மணக்கும் இனிக்கும் மலர் தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

மணக்கும் இனிக்கும் மலர் தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்

 முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

மலர் வெளியிட்டவருக்கு மலர்

 முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆம் ஆண்டுப் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ‘விடுதலை மலரி’னை மணக்கும் வகையில் இனிக்கும் வகையில், மலரைக் கையிலெடுத்தோர் படித்து முடிக்காமல் கீழே வைத்திட இயலாச் சிறப்புடைய வரலாற்றுப் பதிவு, வரலாற்று ஆவணம் இது.

90 ஆண்டுகள் நடந்து வந்த பாதை - இந்தச் சமுதாயம் உயர, தழைக்க, பண்பட இந்த மாமனிதர் என்ன செய்துவிட்டார் என வெளிச்சமிடும் மலர் இது.

இதில் முதலாவது சிறப்பு, 60 அகவை, 75 அகவை, 80 அகவை எய்தியபோதெல்லாம் இதுபோன்ற முயற்சிகளுக்குத் தப்பித்து மறைந்து விடுவார்.அவர் சாதனை எதையேனும் பதிந்திட முயன்று விடுதலை யில் கட்டுரை தீட்டினால், செல்லமாகக் கூட அல்ல, கோபித்து - தொடரும் என்று போட்டதை நிறுத்தி ‘நான் ஆசிரியராக இருக்கும் ஏட்டில் என்னைப் புகழ்ந்து எழுதுவது சரியல்ல’ என்று கேட்டதும் உண்டு.

இந்தத் தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியராக விளங்கிய அறுபது ஆண்டுகளில் தம் வாழ்நாள் 90 அண்டுகளில், மூன்றில் இரண்டு பங்கு விடுதலை ஆசிரியர் - உலகில் எவரும் பெற்றிடாத சிறப்புப் பெற்ற தலைவர் செய்திட்ட சாதனைகளில் தலையாய சாதனை தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலேயே 1962இல் தந்தை பெரியாருக்கு முதல் மலர் வெளியிட்டு சாதனை புரிந்தார்,.

1962 முதல் இன்று 2022ஆம் ஆண்டுவரை ஒவ்வோர் ஆண்டும் 60 ஆண்டுகளாக விடாமல் தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் மட்டுமல்லாமல் தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாருக்கு நூற்றாண்டு மலர் உள்ளிட்ட மலர் வெளியிட்டுப் பெருமை சேர்த்தார் தமிழர் தலைவர்.

அத்தகையவரான இன்று வாழும் திராவிட இயக்க மூத்த தலைவர் தம் பிறந்த நாள்களைக் கொண் டாடாமல் தவிர்த்து வந்தார். 1992ஆம் ஆண்டு 60ஆம் அகவை. 2007இல் 75ஆம் அகவை, 80ஆம் அகவை 2012இல் இந்த ஆண்டுகளில் நியாயமாகப் பார்த்தால் 60, 75, 80 என்று மலர் வெளியிட்டு இருக்க வேண்டும். பல்லாண்டுக்காலம் பிறந்த நாள் கொண்டாடாது தலைமறைவானார். 75ஆம் ஆண்டுப் பிறந்த நாளில் தலைவர் கலைஞரின் அன்புப் பிடியில் சிக்கி வள்ளுவர் கோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்குத் தலைமை தாங்கினார் கலைஞர்.

அதன் பின் 80ஆம் அகவை தஞ்சைத் தரணியில் சீரோடும் சிறப்போடும் தளபதி கலந்துகொள்ள நடைபெற்றது. பத்து ஆண்டுகள் உருண்டு விட்டன. இன்று 90ஆம் அகவை என்பது மட்டுமல்ல திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களான தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியப் பெருமகனார் இல்லாத நிலையில் தமிழர் தலைவர் ஆசிரியரே திராவிட இன மக்களின் வழிகாட்டி, நெறி யாளர். தாய்க் கழகத்தின் தலைவர். எனவே, அவரு டைய 90 அகவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.

இதில் தமிழர் தலைவரை உடன்பட வைக்க ஒப்புக் கொள்ள வைக்கக் கண்டுபிடித்த வழி, தமிழர் தலை வருக்குப் பிடித்தமான ஒன்று - விடுதலை சந்தா 60,000 திரட்டி அளிப்பது.

இயக்கத் தோழர்கள் பம்பரமாகச் சுழன்று முதல் தவணை வழங்கிய கையோடு இரண்டாம் தவணையும் தொடர்ந்தனர் - தொடங்கினர். 

டிசம்பர்-2இல் பாராட்டத்தக்க முயற்சியாக ‘விடுதலை’ தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் எனும் அழகிய கருத்தாழ மான வித்தியாசமான ஒளிப்படங்களுடனான மலரைக் கொண்டு வந்திருப்பதை எவ்வளவு பாராட் டினாலும், எத்தனை எத்தனை அழகுமிக்க ஒளிப் படங்கள். இது கருத்துப் பெட்டகம், கொள்கை விளக்க ஏடு மட்டுமல்ல ஒளிப்பட ஆவணத் தொகுப்பு.

