'சாமி' கும்பிடவந்த வந்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
காவல்துறை விசாரணை
சென்னிமலை, நவ.9 சென்னிமலை முருகன் கோவி லுக்கு 'சாமி கும்பிட' என வந்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த நபரை காவல்துறை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு பேருந்து நிலையம் அருகே கோட்டை பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மனைவி அமுதா தேவி (வயது 38). இவரும், இவருடைய சகோதரி ஜெயலட்சுமி என்பவரும் நேற்று (8.11.2022) சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்தார்கள். இருவரும் வழிபாடு செய்துவிட்டு முருகன் கோவிலுக்கு பின்புறம் உள்ள சித்தர் கோவிலுக்குச் சென்றனர். அங்கும் வழிபாடு செய்து விட்டு பகல் 1 மணியளவில் படிக்கட்டுகள் வழியாக நடந்து வந்துகொண்டு இருந்தார்கள். அப்போது திடீரென பின்னால் வந்த நபர் ஒருவர் அமுதா தேவியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா தேவியும், ஜெயலட்சுமியும் திருடன்.. திருடன் என சத்தம் போட்டார்கள். ஆனால் அதற்குள் அந்த நபர் அமுதா தேவியின் கழுத்தில் இருந்த நகையை பறித்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டார்.
இதுகுறித்து அமுதா தேவி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் பெருந்துறை உதவி காவல்துறை கண்காணிப்பாளர் கவுதம் கோயல், சென்னிமலை காவல்துறையினர் ஆய்வாளர் சரவணன் மற்றும் 15-க்கும் மேற்பட்ட காவல்துறை மலைமேல் உள்ள முருகன் கோவில் வனப்பகுதிக்குச் சென்று நிகழ்வு நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். கோவிலுக்கு 'சாமி தரிசனம்' செய்ய வந்த பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற நிகழ்வானது சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment