதிய சட்டத்தின்படி, கடந்த வாரம் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 6,187 நபர்களிடம் இருந்து அபராதமாக ரூ.42 லட்சம் வசூலிக்கப் பட்டுள்ளது. பொதுவாக போக்கு வரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டி களுக்கு நிகழ்வு இடத்திலேயே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இ-செலான் மூலம் அபராத தொகைக்கான ரசீதுகள் வழங்குகின்றனர். சிலர் அப் போதே பணத்தை செலுத்துகின்றனர். இன்னும் சிலர், அபராத ரசீதை காவல் துறையினரிடம் பெற்றும் பணத்தை செலுத்துவதில்லை.

இதனால் பல கோடி ரூபாய் அபராத தொகையை வசூலிக்க முடியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்கும் வகையில் சென்னை மாநகர காவல் துறை அபராத தொகையை வசூலிப் பதற்காக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி 12 கால் சென்டர்கள் தொடங்கப்பட்டு அதன் மூலம் அபராத தொகையை செலுத்தாத வாகன ஓட்டிகளுக்கு போன் செய்து நினைவூட்டி அபராதத் தொகையை வசூலித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை அதாவது 6 மாதங்களில் போக்குவரத்து  விதிமுறைகளை மீறி அபராத தொகை செலுத்தாத 9,18,573 வாகன ஓட்டி களிடம் இருந்து, நிலுவையில் இருந்த 23 கோடியே 25 லட்சத்து 10 ஆயிரத்து 581 ரூபாய் அபராத தொகை வசூலித் துள்ளனர். குறிப்பாக, குடிபோதையில் சிக்கும் வாகன ஓட்டிகளில் பெரும் பாலானவர்கள் அபராத தொகையை செலுத்தாமல் காலம் கடத்தி வருகின் றனர். அதற்கு காரணம் அபராதத்  தொகை ரூ.10 ஆயிரம் என்பதால், 12 கால் சென்டர்கள் மூலம் நினை வூட்டினாலும் அவர்கள் இன்று, நாளை என்று காலம் கடத்தி வரு கின்றனர்.எனவே, காவலர்கள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், குடி போதையில் சிக்கியவர்கள் அதை கட்டாமல் காலம் கடத்தி வரும் நபர்களிடம் அபராத தொகையை முழுமையாக வசூலிக்க திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில் வழி வகை உள்ளது.

அதன்படி ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி காவல்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அதற்கான ரசீதை கொடுத்த 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர் இணைய வழியில் அல்லது நீதிமன்றத்தில் அபராத தொகை கட்ட வேண்டும். அப்படி கட்டவில்லை என்றால், வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபரின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அப்போதும் அபராதத் தொகை செலுத்த தவறினால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை நீதிமன்ற உத்தரவுப்படி பொது ஏலம் விடப்பட்டு நிலுவையில் உள்ள அபராதத் தொகை முழுமையாக வசூலிக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நடைமுறை தற்போது சென்னை மாநகர காவல்துறையில் அமல்படுத்தப் பட்டுள்ளது. எனவே, குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராதம் கட்டாமல் ஏமாற்றும் நடைமுறை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.


No comments:

Post a Comment