மலரின் முதல் பக்கம் பார்க்கிறோம். அதில் தமிழர் தலைவரின் சூளுரை - ஒரு கொள்கை மாவீரரின் 40 ஆண்டுகளுக்கு முன்னான உறுதிமொழி இது. தலைப்பு ‘இறுதி மூச்சு அடங்கும் வரை’.

“நான் உங்கள் நம்பிக்கையின் அளவுக்கு ஏற்ப ஆற்றலோடு பாடுபட முடியுமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். என் இறுதி மூச்சு நிற்கும் வரையில் எந்தக் கொள்கை இந்த நாட்டில் நிலை பெற வேண்டும் என்று விரும்பினீர்களோ, எந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்று என்னை ஊக்கப்படுத் தினீர்களோ, அய்யாவின் பணி அகிலம் எல்லாம் தொடர வேண் டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அதற்கு எந்நாளும் துரோகம் செய்யாத நிலையில், என் இறுதி மூச்சு அடங்கும் வரையில் தமிழ்ச் சமுதாய அடிமையாக சொல்லடிமையாகாத, தமிழ்ச் சமுதாய எசமானன் என்ற நிலையில் உண் மையான பணியாளனாக தொண்டாற்றுவேன் என்று மட்டும் உறுதியாகக் கூறிக் கொள் வேன்.”

(கடலூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக் கூட்டத்தில் ஆசிரியர் ஆற்றிய உரையிலிருந்து ‘விடுதலை’22.11.1981)

தந்தை பெரியார்

அவர் விடுதலை ஆசிரியராக எவ்விதக் கட்டுப் பாடும் விதிக்காது பணியாற்ற வந்த போது தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையினைப் பலமுறை படித்திருக்கிறோம்.

அவர் பொறுப்பேற்ற ஆறு ஆண்டுகளுக் குப் பின் தந்தை பெரியார் ஆசிரியர் அவர் களுக்கு விடுதலை அலுவலகப் பணியா ளர்கள் சார்பில் அளிக்கப்பெற்ற தேநீர் விருந்தில், ஆறு ஆண்டுக் காலப் பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்றியதற்குச் சான்றிதழ் போலக் கூறியுள்ளார்.

“இது ஒரு பொதுத் தொண்டு, செய்ய வேண்டிய தொண்டு என்பதால் செய்கிறோம். இதில் ஆசிரியராக இருக்கிறவருக்குச் சம்பளமில்லை. மற்றபடி எந்த வசதியும் அவருக்கில்லை. வேற இடமாகஇருந்தால் எவ்வளவோ வசதிகள் இருக்கும்.” நல்ல கல்வி அறிவுள்ளவர். தொழில் ஆற்றலுள்ளவர். பொறுப் பானவர். அவர் நினைத்திருந்தால் - ஆசைப்பட்டிருந் தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய்திருந்தாலும் நல்ல அளவுக்குப் பணம் சம்பாதித்திருப்பார். இதையெல்லாம் விட்டுப் பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக் கூடாது. பொது மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமென்கிற தன்னலமற்ற தன்மைக்காகவும் நிறையப் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.”

நாவலர்

‘திராவிட இயக்க வரலாறு’ படைத்த நாவலர் நெடுஞ்செழியன் அந்த நூல் வெளியீட்டு விழாவில் தாம் எழுதிய நூலை வெளியிட ஆசிரியரையே ஏற்பாடு செய்ததோடு அவர் உரையில் கண்டவற்றில் ஒரு பகுதி முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆசிரியர் யார்? என எடுத்துக்காட்டுவதாக அமையும். 

“எட்டு வயதிலிருந்து வீரமணி அவர்கள் மிகத் தெளிவாக எதைப் பற்றியும் கருத்துகளை எடுத்துச் சொல்கிற அளவுக்கு ஆர்வத்தோடு, எழுச்சியோடு இருந்த அருமை நண்பர் வீரமணி அவர்களோடு 52 ஆண்டுக்காலம் பழகியதுடைய அடிப்படையில் இந்த நூலை வெளியிடுவதற்கு ஏற்றவர் அவர்தான் என்று முடிவு செய்தேன்’’ என்று கூறியுள்ளதைக் காண்கிறோம்.

அய்யாவின் அடிச்சுவட்டில்..

இத்தலைப்பில் இரண்டு படங்கள் - இப்படங்களைப் பார்க் கையில் இன்றைய ‘முடி’ இல்லா ஆசிரியரையும் அன்றைய நாளில் அய்யாவின் காலடியில் அமர்ந்த சிறுவனையும், கரம் பற்றி நின்றதெல்லாம் அவர் கொள்கை எனப் பால்வடியும் முகமும், மீசை முளைக்காத உதடு களும், கருப்புச் சால்வை,கையில் ஏடுகொண்டு சுருட்டை முடியுடன் இருக்கும் படம் பார்த்துக் கொண்டே இருக்க வைக்கிறது. அடுத்த பக்கம் திருப்பவே மனமில்லாமல் நம் மனம் ஆழ்கிறது. இப்படிப் படத்தைத் திரட்டி வெளியிட்டிருப்பதைப் பாராட்ட வேண்டும்.

அன்றைய இளைஞர் தாம் இன்று முதுபெரும் தலைவராகத் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இந்த வயதிலும் விடுத்த பிறந்த நாள் செய்தி இளம் இதயங்களில் புது ரத்தம் பாய்ச்சும். ஒரு சமூகநீதிப் போருக்கு அணிவகுக்கும்.

ஆசிரியரின் பிறந்த நாள் செய்தி

“பறிக்கப்படும் உரிமைகளை மீட்டெடுக்கும் பணிக்கு - இளைஞர்களே சுடர் ஏந்த வாருங்கள்!

மகளிரே உங்கள் பங்களிப்பும்தேவை!!

நாடு தழுவிய சமூநீதிப் போராட்டப் பரப்புரை - 2023இல் பெரும் மக்கள் தொடர் போராட்டம்!”

அதில் இது ஆசிரியரின் வாக்குமூலம்

‘சுமைதாங்கியாக இருப்பதில் சுகம் காண்கிறேன்’ என்று கூறும் அவர் கூற்று, “கழகத்திற்கு 10 வயதுச் சிறுவனாக என் ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள் அழைத்து வந்து ஈடுபடுத்திய தொடக்க காலம் தொட்டு இன்று தொண்ணூறு அகவையைத் தொடும் காலம் வரை அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் என் மீது பொழிந்த நம்பிக்கை மழை எப்படியோ தொடர் மழையாக அமைந்ததினால் எனது பொறுப்பும் கடமையாற்றும் உணர்வும் எப்போ தும் இல்லாத மகிழ்ச்சியுடன் பிறருக்கு உதவுவதில் சுமை தாங்கியாக இருப்பதில் சுகம் காண்கிறேன். இன்றுவரை எனக்குச் சலிப்போ ஏமாற்றமோ எதிலும் எற்பட்டதே இல்லை

‘சலிப்பு’ ஏன் ஏற்படப் போகின்றது - விருப்பத்துடன் ஏற்ற பொறுப்பை மகிழ்ச்சியுடன் செய்யும்போது?

எனக்கு ஏமாற்றம் எற்பட்டதே இல்லை. காரணம், எதிர்பார்ப்பவர்களுக்குத் தானே ஏமாற்றம் ஏற்படும் - அது கிடைக்காவிட்டால்.

எனக்குப் பல பொறுப்புகளைத் தந்தை பெரியார் வழங்கி அறிவித்தபோது எனது இசைவினைக் கூட அவர் கேட்டதில்லை. அந்த அளவிற்கு என்னிடம் வேலை வாங்குவதை அவர் ஓர் உரிமையாகவே கருதினார் போலும். எனவே, அவற்றை நான் கட்டளையாகவே கருதிச் செயல்பட்டு வந்தேன் - வருகிறேன் - இனியும் வருவேன் என்ற உறுதியை என சக தோழர்களுக்கு என் மக்களுக்குப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”

90 வயதில் இளமையா?

90 அகவை எய்தியவர் இன்றும் இளமையோடு இருக்கும் இரகசியத்தையும் வெளிப்படுத்தி விடுகிறார் இந்தப் பிறந்த நாள் செய்தியாக இவ்வாறு:

“அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தலைமை யில் விட்ட பணி முடிக்க எடுத்துக்கொண்ட உறுதியை நீர்மேல் எழுத்தாக்காமல் ‘நிறை கல்வெட்டாக ஆக்கி மூச்சு நிற்கும் வரை பணி செய்து ஏற்ற கடமைக்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்ற உறுதி என்னை எப்பொழுதும் இளமையாகவே வைத் துள்ளது. வளமையை விரும்பி இந்தப் பொதுத் தொண்டுக்கு வரவில்லை. கொள்கை பரப்புதல் என்ற பணியில் கிட்டும் இளமையை, இனிமையை எண்ணியே இன்றும் உழைத்து மகிழ்ச்சியை வற்றாது சுரக்கும் வாய்ப்பாக உருவாக்கிக் கொள்கிறேன்.”

பிறந்த நாள் செய்தி தொடர்கிறது. மேலும் தெரிந்து கொள்ள, அதன் சுவை உணர மலரை வாங்கிப் படித்தல் நல்லது.

கவிஞரின் தனி முத்திரைகள்

ஆண்டுதோறும் வெளிவரும் தந்தை பெரியார் மலரில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞரின் தனி முத்திரை இருக்கும். ஆண்டுதோறும் வெளிவரும் அய்யா மலருக்கு என ஆண்டு முழுவதும் சிந்தித்துக் கொண்டிருப்பாரோ என எண்ணத் தோன்றுமாறு புதிய கோட்பாடு தலை தூக்கி இருக்கும், கடும் உழைப்பின் வெளிப்பாடு இருக்கும்.

(தொடரும்)


No comments:

Post a Comment