சென்னை,நவ.5- கொத்தடிமைத் தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், ஆள்கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை, பசுமை வழிச் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் நேற்று (4.11.2022) நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி சா.பாஸ்கரன், செயலாளர் கே.விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் விர்ஸா பெர்கின்ஸ், கார்த்திக் செல்வராஜ், கீதா கோபாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் நீரஜ் மித்தல், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மனித உரிமை ஆணையத்தின் மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் சுனில் குமார், அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் சி.என்.மகேஸ் வரன், சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் எஸ்.வளர்மதி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் வி.ஜெயசிறீ,சமூக ஆர்வலர்கள் என 20-க்கும் மேற்பட்ட பல்வேறு துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இலக்கு நிர்ணயம்: அவர்கள், 2025ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் இல்லா தமிழ்நாடு எனும் இலக்கை எட்டுவது, வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக் கைகள், பாதிக்கப்படும் தொழிலாளர் களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தங்களுடைய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையத் தலைவர் சா.பாஸ்கரன் கூறியதாவது: கொத்தடிமை தொழிலா ளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், ஆள்கடத்தல் தடுப்பு குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் பின்பற்றப்படும் தொழி லாளர் மேம்பாட்டு அம்சங்கள் குறித்து அமெரிக்கதுணை தூதரக அதிகாரிகளுடன் விவாதித்தோம். பாதிப்புக் குள்ளாகும் தொழிலாளர்களுக்கு சிறந்த வகையில் நிவா ரணம் வழங்குதல் குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டது.
கருத்து பரிமாற்ற நிகழ்வு: கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சினைகள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் ஈட்டும் ஊதியத்தை தமிழ்நாட்டிற்கு அனுப்புவதில் உள்ள பிரச்சினைகள் என துறை சார்ந்து இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், அதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினோம். வரும் காலத்திலும் இது போன்ற கருத்து பரிமாற்ற நிகழ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை ஜார்ஜ் டவுன் பகுதி மறுவளர்ச்சி திட்டம்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவிப்பு
சென்னை, நவ.5 தற்போதைய தேவைக்கேற்ப சென்னை ஜார்ஜ் டவுன் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப் படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சென்னையின் முக்கிய மான பகுதியாக ஜார்ஜ் டவுன் இருந்தது. இங்கு பிரமிப் பூட்டும் பாரம்பரிய கட்டடங்கள், அழகிய வடிவமைப்பை கொண்ட தேவாலயங்கள், பழைய எல்.அய்.சி. கட்டடம் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல கட்டிடங்கள், பழைமை வாய்ந்த ஹிந்து கோவில்கள் போன்றவை உள்ளன. இங்குள்ள பழைமையான கட்டடங்கள், தெருக்கள் எந்தவித மாறுதலுக்கும் உட்படுத்தப்படாமல் அப்படியே இருந்து வருகின்றன. தற்போதைய தேவைக்கேற்ப ஜார்ஜ் டவுன் பகுதியை சீரமைக்க ஜார்ஜ் டவுன் மறுவளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான திட்டத்தை தயாரிக்கும் பணியில் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த திட்டம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் ஹிதேஸ்குமார் பேசும் போது, "இந்தியாவில் அமிர்தசரஸ், டில்லி, மும்பை, அலகாபாத் ஆகிய நகரங்களில் சில பகுதிகளில் மறு வளர்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதல் முறையாக ஜார்ஜ் டவுன் பகுதிக்கான மறுவளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் பிறகு புரசைவாக்கம், திருவல்லிக்கேணி போன்ற பழைமையான பகுதிகளிலும், கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் உள்ள பழைமையான பகுதிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.
மழைக்கால நோய்களைத் தடுப்பது எப்படி?
மருத்துவர்கள் விளக்கம்
சென்னை, நவ. 5 சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை யில் மழைக்காலத்தை முன்னிட்டு நோயாளி களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன. சென்னையில் பல இடங்களில் வடகிழக்கு பருவ மழையையொட்டி பொதுமக்களுக்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் மழைக் காலத்தை முன்னிட்டு நோயாளி களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
இது குறித்து மருத்துவமனையின் 'டீன்' டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:- ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தின் நுழைவு வாயிலில் இருந்து புறநோயாளிகள் பிரிவுக்கு, நோயாளிகள் மற்றும் அவர்களது உறவி னர்களை அழைத்துவர 3 பேட்டரி கார்கள் இயக்கப் படுகின்றன. இதன்மூலம் நோயாளிகள் மழையில் இருந்து தங்களை காத்துக்கொள்ளலாம். அதேபோல் புற நோயாளிகள் பிரிவு பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கப் படுகிறது. கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீர் தேங்க கூடிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு, நீர் வடிவதற்குண்டான மோட்டார்கள் பொருத்த தயார் நிலையில் உள்ளது. தேவையான அளவு, மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் மற்றும் களிம்புகள் கையிருப்பில் உள்ளன. பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு, ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தரை தளத்திலேயே தயாராக வைக்கப்பட்டுள்ளன. அத்தியா வசிய தேவையான டீசல் ஜெனரேட்டர்கள், குடிநீர் வசதிகள் போன்றவை தட்டுப்பாடின்றி வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைக்கால முகாம்களும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment